Enable Javscript for better performance
தள்ளுவண்டியில் "கரம்' விற்கும் பி.டெக். பட்டதாரி- Dinamani

சுடச்சுட

  
  tr15

  கரூரில் கோவைச் சாலையில் கரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் பட்டதாரி சி.ஜெய்சுந்தர்ஒரு பி.டெக் பட்டதாரி என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
   மாறி வரும் உலகில் எத்தனையோ இளைஞர்கள் படித்துவிட்டோம், அதுவும் உயர்கல்வி பயின்றுவிட்டோம். இனி படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால்தான் பணிக்குச் செல்வது என்ற நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையில், செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி தள்ளுவண்டியில் கரம் வியாபாரம் செய்து, மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார்கரூரைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரி சி.ஜெய்சுந்தர்(25).
   கரூர்- கோவைச் சாலையில் செங்குந்தபுரம் செல்லும்பகுதியில் தள்ளுவண்டியில் மாலை நேரத்தில் விதம், விதமாக கரம் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஜெய்சுந்தர், தன் தொழில் குறித்து குறியது:
   எனக்கு சிறு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். தாய் கஷ்டப்பட்டு என்னை டிப்ளமோ இசிஇ படிக்க வைத்தார். படித்து முடித்தவுடன் கரூர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது தொலைநிலைக் கல்வி மூலமாக பி.டெக் பயின்றேன். இருப்பினும் படித்து முடித்தும் படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா என முயற்சி செய்தேன். அப்போதுதான் எனது நண்பர் சரவணன், குறைந்த முதலீட்டில் ஓரளவுக்கு வருவாய் கிடைக்கும் கரம் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். அவரிடம் கற்றது இன்று பலனளிக்கிறது.
   பொறியியல் பட்டதாரி என்ற நினைப்புடன் இருந்தால் நான் இந்த தொழிலைச் செய்ய முடியாது. கல்வி ஞானம் பெறுவதற்கு மட்டும்தான் படிப்பு. ஆனால் நிஜவாழ்க்கையில் கல்வியின் மூலம் நாம் பெற்ற ஞானத்தை நல்ல வழியில் பயன்படுத்தி உழைக்கும்போது கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது. எத்தனையோ பேர் படித்த படிப்புக்கேற்ற வேலைக்குத்தான் செல்வேன் எனக்கூறிக்கொண்டு தனது வாழ்நாள் காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். கல்வி அறிவைக்கொண்டு நமக்கு கிடைக்கும் வேலையை முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினால், அதில் நாம் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம்.
   ஐஏஎஸ் அலுவலர் சகாயம் ஏற்படுத்திய மக்கள் பாதை என்ற அமைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நான் பணியாற்றி வருகிறேன். இதன் மூலம் சில தன்னார்வலர் அமைப்புகளின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி பெற்றுத்தருவது, பொதுமக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது போன்ற சமூக பணிகளிலும் ஈடுபட்டுவருகிறேன்.
   நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட நேர்மையாக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி கடையில் ஒரு தகவல் பலகை வைத்திருந்தேன். அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடியும் வரை மக்களிடம் தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் எனக்கூறி, தினமும் நான் விற்கும் கரம் 50 சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்தேன். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவற்றைத்தவிர கடைக்கு கரம் வாங்க வரும்வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் மரக்கன்று வழங்கினேன். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
   கரம் என்பது பொரி, தட்டை ஆகியவற்றுடன் புதினா, பூண்டு, மல்லி, தேங்காய், பீட்ரூட் சட்னி கலந்த கலவை. திருநெல்வேலிக்கு அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பால்கோவா, மதுரைக்கு மல்லி பிரபலமோ, அதுபோல, கரூர் என்றால் சுவை மிகுந்த "கரம்' தான் பிரபலம். இதில் சாதா கரம், முட்டை கரம், சம்சாகரம், அப்பளம்கரம், எல்லடை கரம் என பலவகையுண்டு. தற்போது பர்மா நாட்டின் அத்தோ, கெளெஸ்வே என்ற உணவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளேன். இந்த உணவுக்கும் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு உள்ளது. என்னைப் போன்ற தொழில்முனைவோராக வரும் இளைஞர்களை அடையாளம் கண்டு, தமிழக அரசு வங்கிகள் மூலம் கடனுதவி செய்தால் மேலும் தொழிலை மேம்படுத்த முடியும் என்றார் ஜெய்சுந்தர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai