Enable Javscript for better performance
5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமத- Dinamani

சுடச்சுட

  

  5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை!

  By த. பார்த்திபன்  |   Published on : 20th September 2018 02:19 PM  |   அ+அ அ-   |    |  

   

  ஆரோக்கியமான குழந்தைப்பேறுக்குச் சாமியாடிகளின் சடங்குமுறையைக் காட்டும் படைப்பு

  பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ப. இரமேஷ் அவர்களால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குருவிநாயணப்பள்ளிக்கு அடுத்த மூலக்கொல்லை என்ற இடத்தில் இரண்டு இடங்களில் பாறை ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டு மூன்றாண்டுகளுக்குமேல் ஆகிறது. சில நாட்களிலேயே அவர் இந்த ஓவியங்கள் குறித்து என்னுடன் பேச வந்தார். தமிழகப் பாறை ஓவியங்களில் இதுவரை அறியவராத உள்ளுரைப் பொருளுடன் கூடிய இந்த ஓவியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள பலமுறை களஆய்வு மேற்கொள்ள வேண்டியதானது. இடையில் கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் பெ.வெங்கடேஸ்வரன் அவர்கள் இதனை அடையாளம் கண்டார். பேராசிரியர் மறுஆய்வுக்கு என்னை அழைத்தபொழுது அவர்களிடம், இரமேஷ் இந்த ஓவியத்தை முன்னரே அறிந்துவந்ததைக் குறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டு வருவதையும் தெரிவித்தேன். அதனால் அவர் இதனை ஆவணப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டார். பின்னர் இந்தப் படைப்பு குறித்து பலமுறை இருவரும் விவாதித்துள்ளோம். மேலும், ப. இரமேஷ், து. பாலாஜி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், கிருஷ்ணகிரி மற்றும் எஸ். விஸ்வபாரதி, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை - அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி ஆகியோருடன் இறுதிக்கட்ட கள ஆய்வினை மேற்கொண்டேன். இவர்களின் உதவி மிகப்பெரிது; மறக்கத்தக்கதல்ல.

  கடந்த ஜனவரி மாதம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்தியப் பாறை ஓவியக் கழகத்தால் நடத்தப்பட்ட கருத்தரங்கில், மூலக்கொல்லை இரண்டாவது ஓவியம் குறித்து ஒரு அறிமுகக் கட்டுரை இரமேஷால் வாசிக்கப்பட்டது. இவ்வோவியங்கள் குறித்த என் முழுமையான ஆய்வுடன், ஓவியங்கள் குறித்து தினமணி இணையதளம் (www.dinamani.com) மூலம் வெளியுலம் அறியச் செய்யப்படுகிறது.

  இந்த ஓவியத்தின் சிறப்புகள், இவை வெளிப்படுத்தும் சமுதாய அமைப்பு, பொருளியல், இவற்றின் காலம் குறித்து விரிவாக எழுத வேண்டும் என கடந்த மூன்றாண்டுகளாகவே அவ்வப்பொழுது முயன்று வந்தேன். பல்வேறு பணிகளின் இடையூறால் காலதாமதம் ஆகியது.

  ***

  இந்த ஓவியத்தை முழுமையாக அல்லது நான் அறிந்தவற்றை முழுமையாக அறியச்செய்ய என் முன் இரண்டு சவால்கள் இருந்தன. 1. சாமியாடியியம் என்ற தொல்மக்களின் வழிபாட்டு நம்பிக்கை மற்றும் மருத்துவ அறிவு பற்றியும், அதன் பன்முகத்தன்மை பற்றியும் விளக்குவது; 2. இனக்குழு தலைமை, வேளிர், அரசு உருவாக்கத்துக்கு முன் சமூகத் தலைமையாக இருந்த சாமியாடி தலைமை குறித்து விளக்குவது. இவ்விரண்டின் பின்புலம் இன்றி, இவ்வோவியத்தின்வழி பண்டைய இம்மக்கள் வெளிப்படுத்திய அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சியையோ, சமூக அமைப்பையோ, அவர்களின் பொருளியலையோ சரியான அல்லது கூடியவரை அவற்றின் நெருக்கமான பொருளையோ அடைவது இயலாத ஒன்றே. சாமியாடித் தலைமை என்பதை மதகுரு ஆட்சி என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பர். ஆனால், இவ்விரு தலைமைப் பண்புக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. அவை வரும் பத்திகளில் விளக்கப்படும்.

  மேலும், தமிழகப் பாறை ஓவியங்கள் குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்த சில கருத்துருவங்களையும், இந்நாள்வரை நீடித்துவரும் காட்சிகளின் பட்டியல் வகையிலான விவரிப்புச் செய்யும் குணத்தையும் ஒதுக்கிவைக்க வேண்டியதும் அவசியமாக இருந்தது.

  இப்பின்னணியில், ஓவியங்கள் குறித்த செய்திகளுக்குப் போகும் முன்னர், தொன்மைச் சமூகத்தினரிடையே வழக்கில் இருந்த சாமியாடிகள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளான சாமியாடியியம் குறித்தும் சில செய்திகளை அறிமுகம் என்ற அளவிலேனும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

  சாமியாடிகளும் சாமியாடியியமும்

  ஆங்கிலத்தில் Shamans and Shamanism என்று சொல்லப்படுவதுதான் இங்கு சாமியாடிகளும் சாமியாடியியமும் என்று குறிக்கப்படுகிறது. தமிழில் இச்சொற்களுக்கு இணையாக மாயவித்தையரும் மாயவித்தையியமும், பூசாரிகளும் பூசாரியியமும், மந்திரவாதிகளும் மந்திரவாதியியமும் போன்று வேறு சொற்களும் ஆலோசிக்கப்பட்டன. தொல்மனிதனின் வழிபாட்டு முறை, சடங்கு முறை, மருத்துவ முறை அதனைச் செய்பவர், அதனைச் சார்ந்த நம்பிக்கைகள், செயல்முறைகள் ஆகியவற்றின் சிந்தனைகளின் தொகுப்பு ஆகியவற்றை ஆதிமணத்துடன் அடையாளப்படுத்தும் சொற்களாக அல்லது அதன் பொருளின் நெருக்கத்துக்கு அழைத்துச் செல்லும் சொற்களாக வேறு எந்த சொற்களைவிடவும் சாமியாடி, சாமியாடியியம் ஆகியவையே உள்ளன.

  இங்கு ஆலோசிக்கப்பட்ட பிற சொற்களான மந்திரவித்தையன் என்பவர் மந்திரவித்தை புரிபவரையும்; பூசாரி என்பவர் பூசை போன்ற சடங்குகளைச் செய்பவரையும், மந்திரவாதி என்பவர் மந்திரவித்தையனையும் குறிக்கிறது. சாமியாடி என்பதன் முழுப்பொருளையும் இவை அடையாளப்படுத்துபவையாக இல்லை. இவையனைத்தும், பகுதிப்பொருள் அல்லது ஒரு செயலை மட்டும் அடையாளப்படுத்துபவையாகவே உள்ளன. நவீன புரிதலில், அருள் வந்து ஆடி அருள்வாக்கு சொல்பவர்களே சாமியாடிகள் என்று அழைக்கப்படுவது, நாம் அச்சொல் குறித்து வகுத்துக்கொண்ட புரிதல் குறைபாடே அன்றி வேறில்லை. குருமார் மற்றும் குருமாரியம் ஆகிய சொற்களையும் ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டேன். இச்சொற்கள், நூல்களால் வழிநடத்தப்படும் சமயக் குருக்களையும் அவர்களது கோட்பாடுகளையும் அடையாளப்படுத்துவதாக இருப்பதாலும், எழுதப்படாத கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்ட பழைமைவாய்ந்த நிலையை அவை அடையாளப்படுத்தவில்லை என்பதாலும் சாமியாடி, சாமியாடியியம் சொற்களைத் தொடர்கிறேன்.

