Enable Javscript for better performance
கல்லிலே கலைவண்ணம் காணும் கலைஞர்கள்- Dinamani

சுடச்சுட

  
  cglsirpam

  பண்டைய கலாசாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றைப் பிரதிபலிக்கும் தலைமுறை வரலாற்றை சிற்பக்கலை வளர்ந்து வருகிறது.
   பண்டைய மத்தியதரைக் கடல் நாகரிகம், இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்க கலாசாரங்கள் இன்றளவும் அப்பகுதிகளில் உள்ள சிற்பங்கள் உயிரோவியமாக காட்சியளிக்கின்றன. பல்வேறு கலாசாரங்களில் சிற்பங்கள் பெரும்பாலும் மத வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன.
   மனிதனின் கற்பனைத்திறன் கண்டுபிடிப்புகள் மூலம் கல், மரம், உலோகம் இவற்றினால் சிற்பங்களை உருவாக்கி தன் கற்பனைத்திறனை கொண்டு வந்துள்ளான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வர்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பவை சிற்பம் வடிக்க ஏற்றவை என்று சாத்திரங்களைக் கூறும் பிங்கள நிகண்டு என்ற இலக்கியம் கூறுகிறது.
   பொதுவாக கல்லில் கருங்கல், மாக்கல், பளிங்குக்கல் , சலவைக்கல் ஆகியவற்றையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு ஆகியவற்றிலும் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. தான் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு சிற்பங்களை உருவாக்கி தனது கற்பனைத் திறனை வெளிக்கொண்டு வருபவன் சிற்பி.
   இன்றளவும் மாமல்லபுரத்தில் உயிரோவியங்களாகத் திகழும் படிமச்சிற்பங்கள், புடைப்புச்சிற்பங்கள் காண்பவர் உள்ளத்தை கவர்ந்திழுக்கின்றன. கோயில்கள், மண்டபங்கள் இவற்றில் காணப்படும் சிற்பங்கள் அன்றைய நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்கும் வண்ணமாக அமைந்துள்ளன.
   முப்பரிமாண காட்சிகளை விளக்கும் படிமச் சிற்பங்கள், ஒரு பக்கத்தை மட்டும் காட்டும் சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்கள் எனவும் கூறப்படுகின்றன.
   கலைநயத்துக்கு உதவும் நவீன கருவிகள்: மாமல்லபுரத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் இரும்பினால் தயாரிக்கப்பட்ட சிறிய பெரிய உளிகளைக் கொண்டு நுண்ணிய சிற்பங்கள் வடிக்கப்பட்டன.
   தற்போது சிரமம் ஏதும் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் மின்மோட்டார் பொருத்திய நவீன துளையிடும் கருவிகள், பாலிஷ் போடுவதற்கான கருவிகளும் சிற்பங்கள் உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அக்காலத்தில் சிற்பத்தை செதுக்கி முடிப்பதற்கு காலம் அதிகமாகும்.
   தற்போது புதிய கருவிகளைக் கொண்டு வேலையை எளிதாகவும் குறைந்த கால அவகாசத்திலும் செய்ய முடிகிறது. மாமல்லபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அங்குள்ள அரசு சிற்பக்கலை கல்லூரியில் பயின்றோர் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர்.
   பொதுவாக சிற்பம் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிற்பக்கலைஞர்களைக் கேட்கும்போது, மற்ற தொழில்களைவிட கலைநயமிக்கதும் வருவாய் ஈட்டக் கூடிய வாயப்பையும் தரும் தொழில். ஆர்டரின் பேரில் கோயில்களுக்கு வேண்டிய விநாயகர், பெருமாள், ஆஞ்சநேயர், நடராஜர் , நாகதேவதை சிலைகள் துவாரக பாலர்கள் உள்ளிட்ட தெய்வச் சிலைகளையும், நந்தி, யானை, யாளி ஆகிய சிலைகளையும் செய்து தருகிறோம் என்கின்றனர்.
   வீடுகளில் வைப்பதற்கு பிள்ளையார் சிலைகள், தேவதைகள் உள்ளிட்ட உருவச் சிலைகளையும் சிற்பக்கலைஞர்கள் வடிவமைக்கிறார்கள். சிலைக்கடத்தல், சிலைகள் பதுக்கி வைப்பது போன்ற குற்றச் சம்பவங்களால் சிலைகளை விற்பனைக்கு அனுப்புவதில் கெடுபிடிகளும் சிக்கலும் இருந்து வந்தது.
   தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கோயில்கள் மட்டும் அல்லாமல் பூங்காக்களில் வைப்பதற்காக கண்கவரும் மாடர்ன் ஆர்ட் என சிற்பக்கலை மென்மேலும் வளர்ந்து வருகிறது.
   வெளிநாட்டினரை கவரும் கலை: இதுமட்டுமல்லாமல் மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு கலைஞர்கள் இங்குள்ள சிற்பக்கலையை ரசிப்பதுடன் சிற்பக்கலையை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் இத்தாலி, ஜெர்மனி, ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டுக் கலைஞர்கள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாமல்லபுரத்துக்கு வந்து தங்கி இங்குள்ள சிற்பக்கலைக் கூடங்களில் சிற்பக்கலையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
   இதுகுறித்து சிற்பக்கலைஞர் யானை வரதன் கூறியது: எனது சொந்த ஊர் திருக்கழுகுன்றம் ஒரகடம் கிராமம். எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம்.
   நான் மாமல்லபுரம் வரும்போது சிற்பங்கள் செதுக்குவதைப் பார்த்து சிற்பம் செய்வதில் ஆர்வம் கொண்டு 16 வயதிலேயே ஒரு சிற்பக்கலைக் கூடத்தில் பணிக்கு சேர்ந்து தொழிலைக் கற்றேன். அந்த 3 ஆண்டுகள் அனுபவம் தான் சொந்தமாக சிற்பக்கலைக்கூடம் வைத்து, தற்போது 15-க்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வரும் நிலைக்கு உயர்த்தியுள்ளது.
   தற்போது தெலங்கானாவில் யாதகிரி குட்டாவில் லட்சுமி நரசிம்மன் கோயிலுக்கு ரூ. 2 ஆயிரம் கோடியில் சிற்ப வேலைகள் செய்து வருகிறோம். பிகாருக்கு அனுப்புவதற்காக 13 அடி உயரத்தில் ஸ்ரீரங்கநாதர் சிலையும், பெருமாளின் அவதாரமான தசாவதாரம் சிலையும் செய்து வருகிறோம்.
   பொதுவாக சிற்பங்கள் செதுக்குவதற்கான கல் பல்வேறு இடங்களில் கிடைத்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், சிறுதாமூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து சிற்பம் செதுக்குவதற்கான கல்லை கொண்டு வருகிறோம்.
   சிறுதாமூர் குவாரியில் எடுக்கப்படும் கற்கள் சிற்பம் செய்வதற்கு உகந்தவையாக உள்ளன.
   தமிழக அரசு சிற்பக்கலைக்கான குவாரி ஒன்றை தனியாக உருவாக்கித் தந்தால் தமிழ்நாட்டில் சிற்பக்கலை மேலும் புகழ்பெற்று விளங்கும். மேலும் சிறுதாமூர் குவாரியை அரசு சிற்பக்கலைக்கான குவாரியாக அறிவிப்பதன் மூலம் சிற்பக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். இதையே சிற்பக்கலையில் ஈடுபட்டிருக்கும் சிற்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.


   பி. அமுதா
   செங்கல்பட்டு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai