தோட்டக்கலை: மூலிகைச் செடி வளர்ப்பு

கிராமப் பகுதிகளில் பசுமை என்பது இயற்கையாகவே அமைந்துள்ளது. பார்வைக்கு விருந்தளிக்கும் பசுமைகள், மனதை அமைதியாக்கி ரசிக்கத் தூண்டுகிறது.
தோட்டக்கலை: மூலிகைச் செடி வளர்ப்பு

கிராமப் பகுதிகளில் பசுமை என்பது இயற்கையாகவே அமைந்துள்ளது. பார்வைக்கு விருந்தளிக்கும் பசுமைகள், மனதை அமைதியாக்கி ரசிக்கத் தூண்டுகிறது. ஆனால், நகர்ப் பகுதிகளில் கட்டடங்களுக்கு இடையே மரம், செடி வளர்ப்பு என்பது மிகுந்த சவாலானது.
வீட்டில் பசுமையை ஏற்படுத்த வாய்ப்புள்ள இடங்களில் பூ, பசுமை தரும் செடிகள் வளர்ப்பதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், வாழ்க்கை சூழலில் மரம், செடிகளை தேடிச் சென்று வாங்கி வந்து நடுவது என்பது பலருக்கும் சாத்தியமில்லை.
சுப நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி விழாக்களில் மரம், மூலிகைச் செடிகளை தாம்பூலத்துடன் பரிசாக அளிப்பதின் மூலம் மரம் வளர்ப்பு, செடி வளர்ப்பை அதிகப்படுத்த முடியும் என்கிறார் முதுநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர் சக்திவேல்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், நாற்றங்கால் நடுவம் (நர்சரி) உரிமையாளர். இவரது மகன் சக்திவேல். முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர்.
பசுமையைப் பேண வேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைத் துறந்து தற்போது, தனது நாற்றங்கால் மையத்தில் மரம், மூலிகைச் செடிகளை வளர்த்து "விருட்ச தாம்பூலம்' என்ற பெயரில் தனது குழுவின் மூலம் வீடுதோறும் மரக் கன்றுகள், மூலிகைச் செடிகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சக்திவேல் கூறியதாவது:
தமிழர்களின் பெரும்பாலான சடங்குகளில் தாம்பூலம் இடம் பெறுகிறது. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தாம்பூலம் கொடுத்து அழைப்பது, நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்வதும் தமிழர் வழக்கம்.
தாம்பூலத்தோடு மரக்கன்று, மூலிகைச் செடிகளை அளிக்கும் பழக்கம் தமிழரிடம் இருந்து வந்துள்ளது. அந்த வழக்கத்தை இப்போது எங்கள் நிறுவனம் விருட்ச தாம்பூலம் என்ற பெயரில் உயிர்ப்பித்து உள்ளது. புவி வெப்பமடைதல் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவியல் அறிஞர்கள் வெளியிடும் அறிவிப்புகள் பூமிக்கு ஆபத்தானவை என கூறுகின்றன. அதன் பாதிப்புகளில் இருந்து புவியைக் காக்கவும், மாசில்லா எதிர்கால சமுதாயத்தை உருவாக்க மரம், செடிகளை வளர்க்க வேண்டும். வீடுதோறும் ஓர் அரிய மரம், மூலிகைச் செடிகளை மகிழ்வான தருணங்களில் நினைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது எங்களின் குறிக்கோள். 50 ஆண்டுகள் வாழும் ஒரு மரம் உற்பத்தி செய்யும் பிராண வாயுவின் மதிப்பு சுமார் ரூ.6.4 லட்சம் எனக் கணக்கிடுகின்றனர். மேலும், காற்றில் உள்ள மாசுவை அகற்றுவது, மண் அரிப்பைத் தடுப்பது, பறவை மற்றும் விலங்குகளுக்கு புகலிடமாக அமைந்து, வாழும் வரையில் காய், கனிகளை வழங்கி, மடிந்தாலும் மரப் பொருள்களாக மாறி பயன்படுபவை மரங்கள்.
இத்தகைய மரங்களையும், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட மூலிகைச் செடிகள், அழகு மலர்ச் செடிகளை 100 சதவீதம் மக்கும் மூலப்பொருள்கள் மூலம் உற்பத்தி செய்கிறோம்.
பூ, மூலிகை, பழம், மரம் என 4 வகைகளாகப் பிரித்து, சுமார் 80 வகையான கன்றுகளை உற்பத்தி செய்கிறோம். இவற்றை விருட்ச தாம்பூலம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எனது குழுக்களின் மூலம் விநியோகம் செய்து வருகிறோம் என்றார் அவர்.
- ஜீவ.இராம.ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com