  அண்மைக்காலங்களில் Neo Shamans and Neo Shamanism என்ற சொற்கள் தொல்நிலை சாமியாடி, சாமியாடியியத்தில் இருந்து புதியவை புகுத்தி அவற்றை ஏற்றுச் செயல்படுபவர்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு இணையாக நவீன சாமியாடி, நவீன சாமியாடியியம் சொற்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

  பெயராய்வு

  ஆங்கிலத்தில் “சாமன்” (Shaman) என்று அழைக்கப்படும் சொல்லுக்கு வேரைத் தேடியவர்கள் இன்னும் அதனைக் கண்டடையவில்லை. சைபீரியாவின் “டங்க்ஸ்” (Tungus) மக்களின் “டங்க்சிக்” (Tungusic) மொழியில் இருந்து இச்சொல்லைப் பெற்றுக்கொண்டனர். முதலில் துவக்கக்கால ஆய்வாளர்களின் புழக்கத்தில் மட்டும் இருந்த இச்சொல், நாளடைவில் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. இச்சொல் ஆயிரக்கணக்கான தொல்சமயக் கருத்துருவங்களின் பொதுக்குணத்தைக் குறிக்க சமயவாதிகளாலும், மானுடவியலாளர்களாலும், தொல்லியலாளர்களும் பயன்படுத்தப்படுகிறது. சாமன் என்ற சொல்லுக்கு வேரையும் பொருளையும் தேடிய ஹோப்பல் (Mihaly Hoppal), இச்சொல் இந்தோ-ஈரானிய மொழிச்சொல் அன்று என்று கூறுகிறார். சம்ஸ்கிருதம் முதலான மொழிகளில் வழக்கில் உள்ள சுவாமி என்ற சொல்லை அடியாகக் கொண்டதன்று எனக் குறிப்பிடுகிறார் எனக் கருதலாம்.

  தமிழில் சாமியாடி என்ற சொல்லானது சாமி+ஆடி என்றும், இன்னும் உட்பகுப்பாக சா+மீ+ஆடி என்ற சொற்களின் தொடர் ஒரு சொல்லாக ஒலிக்கிறது. சா = என்பது சாவு என்ற மரணத்தையும், மீ = என்பது மீள்தல் அல்லது உயிர்த்தெழுதலையும், ஆடி என்பது ஆடு+இ என வேர்களின் இணைவாக அமைந்து “ஆடு” என்பது துள்ளல், அசைவு, நடனம் முதலான பொருள்களைத் தந்து நிற்கும். “இ” தொழில் பெயர் விகுதியாகும். இது, சாவு நிலைக்குச் சென்று அதனிலிருந்து மீண்டு துள்ளுபவர் என்ற பொருளை வழங்குவதாகும். வரும் பக்கங்களில் சாமியாடிகளின் குணங்கள் குறித்து விளக்கப்படும்பொழுது இது பண்புப்பெயராக அமைவதை அறியலாம். இதனைக் கொண்டு, தமிழின் சாமியாடிதான் மருவி சாமன் ஆக உருவானது எனக் கூறுவது மிகையாக இருக்கும்; இட்டுக்கட்டியதாகவும் ஆகலாம். சாமியாடி என்ற தமிழ்ச் சொல் கொண்டுள்ள பண்புப் பொருள், சாமனின் பண்புப் பொருளோடு நெருக்கமாக உள்ளது. மேலாய்வுக்கு விட்டுவிடுகிறேன்.

  சாமியாடியியம் என்ற சொல் அடையாளப்படுத்தும் இயம் (ism), அதாவது கோட்பாடு அல்லது தத்துவம் இதற்கு இல்லை என்பர். உலகம் முழுவதும் பரவியுள்ள எல்லா மனித இனம், குழுவிடமும் அவ்வவ் குழுக்களின் தேவை சார்ந்து பிறந்த அறிவும் வலிமையும் கூடிய ஒருவரே அல்லது ஒரு சிலரே சாமன், அதாவது சாமியாடி என்று அழைக்கப்படுகின்றனர். சாமியாடிகளிடையே இடமும் பொழுது சார்ந்து சிற்சில வேறுபாடுகள் இருப்பினும், ஒருவருக்கு ஒருவர் எந்தவிதத் தொடர்பு இன்றியே செயல்பாடுகளில் உலகளவிலான ஒரு பொதுக் குணம் உருவாகியுள்ளது. அப் பொதுக் குணங்களின் தொகுப்பே சாமியாடியியம் அல்லது ஆங்கிலத்தில் சாமனிசம் எனக் குறிக்கப்படுகிறது.

  சாமியாடியிய ஆய்வுகள்

  சைபீரியாவில் செம்மையான சாமியாடியியம் கடந்த 18-ம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்தது. அங்கிருந்து சாமியாடியியத்தின் பல நுட்பமான செய்திகள் ஆய்வுப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்றும் மத்திய, கிழக்கு ஆசியா, இந்தியாவில் வழக்கில் இருக்கும் சாமியாடியியச் செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டியே, பாறைக்கலையில் சாமியாடியியம் குறித்த உலகளாவிய ஆய்வுகளும் தொல்லியளாளர்களால் நடத்தப்பட்டன. தமிழகத்தைப் பொருத்த அளவில், மூலக்கொல்லை ஓவியம்தான் சாமியாடியியத்தை முன்வைத்து முதன்முதலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

  சாமியாடியியத்தின் பொதுக்குணங்கள்

  சாமியாடி என்று நினைத்தவுடன் நமக்கு தொல்மனிதர்கள், தொல்குடிகள், பழங்குடிகள் போன்று உணவைத் தேடும் கூட்டத்தையும், வேட்டையாடி உணவைச் சேகரிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்களும் நினைவுக்கு வருகின்றனர். ஆனால், சாமியாடியியத்தின் பல குணங்களை, சடங்குகளை, நம்பிக்கை வெளிப்பாடுகளை நவீன மனிதன் வெளிப்படுத்தி வருகிறான், சமய வேறுபாடுகள் இன்றி. அவனது சில அன்றாட சில செயல்கள் சாமியாடிகள் வழங்கியது என்பதை வசதியாக மறந்துவிட்டு அல்லது மதத்தின் போர்வையில் மறைந்துகொண்டு தொடர்ந்து செய்துவருகிறான். தன் சந்ததிக்கு மரபு என்ற வகையில் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அதனை என்றென்றும் கடத்திவர வழங்குகிறான்.

  சாமியாடியியம் மானுடர்களிடையே உள்ள ஒரு மதமா / சமயமா என்ற கேள்வி அவ்வப்பொழுது தொல்லியலாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் உள்பட எல்லாத் தரப்பிலிருந்தும் எழுப்பப்படுவது உண்டு. அது தொல்சமய நிலையா என்றும் ஆலோசிக்கப்படுவதும் உண்டு. மத நூல்களால் வழிநடத்தப்படும் ஒருவன் பண்பட்டவனாகவும், அவனது சமூகம் பண்பட்டச் சமூகமாகவும் ஆக்கப்படுகிறது. மத நூல்கள் ஆகாத, அதாவது எழுதப்படாத வாழ்வியல் நெறிமுறைகள், சமூகக் கட்டுமானங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்டு இயங்கும் மனிதன் பண்படாத மனிதனாகிறான்; அவனது சமூகம் பண்படாத சமூகமாக்கப்படுகிறது. சாமியாடிகளுக்கும் மதகுருவுக்கும் உள்ள வித்தியாசத்தையும் இந்த வரையறை வழங்கிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளப்படும்போது, சாமியாடியியத்துக்கும் அதாவது சாமியாடி கோட்பாடுகளுக்கும் மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்கு புலனாகும். உண்மையில், சாமியாடிகளின் வழித்தோன்றல்கள்தாம் ஆதிமத குருமார்கள் என்பது ஆச்சரியமான வரலாற்று உண்மை. சாமியாடி என்ற சொல் இருபாலரையும் குறிக்கும். ஆண் - பெண் இருபாலருமே சாமியாடிகளாக இருந்துள்ளனர்.

  சாமியாடிகள் யார்

  சாமியாடிகள் ஒவ்வொரு சமூகத்திலும் முதலில் மருத்துவத் தேவையின் பொருட்டே உருவானார்கள். இவர்கள் மனிதர்களுக்கு உண்டாகும் நோய், குறைகள் அனைத்தும் கெட்ட ஆவிகளால் உருவாகின்றன என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இந்நம்பிக்கையின் சான்றுகளைத் தொல்பழங்காலத்தில் இருந்தே காணமுடிகிறது. அவற்றைக் குணமாக்கவும், கெட்ட ஆவிகளை விரட்டவும் மிகவும் பலசாலியான, புத்திக்கூர்மை கொண்ட சிலர் ஒவ்வொரு சமூகத்திலும் உருவாயினர். சமூகத்தின் அறிவு வளர்ச்சியில்; சமூக அக்கறையில் மிகுந்திருந்தவர்களாக இவர்கள் இருந்தனர். அவர்களே சாமியாடிகள்.

  ஒவ்வொரு சமூகத்திலும் சாமியாடிகள் உருவானார்கள். இச்சாமியாடிகளே நோய்களைப் குணமாக்கும் அக்கால அவ்வவ் சமூகத்தின் மருத்துவர்கள், மருந்துகளைச் செய்யும் விஞ்ஞானிகள். குறி சொல்லுதல், நிமித்தங்கள் பார்த்தல் என்பதும் இவர்களின் பணிகளில் ஒன்றாகின. இதனால், இவர்கள் ரசவாதிகளாகவும், கணித வல்லுநர்களாகவும், வானவியல் நிபுணர்களாகவும், வழிபாட்டை ஒருங்கமைத்துச் செய்யும் பூசாரிகளாகவும், தொல்மத மதகுருமார்களாகவும் ஆயினர். அவர்கள் உடல் வலிமையிலும் குறைவற்றவர்களாக இருந்தனர். காலஓட்டத்தில், இவர்கள் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாகவும் விளங்கினர். சாமியாடிகள் போர்த் தலைமையினையும் ஏற்றனர். வேட்டையானாலும் சரி, எதிரிக் குழுக்களுடன் போர் என்றாலும் சரி, ஆயுதம் ஏந்தி முன் செல்வது சாமியாடிகளின் சமூக நலம் கருதிய பணி. அதனால், வேட்டைச் சமூகத்திலும் சரி, உணவைச் சேகரிக்கும் கூட்டத்திலும் சரி, உணவை உற்பத்தி செய்யும் சமூகத்திலும் சரி, இவர்களே ஆயுதம்தாங்கி வேட்டையிலும், போர்க்களத்திலும் முன்நின்றனர். அருள்வாக்கு தரும் அருளாடிகளோடு இச்சாமியாடிகளை இணைத்துப்பார்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது என்பது முன்னரே விளக்கப்பட்டது.

  சாமியாடிகளின் சில மறைவான செயல்களினாலும், அவர்களது பரவசநிலை, சமாதிநிலை (trance or ecstasy) அடைதல் குணங்களாலும், அரக்கர்களாக (demonized) இகழப்பட்டும், மனோவியாதிக்காரர்கள், (psychotic) சிதைவுற்ற பண்பாளார்கள் (schizophrenic) மற்றும் நரம்புமண்டலக் கோளாறு அல்லது மூளைச்சிதைவு (neurotic) உடையவர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். சாமியாடிகள் குறித்து இன்றும் மிகச்சிறந்த ஆவணமாக விளங்கும் நூலை எழுதிய எலியடே (Mircea Eliade), முதன்முதலில் “சாமியாடிகளை, மூளை தொடர்பான எந்த நோய் உடையவர்களாக உள்கிரகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

  சமூகத்தில் சாமியாடிகளின் முக்கியப் பங்கு இவர்களின் மருத்துவத்தில் உள்ளது. இவர்கள் நோயை உண்டாக்கியவர் அல்லது கிருமிகளின் ஆன்மாவுக்குள் புகுந்து அதற்கான மாற்றை, அல்லது முறிப்பை அல்லது அதனை விரட்டி அடிக்கும் ஒன்றைக் கண்டறிந்து நிவாரணம் அளிப்பார்கள். இவ்வாறான செயலில் இவர்கள் ஈடுபடும்பொழுது, இவர்கள் பரவசநிலை அடைவார்கள், அல்லது தாற்காலிக மரணநிலை அடைந்து வேறு உலகம் சென்று மீண்டுவருவர். பின்னர் பாடுவர்; ஆடுவர். பறை (சிறுபறை), இவர்களிடமிந்து பிரிக்க முடியாத இசைக்கருவி. இதனால், சமயவழிப்பட்ட இசையும், பாடலும் இவர்களிடமிருந்து பிறந்தது என்பது மிகையில்லை. (பெயராய்வுச் செய்திகளை இங்கு ஒப்பிட்டுக்கொள்க). மாந்தரினப் பரிமாண வளர்ச்சியில், அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்புகளின் ஆதி முன்னோடி அறிஞர்களும் இவர்களே. நாம் மூடத்தனம் அறிவியல்பூர்வமற்றது என்று கருதும் விஷயங்களின் ஆதிமுன்னோடிகளும் இவர்களே.

  Shaman, Shamanism ஆகியவற்றுக்குப் பொருள் வழங்கும் வழக்கில் உள்ள அகராதிகள் போலியானவர், கள்ளத்தனமானவர், மாறாட்டம் செய்பவர், மோசடி செய்பவர் என்றும், மந்திர சூனிய மதகுரு ஆட்சி, மாயவித்தை சூனியம் ஆகியவற்றை உள்கூறாகக் கொண்ட சமயம் என்பதான பொருள்களைத் தருவதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவை தற்காலத்தில் சாமியாடிபோல் வேடமிட்டு வஞ்சிக்கும் நபரின் செயல்களைக் கொண்டு பொருள் கொள்ளப்பட்டதாகும். ஆனால், தொல்லியல் பார்வையிலும் சரி, பழங்குடி அறிவியலிலும் சரி, சாமியாடிகளின் பங்களிப்பு என்பது சமூகத்தின் நன்மை கொண்டு எழுந்து வளர்ந்தது ஆகும்.

  சாமியாடிகளும் ஆவி வழிபாடும்

  “ஆவி வழிபாடு” தொல்சமயச் சிந்தனையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பது. உலகின் எல்லா உயிருள்ள / உயிரற்ற பொருள்கள் ஆவிகளைக் கொண்டுள்ளன. ஆவிகளே ஆன்மா என்றும் குறிக்கப்படும். ஆவிகள், நன்மை செய்பவை தீமை செய்பவை என்று இரு பண்புகளையும் பெற்றிருப்பவை. மேலும் விரிவாகப் பார்க்க தினமணி.காம், தொல்லியல் மணி, யுத்தபூமி தொடர் அத்தியாயம் 67-ஐ பார்க்கவும்.

  சாமியாடிகள் உலகில் இந்த ஆவிகள் ‘‘காரண ஆவிகள்” என்று அழைக்கப்படும். பொருள்முதல் வாழ்கையின் எல்லா நிகழ்வுகளில், உடல் நோயுருதல், உடல் நலத்துடன் இருத்தல், உணவை, உறைவிடத்தைப் பெறுதல், வேட்டையில் வெற்றிபெறல், மற்றும் சமூகத்தின் நல்லிருப்பு போன்றவற்றுக்கு ஆவிகளே காரணமாக அமைகின்றன. இதனாலேயே, இத்தகைய ஆவி/ஆன்மாக்களுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியமாகிறது, தவிர்க்க முடியாததாகிறது. இவ்வுறவைப் பேணுவதில் சமூகத்தில் சில சிறப்புப் பண்பு வாய்ந்த நபர்கள் இருந்தனர். அவர்கள் இவ் ஆவிகளோடு / ஆன்மாக்களோடு தொடர்புகொள்வர். இவ்வாறு தொடர்புகொள்ள இச்சிறப்பு வாய்ந்த நபர்கள் தங்களின் ஆவியை “காரண ஆவி”களின் உலகுக்குச் செலுத்துவர். இவ்வாறு தங்களின் ஆவியை “காரண ஆவிகள் இடத்துக்கு அல்லது உலகுக்குச் செலுத்தும் செயலே சாமியாடிகளின் பயணம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்கள் தம் மூதாதையரின் ஆவிகளையும் துணைக்கு அழைத்து தம் தேவைகளையும் ஆலோசனையையும் பெறுவர்.

  சாமியாடிகளின் பயணம்

  மருத்துவம் சார்ந்த சாமியாடிகளின் ஈடு இணையற்றச் செயல்களில் முக்கிய இடம் பெற்றிருப்பது அவர்களின் “பயணம்” ஆகும். சாமியாடிகளின் இப்பயணத்தை “மூவுலகுப் பயணம்” எனலாம். மேலுலகு, கீழுலகு, நடுவுலகு என்பவையே இம்மூன்று உலகங்கள். இவ் உலகங்களின் பொருள், தேவர் அல்லது நல் ஆத்மாக்களின் உலகு, தீய ஆத்மாக்களின் உலகு, மனிதர்களின் உலகு என்பது ஏறத்தாழ எல்லா சமூகங்களிலும் ஒன்றுபோலவே இருக்கிறது.

  அவர்கள் பயணத்தின்பொழுது பரவசநிலையை அடைவர், உணர்வற்ற சமாதி நிலைக்குச் செல்வர். “காரண ஆவி”களிடம் இவர்களின் ஆவிகள்தாம் வேண்டும் உதவிக் கோரிக்கையை வைக்கும், மன்றாடும், அல்லது தங்களின் விருப்பத்துக்கு இணையச்செய்யும்; தேவையெனில், சமயங்களில் அவற்றுடன் மோதும்; போராடும். முன்னர் குறித்தபடி, மூதாதையரின் ஆவிகளைத் துணைக்கு அழைக்கும். எவ்வாறாகினும் உரிய நிவாரணத்தைப் பெற்றுவரும்.

  சாமியாடிகளின் பயணத்தில் பாடலும் பறையிசையின் பங்கும்

  சாமியடிகளின் பயணத்தில் பாடலும் பறை இசைப்பின் பங்கும் பெரியது. தனி நபர் சார்ந்தோ, அல்லது சமூகம் சார்ந்தோ காரண ஆவிகளை நோக்கிய பயணத்தின்பொழுது சாமியாடிகள் தொடர்ந்து பாடுவர், பறையை இசைப்பர். அல்லது பறையிசைக்க வைக்கப்பட்ட நபர் தொடர்ந்து இசைப்பார். உடன் சமூகத்தினரும் ஆராவாரித்திருப்பர். இது சாமியாடிகளைப் பரவச நிலைக்குத் தள்ளுகிறது. பின்னர் தன் மெய்மறந்து உடல் சரிவதிலிருந்து அவரின் பயணம் தொடங்குகிறது.

  சாமியாடிகளும் பறவை விலங்குகளும்

  சாமியாடிகள் பறவை, விலங்குகளுடன் கொண்டிருக்கும் உறவு தனித்துவமானது. பொருள் பொதிந்தது. அவற்றின் சிறப்பான குணங்களை; அவற்றின் சக்திகளைத் தாம் பெறுவதன் பொருட்டே அவற்றை சாமியாடிகள் கைக்கொள்கின்றனர். அவற்றின் தோல்களை ஆடையாக்கிக்கொள்கின்றனர்; கொம்புகளை தலைக்கவசமாக்கிக்கொள்கின்றனர். தம் ஆவிகளை அவற்றுள் செலுத்திப் பயணிக்கின்றனர்; அல்லது பயணத்துக்கு வாகனமாக்கிக்கொள்கின்றனர். மான், குதிரை, கழுகு, மீன், பன்றி போன்ற இவற்றுள் முக்கியமானவையாக உள்ளன. இவற்றுள் பறவை உயிரினங்கள் மேலுலப் பயணத்துக்கும், மீன், பன்றி போன்ற உயிரினங்கள் கீழுலகப் பயணத்துக்கும் குறியீடுகளாக உள்ளன. மான், குதிரை போன்றவை மேலுலகப் பயணத்தின் வாகனக் குறியீடுகளாக உள்ளன. சில சமூகங்களில் பாம்புகளும் இடம்பெறுவதைக் காணலாம். சில சமூகங்களில் மான், குதிரை போன்ற விலங்குகள், நன்மையின் பொருட்டு வரும் மூதாதையரின் குறியீடுகளாகவும் இருக்கின்றன. இவ் உண்மையைச் சாமியாடியியம் சார்ந்த பாறை ஓவிய ஆய்வுகளும், அவ் ஓவியங்களைப் படைத்த சமூகத்தினரின் இனவியல் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

  குதிரை உருவம் உருவாக்கும் சிக்கல்

  இவ் ஓவியத் தொகுப்பில் ஒரு சாமியாடி குதிரையில் விரைவதுபோல் காட்டப்பட்டிருப்பது பெருங்கற்படைக் கால என்ற இரும்புக் காலப் படைப்பாக நிறுவ விவாதிக்கத் தோன்றும். சாமியாடியியத்தின்படி சாமியாடியின் குதிரைப் பயணம் என்பது பறை இசையோடு தொடர்புடையது. பறை என்பது ஒரு உயிரூட்டும் கருவி இன்னும் துல்லியமாக விலங்காக உயிரூட்டம் தரும் கருவி. பறைடன் சடங்கு நிகழ்த்தும்பொழுது இவ்வாறு உயிரூட்டம் பெறும் விலங்குகள் குதிரை, மான், ஒட்டகம் போன்றவை இருக்கின்றன. இது சைபீரிய, மத்திய ஆசிய சாமியாடிகளிடையே ஆய்வுசெய்து பெற்ற முடிவாகும். இங்கு, குதிரையில் விரையும் சாமியாடி ஒரு கையில் பறை போன்ற வட்டமான கருவி ஒன்றை ஏந்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

  மூலக்கொல்லை பாறைக்கலை

  பாறைக்கலை (Rock Art) என்னும் கலைச்சொல் பாறைக்கீறலையும் (Carving and Engraving) பாறைச் செதுக்குகளையும் (Base relief – Sculptured - on rock), பாறை ஓவியங்களையும் (Rock Paintings) ஒருசேரக் குறிக்கும் ஒரு சொல்லாகும். ஆங்கிலத்தில் பாறைக்கீறலையும், வரலாற்றுக்கு முற்பட்ட பாறைச்செதுக்கையும் Petroglyphs என்ற ஒரே சொல்லால் குறிப்பர். பாறைக்கீறல் என்பது கூர்முனை கொண்ட கல் அல்லது உலோகத்தால் ஆன கருவிகொண்டு சீராக்கப்பட்ட பாறையின் மேற்பரப்பில் கோடுகளால் ஆன உருவங்களைக் கீறி உருவாக்குவதாகும். செதுக்கு என்பது முழு பரும உருவமும் பாறையில் குழிவாகச் செதுக்கி அமைப்பதாகும். பொதுவாக, பாறை ஓவியங்களும் கீறல் செதுக்குகளும் தனித்தனியாகக் கிடைக்கும். உலகளவில் அரிதாகவே இந்தக் கலை வடிவங்கள் இணைந்து வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு பாறைச் செதுக்கையும், ஓவியத்தையும் இணைந்து உருவாக்கப்பட்டதொரு அரிய படைப்பாக மூலக்கொல்லை படைப்பு விளங்குகிறது.

  மணற்பாறை

  பாறை ஓவியங்கள், பொதுவாக வலுவான கிரானைட், நீசிஸ் போன்ற கடினப் பாறைகளிலேயே வரையப்படுவது வழக்கம். பாறையின் மேற்பரப்பு சீராக்கப்பட்ட, சமதளமாக்கப்பட்ட தளத்திலேயே ஓவியத்தைத் தீட்டும் மரபு பின்பற்றப்பட்டது. அரிதாகவே சீராக்கப்படாத தளத்தில் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காணமுடிகிறது. இக்குணத்துக்கு மாறுபட்டு, எளிதில் நொறுங்கும், வேகமான காற்றில் அரிப்புக்கு உள்ளாகும் மணற்பாறையில் மூலக்கொல்லை ஓவியமும் செதுக்கும் செய்யப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது. இக் குண்டுப்பாறையைச் சுற்றிலும் கடினப்பாறைகளும், குகை போன்ற மறைவுத் தளங்களும் நிறைய இருந்தும் இம்மணற்பாறையைத் தேர்வு கொண்டது ஏன் என்று விளக்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கான காரணத்தையும் உடனடியாக அறிந்துகொள்ள இயலவில்லை. இது வழிபாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டதால், ஒருமுறை மட்டும் அல்லது குறுகிய காலம் மட்டும் பயன்படுத்தும் நோக்கத்திலோ, அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் பொருட்டு உருவாக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடும் என்ற ஒரு அனுமானத்தை வைக்கலாம். அல்லது வழிபாடு நோக்கமின்றி, தங்கள் சமூகத்தின் சாமியாடிகளின் செயல் திறனையும், சிறப்புகளையும் அவர்கள் பெற்றிருந்த அறிவியல் வளர்ச்சியையும், குறிப்பாக உடற்செயலியல் மற்றும் கருவுறுதல் அறிவை வெளிப்படுத்த அச்சமூகத்தைச் சார்ந்த ஒரு கலைஞன் உருவாக்கிய படைப்பாகவும் இருக்கலாம்.

  இவ் ஓவியத் தொகுப்பும் செதுக்குகளும் மணற்கல்குண்டின் கீழ்ச்சரிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வீசும் காற்று இம்மணற்குண்டின் மேற்பரப்பில் செய்திருக்கும் அரிப்புகளைக் காணமுடிகிறது. இதனால் செதுக்குகளும் பாதிப்படைந்துள்ளன. ஓவியத் தொகுப்பின் ஒரு சில காட்சிகள் மங்கலாகியுள்ளன. இருந்தும், குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சாமியாடிகள் உருவப்படுத்திய கருப்பை, யோனி, கருமுட்டை, விந்து ஆகியவற்றின் செதுக்குகளின் முழுப்பரிமாணமும் அவற்றில் ஓவியங்கள் தீட்டப்பட்ட காட்சிகளும் சிறப்பாகத் தெரிகின்றன.

  மூலக்கொல்லை பாறைக்கலை

  மூலக்கொல்லை பாறைக்கலையில், பாறைச் செதுக்கு என்ற வகையில் கருப்பை, கருமுட்டையைக் குறிக்கும் வட்டம், விந்துவைக் குறிக்க நேர்க்கோடுகள் நான்கு எண்ணிக்கையில் என செதுக்கப்பட்டுள்ளன. யோனி வடிவம் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளதில், கருப்பைப் பகுதியில் இரு குழந்தைகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர். கருமுட்டையிலும் விந்துகளிலும் சாமியாடிகள் வழிபாட்டை நிகழ்த்துகின்றனர். இதற்கு இடதுபுறம் மற்றும் சில சாமியாடிகள் வருவதும் போவதும்போல் இருக்கின்றனர். இவர்களில் சிலர் உதவி சாமியாடிகளாகவும் இருக்கலாம்.

  சமூகத்தில் சாமியாடிகள் செல்வாக்கு மிகுந்திருந்த காலக்கட்டத்தை இப்படைப்பு குறிக்கிறது. குழந்தைப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட சாமியாடிகளை நாம் இங்கு காண்கிறோம். அவர்களிடையே குழந்தைப்பேற்றுக்கு  கருமுட்டையும், விந்தும், கருப்பையும் மூலக்காரணமாக இருக்கின்றன என்ற அறிவு வளர்ச்சி பெற்றிருந்த நிலையை இவ் ஓவியம் சான்று பகர்கிறது.

  அதேசமயம், குழந்தைப்பேறு குறைபாட்டுக்கு அல்லது வலிமையான, ஆரோக்கியமான நல்ல உடல்நிலை கொண்ட குழந்தை பிறப்புக்கு அதனதன் ஆவிகளே காரணம் என்ற தொல்சமய ஆவியுலக நம்பிக்கையும் கொண்டவர்களாக இச்சாமியாடிகள் இருந்துள்ளனர் என்பதையும் சுட்டுகிறது. அதனதற்குக் காரணமான ஆவிகளுடன் தொடர்புகொண்டு உரிய பரிகாரம் செய்யும் செயலையும் புரியும் சாமியாடிகளின் செயலை இவ் ஓவியத்தில் காண்கிறோம்.

  காட்சி விளக்கங்கள்

  யோனி - கருப்பை உட்குழிவான செதுக்கும் ஓவியமாக இரு குழந்தைகளும்

  கல்குண்டின் வலதுபுறம் கருப்பை-யோனி வடிவம் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. கருப்பைப் பகுதி சற்று ஆழமாகக் குழிக்கப்பட்டுள்ளது. யோனியின் வாய்ப்பகுதி குறுகியதாகவும், ஆழம் குறைவானதாகவும் குழிக்கப்பட்டுள்ளது. இது உடற்கூறின் மெய்மையை ஒட்டியதாக உள்ளது. கருப்பைப் பகுதியில் இரு குழந்தை உருவங்கள் முழுமனித வடிவிலேயே காட்டப்பட்டுள்ளன. இரு குழந்தைகளும் கைகோர்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இது கருப்பையில் இருக்கும் இரட்டைக் குழந்தைகளை காட்டுவது எனலாம்.

  கருமுட்டை, விந்து உருவங்களின் உட்குழிவான செதுக்குகளும், ஓவியமாக வழிபடும் சாமியாடி உருவங்களும்

  யோனிச் செதுக்குக்கு இடது புறம் கருமுட்டையும் அதற்குக் கீழ் விந்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. கருமுட்டைக்குள் இரு வரிசையில் 10 சாமியாடிகள் “மீவியல்பு மனித உருக்கள்” (காண்க: அடிக்குறிப்பு) எனப்படும் ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்தில் (Antrophomorphic) கைகளை மேல்தூக்கி ஆழ்ந்த தியானம் அல்லது வழிபாடு செய்யும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். மேல்வரிசையில் மூன்றாவதாக உள்ள உருவத்தில் இருந்து (தலையில் இருந்து?) ஒரு கோடு வளைந்து மேல்நோக்கிச் செல்கிறது. இது மேலுலகம் நோக்கிய பயணத்தைக் குறிப்பதாகலாம். கீழ்வரிசையில் உள்ள மூன்றாவதாக உள்ள உருவத்தில் இருந்து (காலில் இருந்து?) ஒரு கோடு வளைந்து கீழ்நோக்கிச் செல்கிறது. இது கீழ் உலகம் நோக்கிய பயணத்தைக் குறிப்பதாகலாம்.

  விந்துச்செதுக்கில், நான்கு வரிசையில், வரிசைக்கு, ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று மீவியல்பு மனித உருக்கள் உள்ளனர். இவர்கள் கருமுட்டையில் கண்டதுபோல் கைகளை மேல் உயர்த்தி ஆழ்ந்த தியானத்திலோ அல்லது வழிபடும் நிலையிலோ காட்டப்படாமல் விரைந்து செல்லும் கால் அசைவுகளோடு காட்டப்பட்டுள்ளனர். கால் அசைவுகள் ஒரு திசையைக் காட்டாமல், எதிரும்புதிருமான அசைவு இயக்கத்தோடு உள்ளன. முதல் இரு வரிசையில் மேலுள்ள உருவங்கள் சிதைந்துள்ளன. கீழ் இரு உருவங்கள் தெளிவாக உள்ளன. மூன்றாவது வரிசையில், மேல் உருவம் குதிரையில் விரைவதுபோல் காட்டப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் கீழிருந்து முதல் உருவங்களுக்கு மேல் ஒரு வளைகோடு ஓடுகிறது. (இவ்வளைகோட்டின் நோக்கம் புரியவில்லை. விந்துக்களை இணைத்து ஓடுவதால் விந்துக்களின் இடம் அல்லது விந்துக்களின் உலகம் என்பதைச் சுட்டுவதாக இருக்கலாம்). நான்கு வரிசைக்குப் பின்னரும் சில உருவங்கள் நடந்துசெல்லும் அசைவு இயக்கத்தோடே உள்ளனர். இவர்களை, கருமுட்டைக்கு அடுத்து காட்டப்பட்டுள்ள, வருவதும் போவதுமாக உள்ள உருவங்களோடு இணைத்துக் காணலாம்.

  வருவதும் போவதுமாக உள்ள சாமியாடிகள்

  கருமுட்டை மற்றும் விந்துச் செதுக்குகளுக்கு இடதுபுறமாக, மூன்று வரிசையில் சாமியாடி உருவங்கள் வருவதும் போவதுமான உடலசைவு இயக்கத்துடன் காட்டப்பட்டுள்ளனர். நடுவரிசை உருவங்கள், கருமுட்டை-விந்துச் செதுக்கின் மத்தியில் இருந்து துவங்குகிறது. இவ்வரிசையில் எட்டு உருவங்கள் உள்ளன. கீழ்வரிசையில் மூன்று உருவங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு முழுமையாக உள்ளன. மேல் வரிசையில் ஐந்து உருவங்கள் உள்ளன. ஒன்று சிதைந்துள்ளது.

  வளமையைக் குறிக்கும் × குறியீடும் வேற்றுலகப் பயணத்தைக் குறிக்கும் கோடும்

  வருவதும் போவதுமாக உள்ள மேல் வரிசை உருவங்களுக்கு மேல் கவனத்தில் கொள்ள வேண்டிய இரு குறியீடுகள் தீட்டப்பட்டுள்ளன. ஒன்று, × குறியீடு. + அல்லது × குறியீடுகள் வளமைக் குறியீடாகவும், மூத்தோர் வழிபாட்டை அடையாளப்படுத்தும் குறியீடுகளாகவும் தொன்மை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை. பழைமையான பாறை ஓவியங்களில் இருந்து தற்கால ஓவியங்கள் வரை இக்குறியீடுகளைக் காணலாம். இக்குறியீடுகளே இன்றைய மருத்துவத் துறையின் நோய் நீங்கி நலம்பெற பயன்படுத்தும் வளமைக்குறியீடாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த × குறியீட்டுக்கு மேல் ஒரு கிடைக்கோடு காட்டப்பட்டுள்ளது. பொதுவாக, இக்கோட்டை ஆறு என்று பொருள் கொள்ளும் பழக்கம் பரவலாக இருக்கிறது. சிலர் பாம்பு எனவும் பொருள் கொள்வர். சாமியாடியியத்தின் பின்புலனில் இது வேற்றுலகத்தைக் குறிக்கும் அல்லது வேற்றுலப் பயணத்தைக் குறிக்கும் குறியீடாகும்.

  உருவங்களின் காட்சியமைப்பு

  இவ்வோவியத்தில் இடம்பெற்றுள்ள உருவங்களின் காட்சி அமைப்பு கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. கருமுட்டையில் உள்ள இரு உருவங்கள் மனித வடிவுடன் அளவில் சிறிதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்துபவையாக உள்ளன.

  கருமுட்டையில் இடம்பெற்ற சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்கள், உயரத்திலும் தடிமனில் நடுத்தர அளவிலும் உள்ளன. இவ் உருவங்கள் ஓரிடத்தில் நின்றபடி ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாட்டில் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளன.

  விந்துக்களில் இடம்பெற்ற சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்கள், குச்சி வடிவத்தில் அளவில் சிறியதாகவும், எதிரும் புதிருமாக விரையும் உடல் அசைவுடனும் காட்டப்பட்டுள்ளனர்.

  வரும் போகும் நிலையில் உள்ள சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்களில் மேல் வரிசையில் உள்ள உருவங்கள் அளவிலும் தடிமனில் பெரியவை. கீழ்வரிசை உருவங்கள் உருவிலும் தடிமனில் நடுத்தரம் உடையவை. இவை ஏறத்தாழ கருமுட்டையில் உள்ள கீழ் வரிசை உருவங்களை ஒத்தவை.

  இவ் உருவங்கள் அறிவியலைச் சொல்கின்றனவா?

  இப்படைப்பில் சிற்பச் செதுக்குகள் குழந்தைப் பிறப்பு சார்ந்து கரு உருவாதலையும், அதில் கருமுட்டை, விந்து, கருப்பை, யோனி ஆகியவற்றின் பங்களிப்பையும் அதன் அறிவியலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இவற்றில் இடம்பெற்ற சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்கள் மீண்டும் மற்றொரு அறிவியலை நமக்கு வழங்குகின்றனவா என்று யோசிக்கவைக்கிறது. கருப்பையில் உள்ள அளவில் சிறிய உருவங்கள் குழந்தைகள் என்பது வெளிப்படையாக உள்ளது. கருமுட்டையின் உருவங்கள் நடுத்தரம் கொண்டவை. இவ் உருவங்கள் ஒரு நிலைத்த, உறைந்த அசைவற்ற தன்மையைக் கொண்டுள்ளன. இது, கருப்பையை அடைந்த கருமுட்டை பெறும் நிலைத்த, உறைந்த அசைவற்ற தன்மையியைக் காட்டுவதாகக் கொள்ளலாம். விந்துவைவிட கருமுட்டை அளவில் பெரியது என்பதால், இதில் இடம்பெறும் உருவங்கள் சற்று பெரியதாகக் காட்டப்பட்டுள்ளன எனவும் கொள்ளலாம்.

  அடுத்ததாக, விந்துக்களில் இடம்பெற்ற உருவங்கள் குச்சி வடிவில் எதிரும் புதிருமான அசைவு இயக்கத்துடன் உள்ளன. இது, விந்துவானது கருமுட்டையைத் துளைத்து உட்செல்லும் வரை தொடர்ந்து முன்னும் பின்னும் நீந்தும் அசைவு இயக்க அறிவியலைச் சொல்வதாகக் கொள்ளலாம். விந்தின் அளவு கருமுட்டையைவிடச் சிறியது என்பதால், இதன் உருவங்கள் இவ் ஓவியத் தொகுப்பிலேயே அளவில் சிறிதாகக் குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன எனலாம். இவ்விரண்டுக்கும் அடுத்து, வரும்போகும் நிலையில் காட்டப்பட்டுள்ள உருவங்களில் மேல் வரிசை உருவங்கள் அளவில் பிற உருவங்களைவிடப் பெரியவை. இது புறஉலகின் உருவங்களின் இயல்போடு உள்ளன எனலாம். கீழ் வரிசை உருவங்கள் புறஉலகில் இருந்து விந்து, கருமுட்டைகளின் அகஉலகங்களில் செல்ல தம் உருவங்களை குறுக்கிக்கொண்டுள்ளன எனக் கொள்ளலாம். அல்லது உதவி சாமியாடிகள் எனவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில், கருமுட்டையின் நிலைத்த தன்மையும் விந்துக்களின் அலையும் தன்மையுமான அறிவியல் உண்மையை இவற்றில் இடம்பெற்ற உருவங்களின் காட்சி அமைப்பு தெளிவிப்பதாக உள்ளது. ஒரு கருமுட்டையைப் பல விந்துக்கள் தாக்கி, வலுவான விந்து முட்டையினுள் சென்று கருவை உருவாக்கும் என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில், இங்கு ஒரு கருமுட்டையும் ஒன்றுக்கு மேற்பட்டது என்பதாக நான்கு விந்துக்களையும் காட்டியுள்ளதன் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

  சிறப்புகள்

  குழந்தைப் பிறப்பு பற்றிய புதிர் புலப்படாத நிலையில், தொல்பழங்கால மக்கள் அது குறித்து பல குழப்பங்களை அடைந்தனர். இதன் காரணமாக, யோனியில் இருந்து குழந்தை வெளிவருவது போன்ற பிறப்புச் சித்திரங்களை முதலில் வழிபட்டனர். அதுபற்றிய தெளிவு கிடைக்கக் கிடைக்க, பெண்குறி யோனியும் ஆண்குறி லிங்கமும் குழந்தைப் பிறப்பில் பெரும்பங்கு ஆற்றுகின்றன எனத் தெரிந்துகொண்டு அவற்றை வழிபட்டனர். அறிவு வளர்ச்சியோடு கருமுட்டை, விந்து, கருப்பை ஆகியவை குழந்தை உருவாவதற்கும், வளர்வதற்கும் மூலக் காரணங்களாக விளங்குகின்றன என்பதை அறிந்துகொண்டனர். இத்தகைய அறிவு வளர்ச்சி பெற்றிருந்த காலகட்டத்தை மூலக்கொல்லை படைப்பு அடையாளப்படுத்துகிறது.

  ஓவியச் செய்தி

  ஆரோக்கியமான குழந்தைப் பிறப்புக்கு அல்லது குழந்தைப் பிறப்பில் உருவான இடையூறுக்கு சாமியாடிகள் மேற்கொண்ட செயலை இந்த ஓவியம் தெரிவிக்கிறது.

  ஆரோக்கியமான குழந்தைப் பிறப்புக்கு அல்லது குழந்தைப் பிறப்பில் உருவான ஏதோ ஒரு இடையூறை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அக்கால மருத்துவர்களான சாமியாடிகள் மேற்கொள்ளும் செயல்கள் இதில் விளக்கப்படுகின்றன. குழந்தைப் பிறப்புக்குக் கருமுட்டை, விந்து, கருப்பை ஆகியவற்றின் இன்றியமையாமை பற்றி இவர்கள் பெற்றிருந்த அறிவு இன்றை மருத்துவ அறிவியலுக்கு இணையானதாகும். ஆரோக்கியமான குழந்தைக்கு ஆரோக்கியமான கருமுட்டையும் ஆரோக்கியமான விந்தும் அவசியம்; அதனை நோக்கிய செயலிலோ அல்லது கருமுட்டை கோளாறுக்குக் காரணமாக இருக்கும் அதன் காரண ஆவிகளுடனும், விந்துக் கோளாறுக்குக் காரணமாக இருக்கும் அதன் காரண ஆவிகளுடனும் சாமியாடிகள் தொடர்புகொண்டுள்ளதை, வேண்டுதல் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளதை இவ் ஓவியம் எடுத்தியம்புகிறது. வேறு கோணத்தில், கருப்பையில் இரு குழந்தைகள் காட்டப்பட்டிருப்பதால், இரு கருக்களின் வளர்ச்சி, ஆரோக்கியமான இரட்டையர்பேறு ஆகியவற்றுக்காகவோ, அல்லது அதனால் எழுந்த சிக்கலைச் தீர்க்க முனைந்த சாமியாடிகளின் செயலாகவோ இதனைக் காணமுடிகிறது.

  ஒப்பாய்வு

  சாமியாடிகளின் செயல்களைக் காட்டும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலிருந்தும், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, பின்லாந்து முதலிய நாடுகளில் இருந்தும் அறியப்பட்டுள்ளன. இவை சாமியாடிகளின் மருத்துவம், நடனம், பாடலுடன் நடனம் மெய்மறந்த நிலை, ஆண்-பெண் குறிகளைக் காட்டும் வளமைச் சடங்குகள், மூவுலகப் பயணம், மூதாதையர் வணக்கம், மூதாதையரின் உதவியை கோருதல், மேலுலகினர், புனித ஆவிகள், தெய்வங்களை வணங்குதல் மற்றும் வானவியல் சார்ந்த செய்திகளை நமக்கு வழங்குகின்றன. இவற்றுள் தென் ஆப்ரிக்காவின் சான் பழங்குடியினர், சைபீரியப் பழங்குடியினர், ஐரோப்பியரின் பாகன் இனத்தினரின் ஓவியங்கள் போன்றவை புகழ்பெற்று விளங்குகின்றன. இவை வானவியல் சார்ந்த ஓவியங்கள் தவிர பிற அறிவியல் சார்ந்த செய்திகளை நமக்கு வழங்குவதில்லை. மருத்துவம் சார்ந்த செய்திகளை வழங்கும் சில ஓவியங்கள் மருத்துவ குணம் வாய்ந்த சில செடி கொடிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் மனித உடல்செயலியல் சார்ந்த அறிவியல் செய்தியைத் தரும் ஓவியமோ, பாறைச் செதுக்கோ, பாறைக்கீறலோ என் அறிவுக்கு எட்டியவரை இடம் பெற்றிருக்கவில்லை. மூலக்கொல்லைப் படைப்புதான் இந்த வகையில் உடல்செயலியலை, குறிப்பாக குழந்தைப் பிறப்பு குறித்தான அறிவியலைத் தரும் முதல் பாறைக்கலைப் படைப்பாக விளங்குகிறது.

  காலம்

  நான் இப்பாறைக்கலையின் காலம் மு.பொ.ஆ. 3000 எனக் கொண்டு, இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் பண்பாட்டு ரீதியில் புதிய கற்காலத்தில் இனக்குழுத் தலைமை உருவாவதற்கு முற்பட்ட; சாமியாடிகளின் செல்வாக்கும், தலைமைப்பண்பும் மிகுந்திருந்த காலக்கட்டம் எனவும் கணித்துள்ளேன். நாளை அல்லது இதன் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ள மூலக்கொல்லை பாறை ஓவியம்-2 பற்றிய ஆய்வுக் குறிப்புகள் வெளிவரும் வரை இதன் காலம் குறித்து விவாதிக்க விரும்புவோர் காத்திருக்க வேண்டப்படுகிறது.

  ***

  அடிக்குறிப்பு: மீவியல்பு மனித உருக்கள்

  வரலாற்று ஆசிரியர்களாலும், தொல்லியலாளர்களாலும் ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்துக்கு “மனித உருவங்கள் அல்லது மனித வடிவங்கள்” என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். நானும் இவ்வாறான பயன்பாட்டை வேறு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இதற்கு வேறு சொல்லை உருவாக்க வேண்டியது அவசியம் என பல சமயங்களில் உணர்ந்தது உண்டு. ஏனெனில், மனித உரு என்னும் போதும் சரி, மனித வடிவம் எனும் போதும் சரி, அது முழு மனித உருவத்தின் பொருளுக்கு அழைத்துச்செல்கிறது. அதாவது, மனித உரு எனும்பொழுது அது “Human Figure” என்ற பொருளையே வழங்குகிறது. ஆனால், தொல்லியல் பொருளில் “Human Figure” என்பது வேறு “Antrophomorphic” என்பது வேறு. சில ஆசிரியர்கள் ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்துக்கு Human like figures, அதாவது “மனிதனைப் போன்ற உருவங்கள்” என வேறுபாட்டை உணர்த்தும்விதமாக குறிப்பர். உண்மையில், ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவம் என்பது “குறை அல்லது மிகையான மனித உறுப்புகள் கொண்ட மனிதனைப் போன்ற உருவமாகும். உதாரணமாக, தலை இல்லாமல் இருக்கும் உருவங்கள். இவ்வகைக்குச் சான்றாக தாணிப்பாடி மோட்டூர் மற்றும் உடையாநத்தம் விசிறிப்பாறை என்ற பெருங்கற்காலச் சின்னங்களைக் குறிப்பிடலாம். இவை தலையற்ற குறை மனித வடிவங்களாகும். மிகை மனித வடிவங்களின் வகைக்கு பல பாறை ஓவியங்களைக் காட்டலாம். தலை மிகப்பெரியதாகக் காட்டுவது, பிளவுற்று இருப்பது, கழுத்து நீண்டிருப்பது, கரங்களில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக கூடுதலோ குறைவாகவோ இருப்பது போன்றும், அளவில் மிகப்பெரியதாகவும் மிகையான காட்சியாகவும் கட்டப்படும். பொதுவாக, இவை இயற்கை இயல்பிழந்த மனித உருக்களாகவே இருக்கும். எனில், இவை “மீவியல்பு மனித உருக்கள்” என்பதில் பொருந்துவதாக உள்ளது. இனி, “மீவியல்பு மனித உருக்கள்” என்ற சொல்லையே ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்துக்கு உரிய சொல்லாகப் பயன்படுத்த இருக்கிறேன்.

  ***

  வேண்டுகோள்

  தொல்பொருள்களை அழிப்பதில், சிதைப்பதில், அலட்சியமாகக் கையள்வதில், புறக்கணிப்பதில் தமிழர்களுக்கு இணை தமிழர்கள் மட்டுமே. இரண்டாண்டுகளுக்கு முன் வெங்கட்டாபுரம் – கல்யாணபோடி குகை ஓவியத்தை வெளிப்படுத்திய 5 நாள்களுக்குள், அது பெற்ற சிதைவுகளைக் கண்டவுடன் 4000 ஆண்டுகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்த அதனை ஏன் வெளிப்படுத்தினோம் என்ற வேதனையும் மனஉலைச்சலும் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை. அறிவுக்குறைவு காரணமாக யாரும் இதனைச் செய்வதில்லை. பெருமித உணர்வில், தங்களின் வருகைக்குச் சான்றாகவும், அழிப்புச் சிதைப்பு வேலையில் தன்பங்களிப்பு இது என்பதை தெளிவான அறிவோடு தங்களின் திட்டமிட்டே செய்துவருகின்றனர்.
  மூலக்கொல்லை-1 பாறைக்கலை, மணற்கல் பாறையில் செதுக்கும் ஓவியமும் இணைந்து படைக்கப்பட்டுள்ளது. ஆர்வக்கோளாறுகளும், விஷமிகளும் எளிதில் சிதைக்கப்படக்கூடிய இந்தப் படைப்பை என்ன கதிக்கு ஆளாக்குவார்களோ என்று ஈரக்குலை நடுக்கத்தோடு கவலைப்படுகிறேன்.
  தமிழகத் தொல்லியல் துறைக்கு ஆணையாளராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயச்சந்திரன், அவர்களுக்கும் இதன்மூலம் வேண்டுதல் விடுக்கின்றேன். பாறை ஓவியம் குறித்த எந்தவொரு ஆய்வும் முழுமையானதல்ல; எல்லோரும் ஏற்கத்தகுந்த ஒன்றாக இருப்பதில்லை என்பதை அறிவேன். இதனையொட்டி, பண்பாடு அடிப்படையில் இங்கு வெளிப்படுத்தப்பட்ட காலம், உள்ளுரைபொருள் குறித்து மாறுபாடான கருத்துக்கள் எழலாம்.
  ஆனால் இது வெளிப்படுத்தும் அறிவியல், மருத்துவம் சார்ந்த உண்மை உலகையே ஈர்க்கக்கூடியது. உலகச் சாமியாடிகள் குறித்த ஆய்வுகளுக்குப் புதிய திறப்புக்களை வழங்கக்கூடியது. இந்திய-தமிழகப் பங்களிப்பை உறுதிசெய்வதாக இருக்கும். இப்படைப்பு குறித்த ஆய்வுகள் உலகளவில் பெரும் விவாதத்துக்கும், மறுஆய்வுக்கும் அழைத்துச்செல்வதாக இருக்கும். என் அனுபவ எல்லையில் இருந்து கூறமுடிவது என்னவென்றால், இப்படைப்பின் உன்னதத்தால்; வெளிப்படுத்தும் அறிவியல் சார்ந்த அறிவால் இது உலகப் புகழ் பெறக்கூடும். ஆகச்சிறந்த தொல்படைப்புகளின் அட்டவணையில்; இடவரைபடத்தில் இது இடம்பெறக்கூடும். அல்லது தமிழகத்துக்குச் சிறப்பு சேர்க்கும் என்பதால், ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படலாம். எவ்வாறாயினும், எவ்வகைப்பட்ட ஆய்வுகளுக்கும், தொடர்ந்த மறுஆய்வுக்கும், விவாதத்துக்கும், அறிஞரின், தொல்லியளாளர்களின் வருகைக்காகவும் இது காப்பாற்றப்பட வேண்டும். சிறு சேதமின்றி காப்பாற்றப்பட வேண்டும்.
   
  கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai