சந்தைப்படுத்துதல்: மதிப்புகூடும் விளைபொருள்கள்

சுற்றுப் பகுதியில் எளிதாகக் கிடைக்கும் மூலப்பொருள்களை, மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்தி தொழில் முனைவோராக வலம் வருகிறார் விவசாயி மோகன் (எ) சுப்புராயன்.
சந்தைப்படுத்துதல்: மதிப்புகூடும் விளைபொருள்கள்

சுற்றுப் பகுதியில் எளிதாகக் கிடைக்கும் மூலப்பொருள்களை, மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்தி தொழில் முனைவோராக வலம் வருகிறார் விவசாயி மோகன் (எ) சுப்புராயன்.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையைச் சேர்ந்தவர் மோகன் (எ) சுப்புராயன். 35 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் டி.எம்.நாராயணன், உயிரித் தொழில்நுட்பவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
 சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், மகனின் கல்வியையும், தனது அனுபவத்தையும் சுப்புராயன் பயன்படுத்த விரும்பினார். 2016-இல் இயற்கை உணவுத் தொழில்கூட அலகைத் தொடங்கினார். அதில், புதிய தொழில் சாதனங்களைப் பயன்படுத்தி, மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து வருகிறார்.
 சூரிய உலர்த்தி மூலம் எண்ணெய் சுத்திகரிப்பு, மதிப்புக்கூட்டுப் பொருள்கள், கருப்பட்டியை (பனை வெல்லம்) பயன்படுத்தி மிட்டாய்கள் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து சுப்புராயன் கூறியதாவது:
 1989-இல் முந்திரி எண்ணெய் உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வந்தேன். தொழில் போட்டி காரணமாக அதைத் தவிர்த்து, ஏலம், வெற்றிலை, பிரண்டையில் எண்ணெய், வாழைத்தண்டு சாறு எடுத்து பிரே டிரையர் மூலம் பொடியாக்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தேன். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்தையடுத்து, ஏற்றுமதி தடைபட்டது.
 தொடர்ந்து, உள்ளூரில் சுத்தமான எண்ணெய் தயாரித்து அளிக்கத் திட்டமிட்டு, 2016-இல் அதிகை நேச்சுரல் புட்ஸ் என்ற தொழில்கூடத்தைத் தொடங்கினேன்.
 மணிலா குறுகிய காலப் பயிர், அதில் பித்தத்தின் தன்மை அதிகம். இந்தப் பித்தத்தைக் குறைக்க நாட்டு கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை ஒரு லிட்டருக்கு 100 கிராம் அளவில் கலந்து, கல்மர செக்கில் எண்ணெய் ஆட்டி எடுக்கிறேன். கல்மர செக்கில் எண்ணெய் பிழிவதால் எண்ணெய் சூடாவது தவிர்க்கப்படுகிறது. எடுத்த எண்ணெயை சூரிய வெப்ப உலர்த்தி கொண்டு 3 முதல் 4 நாள்கள் வரை வைத்து பதப்படுத்தி வடிகட்டாமல் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். மேலும், முதல் தரமான எள்ளுடன், 10 சதவீதம் தரமான பனைவெல்லத்தை சேர்ந்து எண்ணெய் பிழியப்படுகிறது. இதையும் மேற்கொண்ட முறையில் பதப்படுத்தி இயற்கைத் தன்மை மாறாமல் நுகர்வோர்களுக்கு வழங்கி வருகிறோம்.
 பலாவுக்கு பெயர் பெற்றது பண்ருட்டி. பலா உற்பத்தியில் 90 சதவீதம் பழமாகவே நுகரப்படுகிறது. இதை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் வகையிலும், பயன்படுத்துவோர் அதில் உள்ள சத்துகளை முழுமையாகப் பெறும் வகையிலும் பல்வேறு வகையாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கிறோம்.
 குறிப்பாக, பிஞ்சு, 70 சதவீதம் முற்றிய காய் மற்றும் அதன் விதைகளைக் கொண்டு வத்தல், பொடி, காபிக்கு மாற்றாக பலா விதை காபித் தூள் தயாரிக்கப்படுகின்றன. மேற்கண்ட பொருள்கள் பல்வேறு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.
 இதுமட்டுமல்லாமல், 90 சதவீதம் முற்றிய வாழைப் பழத்தை தரமான தேனில் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்து, சூரிய வெப்ப உலர்த்தியில் 48 மணி நேரம் உலர்த்தி அவற்றை குழந்தைகள் உணவுப் பொருளாகவும், பயணத்தின் போது சாப்பிடவும், வாழைப்பழ சாக்லேட் என மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி வருகிறோம்.
 மேலும், கருப்பட்டியை மூலப்பொருளாகக் கொண்டு, நிலக்கடலை, எள், ஆளி விதை, சூரிய காந்தி விதை, தர்பூசணி விதைகளைப் பயன்படுத்தி மிட்டாய்களைச் செய்து சந்தைப்படுத்தி வருகிறோம். மேற்கண்ட தயாரிப்புகளுக்கு சந்தையில் நல்ல வாய்ப்பு உள்ளது. பலா விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சியையும் அளித்து வருகிறோம் என்றார் அவர்.
 - ஜீவ.இராம.ஸ்ரீநிவாஸன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com