Enable Javscript for better performance
இல்லத்தில் இருந்தே வருவாய் ஈட்ட வீட்டுக் காய்கறி தோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இல்லத்தில் இருந்தே வருவாய் ஈட்ட வீட்டுக் காய்கறி தோட்டம்

    By DIN  |   Published on : 11th October 2019 11:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Snake-Gourd-Pictures

    இல்லத்திலிருந்தபடியே பெண்கள், ஆண்கள் என இருபாலரும் வருவாய் ஈட்டும் வேளாண் தொழிலாக அமைந்திருப்பது வீட்டுக் காய்கறித் தோட்டமாகும். காய்கறிகள் நமது அன்றாட வாழ்வுக்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன.
     ஊட்டச்சத்து வல்லுநர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவுக்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டால், ஒருவர் ஒரு நாளுக்கு 120 கிராம் அளவு காய்கறிகளையே பெற முடிகிறது.
     நமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில் நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது.
     மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கியப் பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு ரசாயனங்கள் படிவதை தவிர்க்க முடியும்.
     நிலம் தயார் செய்தல்: நிலத்தை 30 முதல் 40 செ.மீ வரையிலான ஆழத்துக்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45X60 செ.மீ. என்ற இடைவெளியில் பாத்தி அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.
     விதைத்தல் மற்றும் நடவு செய்தல்: நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாத்தியின் ஒரு புறத்தில் 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
     முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும். நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாள்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாள்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்காலிலிருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.
     பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும். தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய காலப் பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, போன்றவற்றை நட வேண்டும். ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும். ஆண்டுப் பயிர்களாக முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி பயிரிடலாம்.
     சிறிய அளவிலான தோட்டத்தில் செலவுகள் போக மாதம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும்.
     தோட்டம் அமைக்க இடம் தேர்வு செய்தல்
     வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தோட்டம் அமைக்கத் தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாகப் பராமரிக்கவும், வீட்டின் சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறித் தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai