Enable Javscript for better performance
தொழில் வளர்ச்சிக்கு துணை நிற்கும் துறைமுகங்கள்- Dinamani

சுடச்சுட

  
  Port

  இந்தியாவில் கடல் வாணிபத்தை செழுமைப்படுத்தி, நாட்டின் தென்கோடியை உலக நாடுகளுடன் இணைத்த பெருமை சோழ மன்னர்களையேச் சாரும்.
   சோழ மன்னர்கள் சக்தி வாய்ந்த கடற்படையையும், தொழில்நுட்பம் வாய்ந்த கப்பல்களையும் பயன்படுத்தி, உலகம் முழுவதிலும் தமிழர்களை பன்னாட்டு வணிகம் புரிய வைத்துள்ளனர். ஆசிய நாடுகளுடன் மட்டுமன்றி, சீனாவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் சோழ மன்னர்கள் வர்த்தக உறவு வைத்திருந்தனர். மேலும் சோழ சாம்ராஜ்யத்தில் வணிகர்களுக்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
   மேலும் இன்றைக்கு பல்வேறு வரிகள் தொழில் துறையினரை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில் சுங்கத் தீர்வையிலிருந்து வணிகர்களுக்கு விலக்கு அளித்து, "சுங்கம் தவிர்த்த சோழன்' என்ற பட்டத்தை முதலாவது குலோத்துங்கச் சோழன் பெற்றிருந்தார்.
   மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சுங்கவரியற்ற சுதந்திரமான துறைமுகக் கொள்கையை தொலைநோக்குடன் உருவாக்கியவர் குலோத்துங்கச் சோழன்.
   நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம்: வெளிநாட்டு வர்த்தகத்திலும், துறைமுகங்களை பயன்படுத்துவதிலும் அன்றைய தமிழர்கள் சிறந்து விளங்கியதன் தாக்கம்தானோ என்னவோ இன்றைக்கும் பன்னாட்டு வர்த்தகத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
   இந்தியாவில் குஜராத், ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு அடுத்தபடியாக சுமார் 1,076 கி.மீ. கடற்கரையை பெற்று மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே சென்னை, எண்ணூர் காமராஜர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் என மூன்று பெரிய துறைமுகங்கள் அமையப்பெற்றுள்ள முதலாவது மாநிலம் தமிழகம்தான். இது தவிர, அதானி குழுமம் சார்பில் எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதிநவீன தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்துடன் கூடிய பெருந் துறைமுகம் அமைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
   இது தவிர கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி, குளச்சல், முகையூர், திருச்சோபுரம், பரங்கிபேட்டை, திருக்கடையூர், புன்னக்காயல், மணப்பாடு, கூடன்குளம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தேவைகளுக்காக சிறிய துறைமுகங்கள் இயங்கி வருகின்றன.
   உள்நாட்டு உற்பத்தியில் 2-ஆம் இடத்தில் தமிழகம்: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஜி.டி.பி. மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் கோடிக்கும் அதிகம். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை 45 சதவீதம், தொழில் துறை 34 சதவீதம், விவசாயம் 21 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
   கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள ஜவுளி ஆலைகள், ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதி, திருப்பூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி, சேலம் மாவட்டத்தில் இரும்பு உருக்கு ஆலைகள், கனிம வளங்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில்கள், கனரக வாகன தொழில்கள், பேருந்துகள் கட்டமைக்கும் தொழில்கள், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்கள், காவிரிப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சை பகுதிகளில் நெல் உற்பத்தி, கனரக தொழிற்சாலைகள், வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முந்திரி சாகுபடி உள்ளிட்டவை தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
   திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பெருமளவு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தென்னை தொழில்கள் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளன.
   தகவல் தொழில்நுட்பம், வாகன தொழிற்சாலைகள்: மாநிலத்தின் தலைநகரான சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனரக வாகனங்கள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், ஏராளமான மின்னுற்பத்தி நிலையங்கள், கண்ணாடி தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், சரக்குப் பெட்டக நிலையங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் முன்னிலையில் உள்ளன.
   மேலும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக தென்சென்னையில் டைடல் பார்க், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், நாவலூர், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகள் உலகளவில் தகவல் தொழில்நுட்பக் கேந்திரமாக வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் திரைப்படங்களை உருவாக்குவது சென்னைதான் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
   பாரம்பரிய மீன்பிடித் தொழில்: சுமார் 1,076 கி.மீ. கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் மீன்பிடித்தொழில் பன்னெடுங்காலமாக சிறந்து விளங்கி வருகிறது. ஆண்டுக்கு கடல்சார் மீன்பிடித்தல் மூலம் சுமார் 5 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சுமார் ஒரு லட்சம் டன் மீன்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணியாக ஈட்டப்படுகிறது. குறிப்பாக இறால் மீன் வளர்ப்புத் தொழில் தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. உள்நாட்டு நீர்நிலைகள், தனியார் மீன் வளர்ப்பு மூலம் சுமார் இரண்டரை லட்சம் டன் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் எட்டு முதல் பத்து லட்சம் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் கோடி ஆகும்.
   உறுதுணையாகத் திகழும் துறைமுகங்கள்: இவ்வாறு பல்வேறு தொழில்கள் தமிழகத்தில் சிறந்து விளங்குவதில் துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக வர்த்தகத்தில் தாராளமயமாக்கல் கொள்கை வளர்ந்து வரும் நிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதில் துறைமுகங்களின் சேவை முக்கியமானதாகும்.
   குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவு மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பிறகு புதிய பொருளாக உற்பத்தி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இரண்டிலுமே துறைமுகங்களில் சேவை முக்கியத்துவம் பெறுகிறது. தோல் பதனிடுதல், ஜவுளி உற்பத்தி, காற்றாலை மற்றும் கார் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்கள், உதிரி பாகங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. பிறகு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
   ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியில் முதுகெலும்பாக இருப்பது மின்சாரமே. இந்நிலையில் தமிழகத்தில் மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை தடையின்றி பெற்றிட எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கனிம வளங்கள் ஏற்றுமதியில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களும் தமிழகத்தின் துறைமுகங்களையே பெரும்பாலும் நம்பியுள்ளன. ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் உலகளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு காரணம் அருகாமையில் அமைந்துள்ள துறைமுகங்கள்தான் என்பதில் ஐயமில்லை.
   130 லட்சம் டன் சரக்குகள்: தென்னிந்தியாவின் டீசல், பெட்ரோல், நாப்தா உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் தேவையை நிவர்த்தி செய்வது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைதான். ஆனால் இந்த ஆலைக்குத் தேவையான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சென்னைத் துறைமுகம்தான் ஆணிவேராக உள்ளது. இதேபோல் சமையல் எரிவாயு இறக்குமதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் உதவிகரமாக உள்ளது. இத்துறைமுகத்தின் வழியாக இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக புதிய முனையம் அமைக்கும் பணியில் காமராஜர் துறைமுகம் ஈடுபட்டு வருகிறது.
   கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான இரும்புத் தகடுகள், கம்பிகள் சென்னைத் துறைமுகம் மூலம்தான் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி அதானி, தூத்துக்குடி ஆகிய நான்கு துறைமுகங்களில் உள்ள 6 சரக்குப் பெட்டக முனையங்கள் வழியாக ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. மேலும் இத்துறைமுகங்களின் வழியாக மொத்தம் ஆண்டுக்கு சுமார் 130 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.
   ஒருநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும் எனில் தொழில் வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்க வேண்டும். இதற்கு துறைமுகங்கள் முக்கிய நுழைவு வாயிலாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இங்கு அமைந்துள்ள பொதுத்துறை, தனியார் துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்துறைமுகங்கள் வளர்ச்சியடைவதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மென்மேலும் ஏறுமுகத்திலேயே இருக்கும் என்பது எதார்த்த உண்மை.
  - முகவை க.சிவகுமார்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai