கோவை நகரின் அடையாளத்தை மாற்ற வரும் 3 பாலங்கள்

ஒரு நகரின் வளர்ச்சியில் சாலைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கோவை நகரின் அடையாளத்தை மாற்ற வரும் 3 பாலங்கள்

ஒரு நகரின் வளர்ச்சியில் சாலைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை மாநகருக்கு பாலங்கள் அத்தியாவசியத் தேவைகளாக உள்ளன. தடையற்ற போக்குவரத்து வசதியும், தரமான சாலைகளும் கோவை மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதுடன், அந்நிய முதலீடுகள், பெருநிறுவன முதலீடுகளையும் ஈர்த்து அதன் மூலம் நகரின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.
 கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றபோது, மாநகரில் பல்வேறு புதிய பாலங்கள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, கோவை மாநகரின் அடையாளத்தையே மாற்றக் கூடிய வகையில் மூன்று சாலைகளில் பிரம்மாண்டமான பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவையில் உள்ள திருச்சி பிரதான சாலை வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக உள்ளது.
 இந்த சாலையில், சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் மூன்று இடங்களில் மட்டுமே சிக்னல்கள் இருந்தாலும், உக்கடம், ரெட்பீல்டு, பங்கஜா மில், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூர், ஹோப் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுடன் இணைக்கும் சாலைகள் திருச்சி சாலையில் இணைவதால் காலை, மாலை வேளைகளில் இந்த சாலை வழியே செல்வது சவாலானதாக மாறியுள்ளது.
 இதற்காக திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் இருந்து கோவை பங்குச் சந்தை வரை சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு ரூ. 253 கோடி செலவில் பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. நான்கு வழிப் பாதையாக அமையும் இந்தப் பாலத்தின் அகலம் சராசரியாக 17.20 மீட்டராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கம் ரவுண்டானா பகுதியில் இந்தப் பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக இருக்கும். சுங்கம் ரவுண்டானா பகுதியில் இந்த மேம்பாலத்தில் இருந்து வாலாங்குளம் சாலையில் ஒரு இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. அது 8.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த இறங்கு தளத்தின் நீளம் 400 மீட்டராகும்.
 இந்தப் பாலத்துக்காக மொத்தம் 111 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே உள்ள தூரம் 25 மீட்டர் ஆகும். பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட உள்ளது. பொள்ளாச்சி, கேரளத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்த முடியும்.
 அங்கிருந்து வரும் வாகனங்கள் வாலாங்குளம் பாலத்தில் இறங்கி இடதுபுறம் திரும்பி கிளாசிக் டவர் வழியாக திருச்சி சாலையை அடைந்து ரெயின்போவில் தொடங்கும் புதிய பாலம் வழியாக செல்லலாம். இதேபோல கோவை-திருச்சி சாலை வழியாக கேரளம், பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக வந்து சுங்கம் ரவுண்டானாவில் இருந்து வாலாங்குளம் புறவழிச் சாலையில் அமைக்கப்படும் இறங்கும் தளம் வழியாக வந்து உக்கடம் செல்லலாம்.
 சுங்கம் ரவுண்டானாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில் இருந்து வாலாங்குளம் சாலையில் இறங்குவதற்காக மட்டுமே ஒரேயொரு இறங்குதளம் அமைக்கப்படுகிறது. வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக வரும் வாகனங்கள் புதிய பாலத்தில் ஏற முடியாது. ரெயின்போவில் இருந்து புதிய பாலத்தில் செல்லும் வாகனங்கள் பங்கு சந்தை முன்பு முடிவடையும் பாலத்தில்தான் இறங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 உக்கடம் மேம்பாலம்
 அதேபோல், உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி, கேரளத்துக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாலும், கடை வீதியையொட்டி இருப்பதாலும் உக்கடத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில், உக்கடம், ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார்.
 இந்தப் பாலத்துக்கான பணியும் தற்போது தொடங்கியுள்ளது. உக்கடம் சந்திப்பு முதல் ஆத்துப்பாலம் வரையிலும் சுமார் 1.50 கி.மீ. நீளத்துக்கு நான்கு வழி ஓடுதளத்துடன் சுமார் ரூ.170 கோடியில் பாலம் கட்டப்படுகிறது. இந்தப் பாலத்துக்கு டவுன்ஹால் சந்திப்பில் ஒரு இறங்கு தளமும், செல்வபுரம் புறவழிச்சாலையில் ஒரு இறங்கு தளமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் இணைவதற்கு வசதியாக பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு இறங்கு தளமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், மறுமுனையில் பொள்ளாச்சி சாலைக்கு ஒரு இறங்கு தளமும், பாலக்காடு சாலைக்கு ஒரு இறங்கு தளமும் கட்டப்படுகிறது.
 அவிநாசி சாலை மேம்பாலம்
 கோவையின் மிக முக்கிய சாலையாக விளங்குவது அவிநாசி சாலையாகும். மாநகரில் உள்ள மற்ற சாலைகளைக் காட்டிலும் அதிக அகலத்தில் இருந்தாலும் வாகன எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவிநாசி சாலை எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்த சாலையில் உப்பிலிப்பாளையம் அருகே தொடங்கி விமான நிலைய சாலை சந்திப்பைக் கடந்து சின்னியம்பாளையம் அருகில் முடிவடையும் வகையில் சுமார் 9.50 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் இந்தப் பாலம், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது.
 நான்கு வழிச் சாலையாக அமையும் இந்தப் பாலத்தில் பல இடங்களில் ஏறுதளம், இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன. செல்லும் வழியில், அண்ணா சிலை - குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பு இடையேவும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி அருகிலும் ஏறுதளங்களும், பீளமேடு காவல் நிலையம், கொடிசியா சாலை, விமான நிலைய சாலை பகுதிகளில் இறங்குதளங்களும் அமைய உள்ளன.
 வரும் வழியில், சி.ஐ.டி. கல்லூரி, பீளமேடு காவல் நிலையம் பகுதிகளில் ஏறுதளங்களும், ஹோப் கல்லூரி, ராதாகிருஷ்ணன் மில், நவ இந்தியா, குப்புசாமி நாயுடு மருத்துவமனை - அண்ணா சிலை அருகே இறங்குதளங்களும் அமைக்கப்பட உள்ளன. ஹோப் கல்லூரி சந்திப்பில் டைடல் பார்க் பகுதியில் சாலையைக் கடக்க சுரங்கப் பாதையும், லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. பாலம் கட்டும் பணிக்காக சுமார் 170 இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு பாலத்துக்கான வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்த மூன்று பாலங்களைத் தவிர்த்து காந்திபுரம் மேம்பாலத்தின் இரண்டாம் அடுக்கு பாலம் விரைவில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அத்துடன், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.65 கோடியில் மேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதைத் தவிர, மேட்டுப்பாளையம் சாலை - சத்தி சாலை - அவிநாசி சாலை - திருச்சி சாலையை இணைக்கும் வகையில் அரைவட்ட சாலை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது.
 குனியமுத்தூரில் இருந்து மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரைச் சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையும் வகையில் ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம், சாலைப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால் கோவையின் அடையாளம் மாறுவதுடன், அதன் வளர்ச்சியும் அடுத்த கட்டத்துக்கு உயரும் என்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com