சுடச்சுட

  

  பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள்

  By த. பார்த்திபன்  |   Published on : 21st May 2018 12:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  குறிப்பு

  நடுகல் மரபில், நாட்டார் தெய்வ மரபுகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முதல் ஆய்வு இது. தகடூர்ப் பகுதியில் நான் அறிந்த இவ்வகையான நடுகல் வடிவமெடுத்த நாட்டார் தெய்வங்கள் குறித்து தனியாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஈரோடு மாவட்டம், பர்கூர் - நெல்லூர்ப் பகுதியில் இருக்கும் இத்தெய்வங்கள் முந்திக்கொண்டனர். நடுகல் மரபே நாட்டார் மரபுதானே, அது என்ன தனிதாக்கம் என்று கேள்விகள் எழலாம். இது குறித்து, கட்டுரையின் பகுதியாக சில செய்திகளை விளக்கியுள்ளேன். ‘‘நடுகல் மரபும் நடுகல்மரபில் நாட்டர் தெய்வ மரபும்’’ என்று அடுத்து எழுத இருக்கும் கட்டுரை, இவ்விரண்டின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக அமையும். 

  *

  அண்மையில், முகநூலில் கவனம் பெற்று பலவிதமான கருத்துகளை எழுதச் செய்த ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் நெல்லூரில் உள்ள நடுகல் இது. இதனைப் பதிவேற்றியவர், பழங்குடிமகன் என்ற மீனாட்சிசுந்தரம் குறும்பன். 

  (நெல்லூர் முதல் நடுகல்)

  இந்நடுகல்லில், கல்வெட்டுப் பொறிப்பு இல்லை என்பதால், இக்கல் எழுப்பப்பட்டதற்கான காரணங்களை நேரடியாக அறியமுடியாது உள்ளது. இதன் காரணமாக, இந்நடுகல் பற்றி எழுந்த கருத்துப் பதிவுகள் பெரும்பாலும் தவறான புரிதலுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. உதாரணமாக, 

  •    போர் அல்லது பூசலில் ஆண்-பெண் இருவரும் ஒரே வாளால் வீழ்த்தப்படும் காட்சி.

  •    இறந்தவர்கள், தேவகன்னியரால் தேவலோகம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. 

  •    இறந்தவர்கள், ஐந்து தேவலோகப் பெண்களால் சுவர்க்கம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. 

  •    தூக்குதலை, அரிகண்டம், நவகண்டம் போன்ற தலைப்பலிக்கல் வகையில் ஒன்று. 

  •    சிடிகல் வகை தலைப்பலிக்கல். 

  •    போரில் ஈடுபட்டு மாய்ந்த ஐவரும் தேவலோகத்தில் உள்ளனர். 

  •    போரில் மாய்ந்த ஐவரையும் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல ஐந்து தேவலோகப் பெண்கள் உள்ளனர்.

  இக்கருத்துப் பதிவுகள் நிகழ்ந்துவருகையில், இடையில் மற்றொரு நடுகல் படம் வெளியிடப்படுகிறது. இவ்விரண்டு கற்களும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டும் ஒரே நிகழ்ச்சி தொடர்பானவை. 

  இந்நடுகற்கள் குறித்து எழுந்துள்ள மேற்குறித்த கருத்துகள் யாவும், இந்நடுகற்களின் உள்ளார்ந்த பொருளை அடைவதை நோக்கி நகராமல் இருக்கின்றன. சிற்பக்கலை வெளிப்படுத்தும் நுணுக்கமான, அதேசமயத்தில் நேரடியான விவரச் சித்தரிப்புகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சொல்லப்பட்டவையாக இருக்கின்றன. 

  இந்நடுகற்களின் சிற்பச் சித்தரிப்புகளில் இருந்து பெறமுடியும் செய்திகளைப் பார்ப்போம். 

  முதல் நடுகல் 

  இது இரண்டு அடுக்கால் ஆனது. கீழடுக்கில் நான்கு ஆண் உருவங்களும் ஒரு பெண் உருவமும்; மேல் அடுக்கில் ஐந்து ஆண் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. கீழடுக்கில் உள்ள ஆண் உருவங்களில், வலதுபுறத்திலிருந்து இடமாக முதல் மூவரது தலை அலங்காரம் கொண்டையோடு ஏறத்தாழ ஒரே தோற்றத்தில் உள்ளது. நீண்டு தொங்கும் காதுகளில் வட்டகுலை அலங்கரிக்கிறது. மார்புகளில் பலவித அணிமணிகள் பூண்டுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் அணிமணிகளும் மாறுபடுகின்றன. மூவரின் காலசைவுகள் ஒரு திசை நோக்கி – வலதிலிருந்து இடதுபுறம் - விரைவதாகக் காட்டப்பட்டுள்ளது. இம்மூவரும் ஆயுதம் ஏந்தியுள்ளனர். முதலாமவர் வலது கரம், குறுவாள் ஏந்தி குத்துவதற்கு ஆயத்தமான நிலையில் பிடித்தபடி உள்ளது. இடது கரம், மற்றொரு அளவில் சற்று பெரிய குறுவாளை பக்கவாட்டில் இருக்குமாறு மணிக்கரத்தில் இருந்து பக்கவாட்டில் மடக்கிக் காட்டப்பட்டுள்ளது. இரண்டாமவர் வலது கரம், வாளை உயர்த்திப் பிடித்தவாறும், இடது கரம் தொங்குகரத்தில் குறுவாளைத் தொங்கிவிட்டவாறும் காட்டப்பட்டுள்ளது. மூன்றாமவர் தன் வலது கரத்தில் இருக்கும் மிக நீண்ட வாளை, நான்காவதாக உள்ள ஆண் மற்றும் ஐந்தாவதாக உள்ள பெண் ஆகியோரது இடையில் பக்கவாட்டில் சொருவி அவர்களை வீழ்த்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்நாள் வரை நாம் அறிந்த வாள்களிலேயே மீக நீண்ட வாள் எனக் கருதத்தகும் அக்கொலைவாள், இருவரின் உடலிலும் பாய்ந்து வாளின் கூர்முனை பெண்ணின் உடலில் இருந்து நீட்டமாக வெளிவந்துள்ள நிலையில் காட்டப்பட்டுள்ளது. வலது கரம் நான்காமவரின் தலைமுடியைப் பிடித்திழுப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. நான்காமவர் முதல் மூவரிடமிருந்து வேறுபடும் நீண்ட சடைபின்னல் அலங்காரம் கொண்ட தலையுடன், நிறைய அணிமணி அலங்காரங்களுடன் உள்ளார். ஐந்தாவதாக உள்ள பெண் உயர்வகை ஆடை, அணிமணி அலங்காரமும் கொண்டை முடித்த தலையுமாகக் காட்டப்பட்டுள்ளனர். கடைசி இருவரின் சிற்ப விவரிப்புகள் ஆழ்ந்த கவனத்தை வேண்டுகின்றன. இவர்கள் கைகளில் ஆயுதங்கள் காட்டப்படவில்லை. ஆணின் வலது கரம் தன் தலைமுடியைப் பிடித்திழுக்கும் மூன்றாவது ஆணின் இடது கரத்தின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்துள்ளது. இடது கை பெண்ணின் வலது கையுடன் கோத்த நிலையில் காட்டப்படுள்ளது. ஆணின் கால் திசை - இடதிலிருந்து வலமாக மாறியுள்ளது; இது தங்களைத் தாக்க வருபவர்களின் திசையை, அதாவது எதிர்திசையை, அதாவது வந்த திசையை நோக்கியவாறு உள்ளது. பெண்ணின் வலது கரம் ஆண் கரத்தோடு கைகோத்திருக்க, இடது கரம் இயல்பாக நடந்துசெல்லும் தொங்குகர அசைவுடன் உள்ளது. இவளது கால் அசைவுகள், முதல் மூவரின் திசை போன்றே காட்டப்பட்டுள்ளது. இப்பெண்ணின் ஆடை அலங்காரம் சிறப்பாக உள்ளது. இன்று கூடைவிரிப்புப்பாவாடை என்று குறிப்பிடும் வடிவமைப்பு கொண்ட பாவாடையை இப்பெண் அணிந்துள்ளாள். சிறந்த அணிமணி அலங்காரங்கள் கொண்டுள்ளாள். சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்ற, அல்லது செல்வச்செழிப்பு மிகுந்தவர்கள் என்று காட்டும்விதமாக இவ்விருவரின் தோற்றமும் உள்ளது. 

  மேல் அடுக்கில் ஐந்து உருவங்கள் ஒரே முக, ஆடை, அலங்கார பாவனையில் ஒரு நீண்ட கல்மேடை போன்ற ஆசனத்தில் ஐவரும் ஒரே பாவனையில் வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், இடதுகாலை மடக்கியும் சுகாசன அமைதியில் காட்டப்பட்டுள்ளனர். கீழ் அடுக்கில் நான்காம் ஆணின் தலை அலங்காரமான நீண்ட தலை அலங்காரத்தில் இந்த ஐவரும் உள்ளனர். இவர்களது வலது கரமானது கிலுக்கட்டை இசைக்கருவியை இசைக்கும் லாகவத்தில் காட்டப்பட்டுள்ளது. இடது கரம், அமர்ந்துள்ள காலின் தொடையில் பதிந்தவாறு காட்டப்பட்டுள்ளது.

  (கிலுக்கட்டை வாசிக்கும் மேல் வரிசை ஐவரில் ஒருவர். நிறமாற்றம் சிற்பத்தின் சில சித்தரிப்புகளை நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. முதல் நடுகல்)

  இக்காட்சிகள் நான்கு முக்கியச் செய்திகளை நமக்கு வழங்குகின்றன.

  1.    இதில் போர்க்காட்சி இல்லை. 

  2.    இதில் இடம் பெற்றவர்கள், இரு வேறுபட்ட குழுவினைச் சார்ந்தவர்கள். தலையலங்காரத்தில் உள்ள வேறுபாடு இதனை வெளிச்சமாக்குகிறது.

  3.    ஒரு குழுவினைச் சேர்ந்த முதல் மூவர், வேறு குழுவைச் சேர்ந்த ஆண்-பெண் இணையை அவர்கள் அறியாதவாறு பின்தொடர்ந்து குத்திச் சாய்க்கின்றனர்.

  4.    தாங்கள் தாக்கப்படுவத்தை ஆண் மட்டுமே அறிகிறான் உடன் இருக்கும் பெண் அறிவதில்லை. 

  அடுத்து, இரண்டாவது நடுகல் சித்தரிப்புகளைப் பார்ப்போம்.

  (இரண்டாம் நடுகல் - கிலுகட்டை வாசிக்கும் மூதாதையர்) 

  இந்நடுகல்லும், முதல் நடுகல் போலவே இரு அடுக்குச் சித்தரிப்புகள் கொண்டது. இந்நடுகல் நிலத்தில் புதைந்தும், மண்மேடிட்டும் இருப்பதால், கீழடுக்கின் சிற்பச் சித்தரிப்புகளின் முழுமையைக் கண்டுணரமுடியாது உள்ளது. கீழ் அடுக்கில் உள்ள வலதுபுற உருவத்தின் (கொலையாளி) தொடைப்பகுதி வரையிலும், இடதுபுற உருவத்தில் (கொலையுண்டவர்) இடுப்புவரையிலும்தான் காணமுடிகிறது. இது முதலாமவரின் கால் அசைவுகளையும், இரண்டாமவரின் கால் அசைவுகளுடன், ஆடைச் சித்தரிப்புகளையும் அறியமுடியாமல் செய்துவிடுகிறது. 

  மேலடுக்கில், முதல் நடுகல் சிற்பச் சித்தரிப்பு போலவே, நீண்ட சடை தரித்த இருவர் கல்மேடை ஒன்றில் சுகாசனத்தில் அமர்ந்து, இடது கரத்தை தம்தம் தொடை மீது அமர்த்தியும், வலது கரத்தில் கிலுக்கட்டை இசைக்கருவியை இசைப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளனர். கீழடுக்கில் இரு உருவங்கள் உள்ளன. இடதுபுற ஆண் முதல் நடுகல்லின் முதல் மூவரைப் போலவே, தோற்றம் ஆடை அணிமணி அலங்காரத்தில் காட்டப்பட்டுள்ளார். எனில், இவர் முதல் நடுகல் சித்தரிக்கும் கொலை செய்த குழுவைச் சார்ந்தவராகிறார். இவரது இடது கரம் இரண்டாமவரின் கொண்டையைப் பிடித்திழுப்பது போலவும், தன் வலது கரத்தில் உள்ள வாளை இரண்டாவது உருவத்தின் பக்கவாட்டில் இருந்து சொருகுவது போலும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது உருவம் தன் வலது கரத்தை தன் கொண்டையை இழுக்கும் முதல் உருவத்தின் கையின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்துள்ளது. இடது கரம் தொங்கும் கரமாக உள்ளது. இரண்டாம் உருவத்திடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. இரண்டாவதாக இடம் பெற்றுள்ள உருவம் ஆணா பெண்ணா என்ற ஐயம் எழுகிறது. முதல் நடுகல்லின் சிற்பச் சித்தரிப்போடு ஒப்பிட்டும், தலை மற்றும் இடுப்பு வரையிலான அலங்காரத்தைக் கொண்டும் இது பெண் என்றே கருதலாம். மேடிட்ட மண்ணை முழுமையாக அகற்றி உடை அலங்காரத்தை வெளிக்கொணர்த்தால், இச்சித்திரத்தின் உண்மைத்தன்மை விளக்கமாகும். இங்கு அனுமானிக்கப்பட்ட கருத்து நிலைத் தகவலாகலாம். 

  இக்காட்சிச் சித்தரிப்பு, முதல் நடுகல்லின் செய்திகளையே வழங்குகிறது. அதனை இவ்வாறு வரிசைப்படுத்திக்கொள்ளலாம்:

  1.    இது போர்க்காட்சி இல்லை. 

  2.    இடம் பெற்றவர்கள் இரு வேறுபட்ட குழுவினைச் சார்ந்தவர்கள். தலையலங்காரத்தில் உள்ள வேறுபாடு இதனை வெளிச்சமாக்குகிறது.

  3.    ஒரு குழுவினைச் சேர்ந்த ஒருவர், வேறு குழுவைச் சேர்ந்த பெண் (?) ஒருவரை அவர் அறியாதவாறு பின்தொடர்ந்து குத்திச் சாய்க்கின்றார்.

  இரண்டு கற்களிலும் மேலடுக்கில் உள்ளவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் குழுவினைச் சார்ந்த தலைவர்களாகவோ, மூத்த குடிமக்களாகவோ இருக்க வேண்டும். இவர்கள் கிலுக்கட்டை இசைக்கருவியை இசைத்தவாறு காட்டப்படுவது, குறும்பர் இனத்தவரின் பண்பாட்டில் பிறப்பிலும், இறப்பிலும் இன்றியமையாது இடம்பெறும் இசைச் சடங்கின் பகுதியைப் பிரதிபலிப்பதாகும். 

  இக்கற்களில் போர் இல்லை, இருப்பது கொலைதான் என்பதைத் தெளிந்தபின், கள ஆய்வில் மேலும் வலிமையான தகவல்களைத் திரட்ட முடியும் என்பதில் உறுதியானேன். மேலும், கள ஆய்வுகளில் சில பிற்கால நடுகற்களில் நாட்டார்த் தெய்வ உருவாக்கத்தின் தாக்கம் உள்ளதை அவற்றின் சித்தரிப்புகள் நேர்காணல்கள் வழியாக அறிந்துள்ளேன். ஏனெனில், அவை வீரம் வித்துதல் என்ற நடுகல்லின் மையமான கோட்பாட்டுக் குணத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்துவதில்லை. மேலும், பழங்குடிமகன் பதிவில் மழை வேண்டியும், பஞ்ச காலத்திலும் வழிபடும் எங்கள் குல தெய்வம் என்று கூடுதல் செய்தியை குறிப்பிட்டதும் கள ஆய்வின் அவசியத்தை உணர்த்தியது. உற்சாகமும், தன் பண்பாட்டின் ஆழங்களைத் தேடும் துடிப்புள்ள இளைஞன் பழங்குடிமகன் (வயது 31) மற்றும் அவரது தாத்தா பத்ரே கவுடா (வயது 76) இருவரும் எனக்குத் தேவையான தகவல்களை அளித்துள்ளனர். 

  நாட்டார் தெய்வங்களின், குறிப்பாக குலதெய்வங்களின் உருவாக்கத்தில் சில இறப்புக் காரணங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவற்றுள் வீரம் வித்தி மாய்ந்த மற்றும் சதி கற்கள் உட்பட நடுகல் தெய்வங்கள் தவிர பிற காரணங்களில், 1. கன்னியாக இறந்தவர்கள்; 2. குறை ஆயுளில் இறந்தவர்கள்; 3. பிறரால் கொலை செய்யப்பட்டவர்கள்; 4. பலி கொடுக்கப்பட்டவர்கள்; 5. அகால மரணங்களைச் சந்தித்தவர்கள்; 6. விபத்தில் இறந்தவர்கள்; 7. தற்கொலை செய்துகொண்டவர்கள்; 8. விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் போன்வை முக்கியக் காரணங்களாக உள்ளன. பேறுகாலத்தில் இறந்தவர்களுக்கு எழுப்பப்படும் சுமைதாங்கிக் கற்களும் வழிபாட்டுக்கு உரிய வீட்டுத்தெய்வங்களாகவோ, குலதெய்வங்களாகவோ ஆவது உண்டு.

  இவ்விருவரிடமிருந்தும் பெற்ற தகவல்கள், இக்கற்களில் உள்ள நாட்டார் தெய்வ உருவாக்கத்தின் தாக்கத்தை உறுதிசெய்தது. இக்கற்கள் குறித்து பெரியவர் பத்ரே கவுடா அவர்கள் கூறும்போது, ‘‘தங்கள் சமூகத்தின் இரு கூட்டத்தாரிடையே இருந்த பகை காரணமாக, ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரில் சிலரை அவர்கள் எதிர்பாராதபொழுது குத்திச் சாய்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுக்கு கல்லெழுப்பி அவர்களை ஊரார் வணங்கி வருகின்றனர்’’ என்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்வு குறித்து வழிவழியாகச் சொல்லப்பட்டவற்றை நினைவிலிருந்து மீட்டிச் சொல்கிறார். இக்குழுக்களை தற்பொழுது அடையாளம் காண முடியவில்லை. போலவே, நீண்ட சடைமுடி தரிப்பது யார்? ஒரு குழுவா, சமூகத்தில் குறிப்பிட்ட அந்தஸ்து பெற்றவர்களா என்ற கேள்விகளுக்கு திருப்திகரமான விவரங்கள் இல்லை. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊரில் பஞ்சம், மழையின்மை போன்றவற்றை இம்மக்கள் சந்திருக்க வேண்டும்; கொலையுண்டவர்களின் ஆவிகளே காரணம் என்ற அச்சமும் எழுந்திருக்க வேண்டும். இதன்காரணமாக, இவர்களின் ஆவிகளைச் சாந்தப்படுத்தவும், தீமைகள் அண்டாதிருக்கவும் இவர்களை வழிபாடு செய்கின்றனர். 

