அலுமினிய பாத்திரங்கள் உற்பத்திக்கு நவீன இயந்திரங்கள்

நாகரிகம் துவங்கி மனிதர்கள் சமைத்து சாப்பிட ஆரம்பித்த காலத்தில் இருந்து, சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாறிவருகிறது.
அலுமினிய பாத்திரங்கள் உற்பத்திக்கு நவீன இயந்திரங்கள்

நாகரிகம் துவங்கி மனிதர்கள் சமைத்து சாப்பிட ஆரம்பித்த காலத்தில் இருந்து, சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாறிவருகிறது.
 மண் பாண்டத்துக்கு மாற்றாக அலுமினியப் பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த அலுமினியப் பாத்திரங்கள் சேதமானால் அவை மறு சுழற்சி மூலம், புதிய பாத்திரங்களாக பயன்படுத்த முடியும். வீடுகளில் சமைக்க , குளிக்க , தண்ணீர் எடுத்து செல்ல என மக்கள் பயன்படுத்தும பொருள்களில் அலுமினியப் பாத்திரங்களுக்கு முக்கிய இடமுண்டு.
 அலுமினியத் தகடுகளை மூலதன பொருள்களாக பெற்று அதைக் கொண்டு பாத்திரங்கள் தயாரித்து, பின் அவை சந்தைக்கு விற்பனைக்கு செல்கின்றன.
 நவீன காலத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால் அலுமினியப் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராவது இல்லை என்றும் கூறப்படுகிறது.
 விலை குறைவு என்பதால் பெரும்பாலானோர் தற்போது பிளாஸ்டிக் பக்கம் செல்கின்றனர். தொடர் மின் வெட்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை , ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகிய மூன்று கண்டங்களைத் தாண்டியே பணிகளை செய்து வருவதாக அலுமினிய பொருள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து அலுமினியப் பொருள்கள் உற்பத்தியாளர் ம.சுந்தரம் கூறியதாவது:
 நான் கடந்த 30 ஆண்டுகளாக அலுமினியப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
 ஆரம்பத்தில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சென்று பின் படிப்படியாக முன்னேறி இன்று தனியாக இரண்டு இயந்திரங்களை வைத்து அலுமினியப் பாத்திரங்களை உற்பத்தி செய்து வருகிறேன். அலுமினியப் பாத்திரங்களுக்கு தனி வரவேற்பு இருந்தது. உடைந்த பழைய அலுமினிய பாத்திரங்களைக் கொடுத்துவிட்டு புதிய பொருள்களை வாங்கிச் செல்வார்கள். பெரும்பாலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாட்டில் முக்கிய பொருள்களாக அலுமினியப் பாத்திரங்கள் இருந்து வருகின்றன.
 தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் அலுமினியப் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் பொருள்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொடர் மின் வெட்டு இதுவரை பாத்திர உற்பத்தியாளர்கள் பார்க்காத அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முதலீடுகள் செய்ய முடியாமல், விற்பனை செய்ய முடியாமல் , தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் இன்னல்களை சந்தித்தோம்.
 மூன்றாவதாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் பிரச்னைகள் துவங்கி உள்ளன. தமிழக அரசு அலுமினிய உற்பத்தி பொருள்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளித்தது. ஆனால் தற்போது வாங்கப்படும் மூலதன பொருள்களுக்கு 18 % ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. விற்பனைக்கு 12 % வரி விதிக்கப்படுகிறது. இதனால் 6% வரி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. வரியில் ஏற்கெனவே அரசு அறிவித்த அலுமினிய பொருள்களுக்கான
 வரிச் சலுகை அல்லது 4 முதல் 5% வரி விதிப்புகள் அமல்படுத்த வேண்டும். மேலும் தொழிலாளர்களை பொருத்தவரை குறைவான உடல் உழைப்பில் அதிக சம்பளம் வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதனால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. உடல் உழைப்பை செலுத்தி செய்ய வேண்டிய இந்த அலுமினிய பொருள் உற்பத்தித் தொழிலுக்கு அடுத்த தலைமுறை வருவார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
 எனவே, இனிமேல் பல கோடி மதிப்பிலான இயந்திரங்களை வாங்கி தானியங்கி தொழிற்நுட்பம் மூலம் அலுமினிய பொருள்கள் உற்பத்தி செய்யும் காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.
 - க.தென்னிலவன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com