வேளாண்மைக்கு உதவும் கோவை பம்ப்செட்டுகள்

வேளாண்மை முக்கியத் தொழிலாக உள்ள தமிழகத்தில், பாசனத்துக்காக நீர் இறைக்கும் இயந்திரங்களை நம்பியிருந்த விவசாயிகளுக்காக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து,
வேளாண்மைக்கு உதவும் கோவை பம்ப்செட்டுகள்

வேளாண்மை முக்கியத் தொழிலாக உள்ள தமிழகத்தில், பாசனத்துக்காக நீர் இறைக்கும் இயந்திரங்களை நம்பியிருந்த விவசாயிகளுக்காக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இருந்து பம்ப்செட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதையடுத்து கோவையில் 1928 ஆம் ஆண்டில் பம்ப்செட் தயாரிக்கும் தொழில் தொடங்கியது. அன்று முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலும் இந்தத் தொழிலில் தேசிய அளவில் கொடிகட்டிப் பறந்தது கோவை. நாட்டின் மொத்த மோட்டார் உற்பத்தியில் 60 சதவீத பங்கு வகித்ததுடன் கோவைக்கு தொழில் நகரம் என்ற பெயரையும் இதுவே பெற்றுக் கொடுத்துள்ளது.
 கோவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு பம்ப் செட் உற்பத்தியாளர்கள், 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள், இந்த நிறுவனங்களுக்கான உதிரி பாகங்கள், ஜாப் ஆர்டர்கள் செய்வோர் என சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தொழில் இது. சுமார் 1,200 அடி ஆழத்தில் இருந்து நீரை எடுத்து வரும் 150-க்கும் மேற்பட்ட வகையான ஆழ்துளை மோட்டார்கள், ஜெட் வகை பம்ப் செட், மோனோபிளாக் வகை, திறந்தவெளி நீர் மூழ்கி மோட்டார்கள், கம்ப்ரசர்கள், ஆயில் என்ஜின்கள் என பல நூறு வகையான பம்ப் செட், மோட்டார்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
 இருப்பினும் இவற்றுக்கான முக்கிய உதிரி பாகங்களான செம்பு தளவாடங்கள், காயில் கட்டும் வயர், காந்த அலைத் தகடுகள், உருக்கு இரும்பு, துருப்பிடிக்காத இரும்புத் தகடுகள், குழாய்கள் போன்றவை 90 சதவீதம் அளவுக்கு வட மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்து வந்த தில்லி, மும்பை, குஜராத் பகுதி தொழில் முனைவோர், கடந்த 10 ஆண்டுகளாக பம்ப் செட் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கோவையில் பயிற்சி பெற்று சென்றவர்கள் இப்போது கர்நாடகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் தொழிற்சாலைகளை அமைத்து பம்ப் செட் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கோவைக்கு வந்து கொண்டிருந்த வியாபாரம் சரிவடையத் தொடங்கியது.
 இப்போது தினசரி சுமார் 25 ஆயிரம் மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்பட்டு, அதில் 70 சதவீதம் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டாலும், மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பிற மாநில தயாரிப்புகளுடன் கோவை போட்டியிட முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே மெல்ல குறைந்து வந்த வியாபாரம், 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் வெட்டு, இலவச மின் மோட்டார் திட்டம் அறிவிப்பு, மின் சிக்கனத்துக்கான நட்சத்திர குறியீடு அமலாக்கம் போன்றவற்றால் வேகமாக சரிவடைந்தது.
 கோவையின் பாரம்பரிய தொழில், சிறப்புத் தொழில் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தத் தொழிலின் மொத்த வணிகம் ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு வெகுவாக சரிந்துவிட்டது என்கிறார் கோவை மாவட்ட மோட்டார் பம்ப் செட் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ். தொடக்கத்தில் 5 சதவீத வாட் வரியுடன் இருந்த இந்தத் துறைக்கு, ஜி.எஸ்.டி.யில் மூலப் பொருள்களுக்கு 18 முதல் 28 சதவீத வரியும், அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுகளுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இதுபோன்ற முரண்பாடான ஜி.எஸ்.டி. விதிப்பால் வர்த்தகம் பெருமளவுக்கு குறைந்துவிட்டது.
 தினசரி ரூ. 50 கோடி மதிப்பில் விற்பனையாகி வந்த பம்ப்செட்டுகள் தற்போது வெறும் ரூ.5 கோடி அளவுக்கே விற்பனையாகின்றன. தொழிலில் நிலவும் கடுமையான போட்டி, விவசாயிகள் எண்ணிக்கை குறைவது, கட்டுமானத் தொழில் முடங்கியிருப்பது போன்ற பல காரணங்களால் மோட்டார், பம்ப்செட் தொழில் ஸ்தம்பித்துள்ளது.
 குறு, சிறு, தொழில்கள், ஜாப் ஆர்டர்களுக்கு சலுகை வேண்டும் என்று முதலாவது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தற்போது நடைபெற்ற 37 ஆவது கூட்டத்தில்தான் என்ஜினீயரிங் ஜாப் ஆர்டர்கள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 ஜி.எஸ்.டி. வரவால் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் சிறு, குறு மோட்டார், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்களால் போட்டியிட முடியவில்லை. இதனால், சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பம்ப்செட்டுகள், உதிரி பாகங்கள் மீதான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மேலும், அரசு நிறுவனங்கள் யாவும் தங்களுக்குத் தேவையான பம்ப் செட், மோட்டார்களை கோவையில் உள்ள சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் வகையிலும் உத்தரவிடுவதன் மூலம் அழிவைத் தடுக்க முடியும்.
 அதேபோல், தொழிலுக்குத் தடையாக உள்ள மூலப் பொருள் திடீர் விலை உயர்வு, மோட்டார் பரிசோதனைக் கூடம், கள்ள சந்தையில் விற்பனையாகும் வெளி மாநில மோட்டார்கள் போன்ற பிற பிரச்னைகளையும் களைய வேண்டும். பவுண்டரி தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்களை மத்திய அரசு நிறுவனம் நியாயமான விலையில் வழங்குவதைப்போல், பம்ப்செட் உற்பத்தியாளர்களுக்கும் உள்ளூரிலேயே மூலப் பொருள் வங்கி திறக்க வேண்டும். தரச் சான்று பெறுவதற்கு பட்டேல் சாலையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் விண்ணப்பித்தால் 3 மாதங்களாகின்றன. அதே நேரம் தனியார் நிறுவனத்தில் சான்று பெற ஒரு மாடலுக்கு ரூ.12 ஆயிரம் செலவாகிறது.

 எனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத் தொழில் மையத்தின் கீழ் செயல்பட்ட மண்டல பொது பரிசோதனை நிலையத்தை சீரமைக்க வேண்டும். அதேபோல் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் கண்காட்சிகளில் பங்கேற்று வாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். சுமார் ரூ.3 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கக் கூடிய இந்தத் தொழில், ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இப்போதோ இந்தத் தொழிலை விட்டு வெளியேறுவது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
 ஆண்டொன்றுக்கு குறைந்தது ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.9 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகத்தைக் கொண்டிருந்த இந்த தொழில், கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்தது. இப்போது அது கவலை அடையச் செய்யும் விதத்தில் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. படித்த, படிக்காத இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய இந்தத் தொழிலுக்கு, புதிய தொழில் முனைவோரை வரச் செய்வதும், கோவை பம்ப்செட்டுகள் தேசிய அளவில் பழையபடி 60 சதவீத சந்தையை பிடிப்பதும் அரசின் கைகளில் மட்டுமே உள்ளது.
 இதற்காக கோவையில் உள்ள பம்ப்செட் தயாரிப்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகளை அரசு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கு "ரோடு ஷோ' நடத்தி ஆர்டர்களை பிடிக்க உதவிட வேண்டும் என்கிறார் மணிராஜ்.
 - க.தங்கராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com