சுற்றுலாத் திட்டங்களுக்காக போராடும் வால்பாறை!

இயற்கையாகவே காட்சியளிக்கக்கூடிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட பகுதி என்பதால் 7 ஆவது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது கோவை மாவட்டத்தில் உள்ள
சுற்றுலாத் திட்டங்களுக்காக போராடும் வால்பாறை!

இயற்கையாகவே காட்சியளிக்கக்கூடிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட பகுதி என்பதால் 7 ஆவது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை. பொள்ளாச்சியில் இருந்து 64 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வால்பாறை பகுதிக்கு வரும் வழியில் சமவெளிப் பகுதியான ஆழியாறில் உள்ள பூங்கா, குரங்கு அருவி ஆகிய சுற்றுலாத் தலங்களோடு துவங்குகிறது கொண்டை ஊசி வளைவுகள். இதில் 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் நின்று பார்த்தால் ஆழியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் அனைத்தும் கண்ணுக்குப் பசுமையாக காட்சியளிக்கும். அட்டகட்டி பகுதியைத் தாண்டினால் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் நிலவும் பனி மூட்டத்தில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தே செல்ல வேண்டும். பச்சை பசேலென பச்சை கம்பளம் விரித்ததைபோல காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தாலே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிந்துவிடும் வால்பாறையை அடைந்துவிட்டோம் என்று. வால்பாறைக்கு வருபவர்கள் முதலில் செல்வது கருமலை எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பாலாஜி கோயில். தென்மலை திருப்பதியில் இருப்பதைபோலவே வெங்கடேச பெருமாள் இங்கு காட்சியளிக்கிறார்.
 வால்பாறை நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் ஒரே மலைப்பகுதி அக்காமலை புல்மேடு பகுதியாகும். உலகத்தில் இப்படியும் ஒரு புல்மேடு உள்ளதா என்பதை வந்து பார்த்தால் மட்டுமே தெரியும். அடர்ந்த புல்வெளிகள் கொண்ட அப்பகுதிகள் முழுவதும் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
 வெள்ளமலை நீர்சுரங்கம் என்பது நீராறு அணைப் பகுதியில் இருந்து துவங்கி சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கம் வழியாக ஆர்ப்பரித்து வரும் தண்ணீரைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அங்கிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருப்பது அதிக மழை பெய்யக்கூடிய பகுதியான சின்னக் கல்லாறு அணைப் பகுதி. வால்பாறை பகுதியில் ஏராளமான ஆறுகள் இருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் சென்று குளிக்கக்கூடிய ஒரே ஆறு கூழாங்கல் ஆறு. குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆற்றில் நீண்ட நேரம் பொழுதை கழித்து குளிக்காமல் திரும்புவதில்லை. இதேபோல வால்பாறை பகுதியில் பல்வேறு பள்ளத்தாக்குகள் அமைந்திருந்தாலும் நல்லமுடி காட்சிமுனை பகுதியில் இருந்து காணப்படும் பள்ளதாக்கு போன்று வேறு எங்கும் காணமுடியாது. அப்பகுதியில் இருந்து பார்த்தால் கேரள மாநிலம் வனப் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் தெரியும்.
 சோலையாறு அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கல் அணையாகும். இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. குழந்தைகள் விளையாடி மகிழ சிறிய பூங்காவும் அருகிலேயே எழில்மிகு உயரமான பகுதியில் அரசு விருந்தினர் மாளிகையும் அமைந்துள்ளன.
 இயற்கையாக அமைந்துள்ளப் பகுதிகளைக் காண்பதற்காகவும் இப்பகுதியில் நிலவும் காலநிலை மாற்றத்தை அனுபவிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் அரசு மூலம் எந்த ஒரு சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
 தமிழகம் மற்ற மலைப் பகுதிகளில் அமைந்திருக்கும் பூங்கா, படகு இல்லம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் வால்பாறையில் இல்லாமல் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
 இதுகுறித்து வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளரும் கிரீன் ஹில்ஸ் ஹோட்டல் உரிமையாளருமான எம்.ஜி.ஷாஜி ஜார்ஜ் கூறியதாவது:
 வால்பாறை சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என அரசிடம் கடந்த 10 ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் எந்த பலனும் இல்லாமல் எங்களுக்குத் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தேயிலைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தினால் மட்டுமே வரும் காலங்களில் வால்பாறை செழிப்பாக இருக்கும் என்றார்.
 எம்.மோகன்தாஸ்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com