ஊதியம், ஆள்கள் பற்றாக்குறை பிரச்னைகளால் சிக்கலில் தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது தேயிலை விவசாயமாகும்.
ஊதியம், ஆள்கள் பற்றாக்குறை பிரச்னைகளால் சிக்கலில் தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது தேயிலை விவசாயமாகும். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் 45,000 ஏக்கரிலும், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 20,000 ஏக்கரிலும், டேன்டீயில் 4,311 ஹெக்டேரிலும் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பல விவசாயிகள் வருவாய் நிலங்களிலும், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் செக்ஷன் 17 நிலங்களிலும் தேயிலை பயிரிட்டுள்ளனர். இவற்றையும் சேர்த்தால் நீலகிரியில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளதாக சிறு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 இதில் சாகுபடி செய்யப்படும் பசுந்தேயிலை 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 இந்தத் தொழிலில் சுமார் 60,000 சிறு மற்றும் குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலைப் பயிரிடப்பட்டுள்ளதால் மலைக் காய்கறி மற்றும் சிறு தானியங்களை பயிரிடுவது குறைந்து அவற்றுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. தேயிலை வாரியம் தொழிற்சாலைகள் தொடங்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தேயிலைத் தொழில் செழிப்படைந்தது.
 ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்திக்கான மூலப்பொருளான பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நலிவடைந்த விவசாயிகள் பலர் தங்கள் தோட்டங்களை விற்று பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல தோட்டங்கள் தற்போது கட்டட காடுகளாக மாறி சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய போதிய அளவில் வேலையாள்களும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு தேயிலைத் தோட்டங்களைக் காட்டிலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகளில் ஊதியம் அதிகமாக கிடைப்பதால், கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஊரக வேலை வாய்ப்பு பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.
 இதுதொடர்பாக தேயிலை சாகுபடியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சை வி.மோகன் கூறியதாவது:
 பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்ட பின் பெரும்பாலான சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களை வெளியாள்களுக்கு விற்பனை செய்துவிட்டு கிடைத்த பணத்தைக் கொண்டு வெளியூர்களுக்கு கிளம்பிவிட்டனர். குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கேயே குடியமர்ந்து விட்டனர். பெரும்பாலான விவசாயிகள் அங்குள்ள நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர். அரை ஏக்கர் நிலத்தை வைத்துள்ளவர்கள் தங்களது தோட்டத்தில் மாதந்தோறும் உழைத்து கிடைக்கும் பணத்தை விட சமவெளிப் பகுதிகளில் ஆண், பெண் என இருவரும் நிறுவனங்களில் பணியாற்றினால் அதை விட இரு மடங்கு ஊதியம் கிடைப்பதால் ஏராளமான சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களை விற்பனை செய்து விட்டு சென்றுவிட்டனர்.
 தற்போது தாழ்வான மற்றும் தண்ணீர் அருகேயுள்ள விவசாய நிலங்களில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
 இதுபோன்ற விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்றால் குறைந்த அளவே கூலி கிடைக்கும் நிலையில், பெரும்பாலான கூலி தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் கூட தற்போது தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். தேயிலைத் தோட்டங்களில் நாள்தோறும் உழைத்தால், குறைந்தபட்சம் ரூ. 80 முதல் ரூ.100 வரை மட்டுமே ஊதியமாக கிடைக்கும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கு அதிக பணிகளும் கிடையாது. உடல் உழைப்பு குறைவாகவே உள்ளது. எனினும், இவர்களுக்கு ரூ.100-க்கு மேல் ஊதியம் கிடைப்பதால், தற்போது பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் இந்த பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். இதுமட்டுமின்றி, இந்தப் பணிகள் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படுவதால், ஆண் மற்றும் பெண்களுக்கு குடும்பம் நடத்த தேவையான தொகையும் கிடைத்துவிடுகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற கூலி தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.
 இதே பிரச்னை தொடர்பாக பெருந்தோட்ட அதிபர்களும் சிக்கலில் தவித்துவருவதாக தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவர் ஏ.ஈ.ஜோசப் குற்றம்சாட்டுகிறார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 150 ஆண்டுகளாக உள்ள தென்னிந்திய தோட்டங்களுக்கு சவாலான நேரம் இது. இந்தத் தோட்டங்கள், தென்னிந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்பவை. ஊரகப் பகுதியில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. நாட்டின் பிற மாநிலங்களை விட தென் மாநிலங்களில்தான் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. தாராளமயமாக்கல் காரணமாக சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.
 தேயிலை, காபி, ரப்பரின் விலை உற்பத்தி விலையை விட குறைவாக உள்ளது. தோட்டப் பயிர்கள் குறித்து 1995 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி நெல்லுக்கான விலை 4.8 மடங்கு உயர்ந்துள்ளது. சோளத்துக்கு 5.67 மடங்கும், கோதுமைக்கு 4.84 மடங்கும், பருப்பு வகைகளின் விலை 6 முதல் 8.72 மடங்கும் உயர்ந்துள்ளன. ஆனால், தேயிலையின் விலை 2.46 மடங்கும், காபியில் அராபிக்கா விலை 1.92 மற்றும் ரோபஸ்டாவின் விலை 1.58 மடங்கும், ரப்பரின் விலை 2.47 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் ஊதியம் 7.69 மடங்கு உயர்ந்துள்ளது. காபி தொழிலாளர்கள் ஊதியம் 9.72 மடங்கு மற்றும் ரப்பர் தொழிலாளர்களின் ஊதியம் 8.2 மடங்கு உயர்ந்துள்ளது.
 நிலத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், பெருக்கவும் ஆய்வு செய்ய பெரும் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், இன்றைய சூழலில் இது முடியாததாகும். நோய் மற்றும் பூச்சிச் தாக்குதலை எதிர்கொள்வதோடு வறட்சியை தாங்கவும், மகசூல் அதிகமாக கிடைக்கும் பயிர் வகைகளே தற்போதைய தேவையாகும். மேலும், ஆள்கள் பற்றாக் குறையால் அறுவடைக்கு இயந்திரங்கள் வேண்டும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தோட்டக்கலைத் துறையில் உள்ள பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
 தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்கவும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் மானிய விலையில் மினி டிராக்டர் மற்றும் டில்லர் இயந்திரம் வழங்கப்படுவதாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
 தற்போது காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வது மிகவும் கடினமாகி வருகிறது. விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேளாண் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்தத் தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பயிர் செலவினை குறைக்கவும், உழுதல் பணியினை சுலபமாக்கிடவும், ஆள்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும் தற்போது விசை உழுவை, மினி டிராக்டர் போன்றவற்றை தோட்டக்கலைத் துறை அறிமுகம் செய்துள்ளது.
 சராசரியாக ஒரு ஏக்கர் உழவு செய்து மண்கட்டிகளை உடைத்து நிலம் தயார் செய்யும் பணிக்கு ரூ. 7,000 வரை செலவு பிடிக்கும். இதே பணியை விசை இயந்திரம் வைத்து பயன்படுத்தும்போது ரூ. 4 ஆயிரம் மட்டுமே செலவாகும். பவர் டில்லரை இயக்குவது மிக எளிது. சிறிய படிமட்டங்களிலும் பவர் டில்லரை உபயோகித்து இயந்திரத்தை மேற்கொள்ள முடியும். ஆள்கள் பற்றாக்குறையை சமாளித்து விரைவில் பணியை மேற்கொள்ள முடியும். பவர் டில்லரை வாங்க மானியமாக ரூ.4,000 அல்லது பவர் டில்லரின் விலையில் 25 சதவீதம் மானியம், இதில் எது குறைவோ அது விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும். மேலும் மினி டிராக்டர்கள் வாங்க அரசு மானியமாக ரூ.45,000 அல்லது மினி டிராக்டரின் விலையில் 25 சதவீதம், இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும் என்றனர்.
 - ஏ.பேட்ரிக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com