வியாபாரம் - அங்காடித் தெரு!

சுற்றுலாப் பயணிகளின் விரும்பத்தக்க இடமாக புதுச்சேரி விளங்குகிறது என்றால் மிகையல்ல. இங்கு ஆன்மிகச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, சூழல் சுற்றுலா, விருந்தோம்பல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என
வியாபாரம் - அங்காடித் தெரு!

சுற்றுலாப் பயணிகளின் விரும்பத்தக்க இடமாக புதுச்சேரி விளங்குகிறது என்றால் மிகையல்ல. இங்கு ஆன்மிகச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, சூழல் சுற்றுலா, விருந்தோம்பல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என பலவகை சுற்றுலாவை மையமாக வைத்து சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
 மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், புதுச்சேரி கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், பாரதியார் அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம், பாரதி பூங்கா, புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பிரெஞ்சு கட்டடக் கலையுடன் கூடிய பிரம்மாண்ட கட்டடங்களைக் கண்டு ரசிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
 மேலும், வார விடுமுறை நாள்களில் பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வருவது இப்போது அதிகரித்து வருகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் வார நாள்களில் ஆயிரக்கணக்கிலும், வார விடுமுறை நாள்களில் பல ஆயிரக்கணக்கிலும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.வார விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திழுப்பது ஞாயிறு சந்தை. இந்தச் சந்தை முழுவதும் நடைபாதை வியாபாரிகள் மட்டுமே விற்பனை செய்வது வழக்கம்.
 நேரு வீதி, மகாத்மா காந்தி வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சந்தை நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி வீதியில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கும், நேரு வீதியில் சுமார் அரை கி.மீ. தொலைவுக்கும் இந்தச் சந்தை பரந்து விரிந்து கிடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் இரவு 12 மணி வரை இந்தச் சந்தை இயங்கி வருகிறது.
 இந்தச் சந்தையில் விற்பனை செய்யும் 90 சதவீத வியாபாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 5 சதவீத வியாபாரிகள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நத்தம், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், மதுரை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் இங்கு வந்து விற்பனை செய்கின்றனர்.
 இந்தச் சந்தையில் கிடைக்காத ஜவுளி ரகங்களே இல்லை எனலாம். கரூரில் உற்பத்தியாகும் திரைச்சீலைகள், வெள்ளைச் சட்டை ரகங்கள், மிதியடிகள், ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தியாகும் போர்வைகள், ஜட்டிகள், துண்டுகள், லுங்கிகள், கைக்குட்டைகள், துணிப்பைகள், படுக்கை விரிப்புகள், பெண்களின் உள்ளாடைகள், நத்தம், புதியம்புத்தூரில் உற்பத்தியாகும் குழந்தைகளுக்கான ஆடை ரகங்கள் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
 மேலும், பீங்கான் பொருள்கள், ஜாடிகள், பூட்டு வகைகள், செல்லிடப்பேசி உதிரிப் பாகங்கள், மின்னணு, மின் சாதனப் பொருள்களும் விதவிதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் மலிவு விலையில் கிடைப்பதால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆடை ரகங்களை வாங்கத் தவறுவதில்லை. குறிப்பாக, இங்கு விற்பனை செய்யப்படும் பருத்தியிலான ஆயத்த ஆடை ரகங்கள் வெளிநாட்டினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
 அதேபோல, வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தும் பாத்திரங்கள், பெங்களூரு, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் தொட்டிச் செடிகள் உள்ளிட்டவையும் இங்கு கிடைக்கும்.பெங்களூரு, திருப்பூர் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் பனியன் ரகங்கள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் போட்டி போட்டு வாங்குவது வழக்கம். அதுமட்டுமன்றி, மசாலாப் பொருள்கள், தின்பண்டங்கள் என அனைத்து விதமான பொருள்களும் இங்கு கிடைக்கின்றன.
 ஒரே பகுதியில் அனைத்துப் பொருள்களும் மலிவு விலையில் கிடைப்பதால் புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் இச்சந்தையைப் பார்வையிட்டு கொள்முதல் செய்யத் தவறுவதில்லை. இந்தச் சந்தை நடைபெறும்போது பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சந்தை தினத்தின்போது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு காந்தி வீதியில் அனுமதி இல்லை. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி, சிறு வியாபாரிகளுக்கும் இந்தச் சந்தை வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.
 - பீ.ஜெபலின் ஜான்
 படம்: கி.ரமேஷ் (எ) ஜெயராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com