  நாட்டார் மரபில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அவரை வழிபடுவர்; அவரது ஆன்மா அமைதிகொள்ளவும், பிறவகைகளில் தீமை வழங்காதிருக்கவும் இவ்வழிபாடு அமையும். பின்னர், கொலை செய்தவர்களும் அவரை வழிபடுவர். இப்படி வழிபாடு பெறும் தெய்வம்/தெய்வங்கள், படிப்படியாக பிற குழுவினர் சாதியினர், பிற குடும்பத்தினர் ஆகியோரும் வழிபடுவதற்கு உரியதாகும். இதற்கு அந்தத் தெய்வம் பற்றிய நம்பிக்கை, பயம் ஆகியவை முக்கியக் காரணிகளாகும். அத்தெய்வம் பற்றி பரவும் செய்திகள், அதன் நிலைபெறுதலுக்கு காரணமாகும். இதற்கேற்ப, ‘‘இந்நடுகல் வழிபாட்டில் குறும்பர்களோடு, ஒக்கலிக்க சமூகத்தினரும் தவறாது பங்கேற்கின்றனர்’’ என்பது இங்கு பெறப்பட்ட கூடுதல் செய்தி. இது, பலசமூகங்கள் வணங்கும் தெய்வமாக இத்தெய்வங்கள் நிலை பெற்றதைக் காட்டுகிறது. 

  தென் தமிழகத்தில் இவ்வாறு உருவாகும் நாட்டார் வகைத் தெய்வங்கள், பெண் தெய்வமாயின் இசக்கி அம்மன் ஆகிறார். ஆண் தெய்வமாயின், மாடன், பாட்டன், சாமி முதலிய பின்னொட்டுகள் கொண்ட பெயர்களுடன் வழிபடப்படுகிறார். தமிழகத்தின் வடபகுதியில் இவ்வகைத் தெய்வங்கள் நடுகல் தெய்வங்களாக வெளிப்படுகின்றன. இவர்களில் சில தனிப்பெயர்களைக் கொண்டுள்ளனர். வேடியப்பன் என்பது பொதுப்பெயராக உள்ளது. நடுகல் பெண் தெய்வங்கள் தனிப்பெயர் கொண்டுள்ளதை அறியமுடியவில்லை. சதி தெய்வங்கள் சூட்டிக்கொள்ளும் பெயர்களான வீராயி, வீரமாத்தி பெயர்களைச் சிலர் குறிப்பிட்டனர். இது இப்பகுதியில் பரவலாக வழக்கிலுள்ள, விரும்பப்படும் பெயர்களாகும். இப்பெயர்கள் பண்புப் பெயர்கள் நிலையில் இருந்து பெண் தெய்வம் என்ற சுட்டுப்பொருளாகி இருப்பதை இவ்விடங்களில் காண்கிறேன். 

  நெல்லூர் – (பர்கூர்) கொலையுண்டு நடுகலான தெய்வங்களுக்கு தனிப்பெயர் இல்லை. விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ள இதன் காலத்தை பொ.ஆ. 1500 அளவில் கணிக்கலாம். அதாவது, இக்கல் இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம்.

  சடைசாமி 

  இவ்விரு சிற்பங்களில் மேலடுக்கில் உள்ளவர்கள் மற்றும் முதல் நடுகல்லில் கீழடுக்கில் கொல்லப்படுபவரின் நீண்ட சடைமுடி தலையலங்காரம் எதன் அடையாளம் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. ‘‘அந்தியூர், மூலக்கடையில் உள்ள ஒரு கோயிலை சடைசாமி கோயில் என்று அழைக்கிறோம் என்றும் அக்கோயிலின் நடுகல் சிற்பம் இம்மாதரியான நீண்ட சடைமுடி கொண்டவரது உருவமே’’ என்ற தகவலைத் தந்தார் மீனாட்சி. இது, இம்மக்களின் மூதாதையரின் ஒரு உருவம் இவ்வாறு காட்டப்படுகிறது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. 

  தகடூர்ப் பகுதியில் இம்மாதிரியான நீண்ட சடை அலங்காரம் கொண்டவர்களின் பல கற்களைக் காணமுடிகிறது. இங்கு இவ்வலங்காரம் கொண்டவர்கள் வெவ்வேறான சித்தரிப்புகளில் காட்டப்பட்டுள்ளனர். பாரூரில் மகுடத்தை நெஞ்சில் அணைத்து வாசிப்பவர் போல் ஒருவரும்; நீண்ட தடியை இடது கையிலும் வாளை வலது கையில் கொண்டவராக மற்றொருவரும் உள்ளனர். காரியமங்கலத்தில் உள்ள ஒருவர் சாட்டையை கொண்டவராகவும், மற்றொருவர் இரு கைகளிலும் நீண்ட குச்சி அல்லது மூங்கில்களைக் கொண்டவராகவும், தோளில் புரளும் சாட்டையைக் கொண்டவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடலாம். 

  மகுடம், இம்மக்களின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத இசைக்கருவி. மகுடம் பெரும்பான்மையோரால் ‘‘தப்பு’’, ‘‘தப்பட்டை’’ என்ற பெயர்களால் தவறாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. மகுடம் என்பது மார்போடு அணைத்து இரு கைவிரல்களாலும் தட்டி இசை ஒலிக்கச்செய்யும் கருவியாகும். தப்பு, தப்பட்டை என்பது இரு குச்சிகள் கொண்டு கருவியில் தட்டி இசை எழுப்பும் கருவியாகும். பேய், பிசாசு பிடிக்காதிருக்கவும், நோய் நீங்கவும் சாட்டை அடிக்கும் சடக்கு இம்மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. விழாக்களின்பொழுது இச்சாட்டையடி சடங்கு நிகழ்த்தப்படுகிறது. குலத்தலைவர்களே சாட்டையை எடுத்து அடிப்பர். இச்சாட்டைகளை வேறு யாரும் தொடுவதில்லை. சாட்டையடிக்க உரிமையுடைவர் மட்டுமே கையாள்வர். இந்த விலக்கு (taboo) நம்பிக்கை எழுதப்படாத சட்டமாக இம்மக்களிடையே உள்ளது. இதனால், இசைக்கருவிகள், சாட்டை போன்ற புனிதப் பொருட்கள் கொண்டவர்கள், அல்லது குலத்தலைவர்கள் இவ்வாறான நீண்ட தலைமுடி அலங்காரத்தில் காட்டப்படுவர் என்ற முடிவுக்கு வர இயலாது. இக்குழுவினரில் ஒரு பிரிவினர் நீண்ட தலையலங்காரம் தரித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் மூதாதையர் ஒருவரின் கோயிலே அந்தியூர் மூலக்கடையில் உள்ளதாகும். தகடூர்ப் பகுதியில் காண்படும் கற்கள், அவர்களுள் பலவித பண்பாட்டு அடையாளங்களை விளக்குவதாக அமையும் கற்கள் எனலாம். 

  இந்நடுகற்கள் தரும் செய்தி

  இந்த இரு நடுகற்களும் ஒரே செய்தியை வழங்குகின்றன. பகை, விரோதம் காரணமாக ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் (கொண்டை தரித்தவர்கள்) மற்றொரு குழுவைச் சார்ந்தவர்களை (நீண்ட சடை தரித்தவர்கள்) ஆண்-பெண் பாரபட்சம் பார்க்காமல் குத்திச் சாய்க்கின்றனர். முதல் கல்லில் மூவர் சேர்ந்து ஒரு ஆண்-பெண் இணையை குத்திச் சாய்க்கின்றனர். இரண்டாவது கல்லில், ஒருவர் மற்றொரு குழுவைச் சார்ந்த பெண் (?) ஒருவரை குத்திச் சாய்க்கிறார். இவர்களது மரணம், இவர்களது குல மூதாதையரால் ஆசிர்வதிக்கப்படும்விதமான கிலுக்கட்டை இசைத்து வணங்கப்படுகிறது. 

  துவக்கத்தில், இக்கல் கொலையுண்டவர்களின் சந்ததிகளாலும், அவர்களது குழுவினராலும் வணங்கப்பட்டது. பின்னர் கொலையுண்டவர்களின் மீதான அச்சத்தால், கொலை செய்தவரின் குழுவினரும் வணங்கத் தலைப்பட்டனர். இக்கல் தெய்வங்களை வணங்குவதால், பஞ்சம், வறட்சி நீங்குகிறது என்ற நம்பிக்கை உருவானது. நாளடைவில், இந்நடுகல் குறும்பர் குடியினர் மட்டுமல்லாது ஒக்கலிக்கர் சமூகமும் வணங்கும் ஊர்த்தெய்வமானது. 

  - த. பார்த்திபன் (தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai