நவீன கருவி: விவசாயிகளுக்கு உதவும் சூரிய விளக்குப் பொறி

விவசாயத் தொழிலை லாபகரமானதாக்க விவசாயிகளும், அரசுத் தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவீன கருவி: விவசாயிகளுக்கு உதவும் சூரிய விளக்குப் பொறி

விவசாயத் தொழிலை லாபகரமானதாக்க விவசாயிகளும், அரசுத் தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 நிலங்களில் தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களை அழித்து சாகுபடி பாதிப்புக்குக் காரணமாகின்றன. பயிர்களைக் காக்க ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், விவசாய நிலங்கள் விளைச்சலுக்குத் தகுதியற்றதாக மாறி வருகின்றன.
 விவசாயிகளுக்கு உதவும் வகையில், பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிக்கும் சூரிய ஒளி விளக்குப் பொறியை புதுச்சேரியைச் சேர்ந்த தொழில் முனைவோர் எம்.அப்துல்காதர் கண்டுபிடித்துள்ளார்.
 மின்னணு பொறியாளர் பணியைத் துறந்துவிட்டு, விவசாயிகளுக்கு உதவும் விதமாக இந்தச் சூரிய ஒளி விளக்குப் பொறியை கடந்த 2012-இல் கண்டுபிடித்தார். இதை 2014-இல் சந்தைப்படுத்தினார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
 பண்டைக் காலத்தில் விளைநிலங்களுக்கு மாலை நேரத்தில் தீப்பந்தங்களுடன் செல்லும் விவசாயிகள், அதை கையில் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடி பூச்சிகளை அழிப்பார்கள். இதை முன்னுதாரணமாகக் கொண்டே, சூரிய ஒளியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அலைவரிசையில் உள்ள புற ஊதாக்கதிர்களின் வழியாக நன்மை செய்யும் பூச்சிகளை விடுத்து, தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கும் வகையில் இந்த சூரிய ஒளி விளக்குப் பொறியைக் கண்டுபிடித்தேன்.
 ஓர் ஏக்கருக்கு ஒரு சூரிய விளக்குப் பொறியை வைத்தாலே போதுமானது. அதிலுள்ள கணினி மூலம் வரையறுக்கப்பட்ட நேரத்தில் விளக்கு எரிந்து, குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் சுற்றும், தீமை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து விளக்குப் பொறிக்குள் கீழ் வைக்கப்படும் எண்ணெய் கலந்த நீரில் விழச் செய்து சாகடித்து விடும்.
 உணவுக் கிடங்குகள், காளான் வளர்ப்பிடங்கள், உணவு தானிய சேமிப்பகங்களிலும் இந்த விளக்குப் பொறியைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 இந்த முறையில் தண்டுதுளைப்பான், கதிர்நாவாய் பூச்சி, இலைச் சுருட்டுப் புழு, வெட்டுக்கிளிகள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய் துளைப்பான் உள்ளிட்ட தீமை செய்யும் தாய் - தந்தை பூச்சிகள் அழிக்கப்படுவதால், புதிய பூச்சிகள் உருவாக்கம் தடுக்கப்பட்டு, விவசாய நிலம் காப்பாற்றப்படும். இதன் மூலமாக விவசாயத்தில் 35 சதவீத அளவு சேதம் தவிர்க்கப்பட்டு, 50 சதவீத அளவுக்கு மகசூல் அதிகரிக்கிறது.
 இந்த விளக்குப் பொறிக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமம், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு ஆகியவை பாராட்டுகளைத் தெரிவித்தன.
 இந்தக் கருவிக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளேன். ஆனால், சந்தையில் போலிகள் பலவும் உலவுகின்றன என்றார்.


 -க.கோபாலகிருஷ்ணன்
 படங்கள்: கி.ரமேஷ் (எ) ஜெயராமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com