Enable Javscript for better performance
நாடு முழுவதும் விற்பனையில் கொடி கட்டும் புதுகை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்- Dinamani

சுடச்சுட

  

  நாடு முழுவதும் விற்பனையில் கொடி கட்டும் புதுகை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்

  By DIN  |   Published on : 11th October 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tr2

  1028 விவசாய உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு 2014- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம், 5 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக வளர்ந்து புதுக்கோட்டை மட்டுமல்லாது, நாடு முழுவதும் இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பனைக்குத் தந்து வருகிறது.
   விவசாயிகளே தங்களது உற்பத்திப் பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்வதும், அந்தப் பொருள்களை மதிப்புக் கூட்டி அதனால் கிடைக்கும் லாபத்திலும் பங்கு பெறுவதுதான் இதுபோன்ற நிறுவனங்களின் அடிப்படைத் தத்துவம்.
   இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, விவசாய உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என 2002-இல் மத்திய அரசு உருவாக்கிய திட்டம், படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்து 2014 - 15 ஆம் ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களாக (கம்பெனி சட்டம்) பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டன. இவற்றுள் ஒன்றுதான் புதுக்கோட்டை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்.
   புதுக்கோட்டை மண்ணுக்குரிய பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளை சம்பா, பூங்கார், குள்ளக்கார், கருங்குருவை, காட்டுயாணம், தூயமல்லி, குழியடிச்சான், துளசி சம்பா, தங்கச் சம்பா, மிளகி, கொத்தமல்லி சம்பா போன்ற நெல்லரிசி ரகங்களும், உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகளும், சாமை, திணை, குதிரைவாலி, வரகு, கேழ்வரகு, சாமை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களும் இந்நிறுவனத்தால் உறுப்பினர்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. இவற்றை தோல் நீக்கி அரிசியாகவும், அரைத்து மாவாகவும் விற்பனை செய்கிறார்கள். மேலும், எள்ளு, நிலக்கடலை, தேங்காய் போன்றவையும் கொள்முதல் செய்து ஆட்டி ரசாயனக் கலப்பில்லாத - சுத்தமான - எண்ணெய் எடுத்து விற்பனை செய்கிறார்கள்.
   மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்: விவசாய உற்பத்திப் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதுதான் இப்போதுள்ள நிலைக்கு கூடுதல் வருவாயைத் தரும். இதன்படி, பாரம்பரிய நெல்லரிசியைப் பயன்படுத்தி, மாப்பிள்ளைச் சம்பா சீடை, கவுனி முறுக்கு, கவுனி அதிரசம் போன்ற தின்பண்டங்களும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி திணை மிக்சர், வரகு முறுக்கு, திணை முறுக்கு, திணை மணவாளம் (காராசேவு போல), ராகி மிக்சர், திணை அதிரசம் போன்ற தின்பண்டங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.
   துவரம்பருப்பை முளை கட்டி முளைக்க வைத்து, பிறகு காய வைத்து சத்துக்கூட்டப்பட்ட துவரம்பருப்பும் விற்பனைக்குக் கிடைக்கிறது. பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை அரைத்து தோசை மாவு, சத்து மாவு போன்றவையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகக் கிடைக்கின்றன.

  நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அதன் நிர்வாக இயக்குநர் ஆ. ஆதப்பன் கூறியது:
   இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் பல ஆண்டுகள் புதுக்கோட்டையில் தங்கி விவசாயிகளுடன் பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலின் அடிப்படைகளைக் கொண்டுதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
   சிறுதானியங்கள் எனப்படுபவை ஊட்டச்சத்துகளைத் தரும் கிடங்கு போன்றவை. வெறுமனே உணவில் மட்டுமல்லாது, விளைவிக்கப்படும் நிலத்துக்கும் நன்மை பயக்குபவை. வழக்கமான அரிசி, கோதுமையைக் காட்டிலும் 3 முதல் 5 மடங்கு அதிக சத்துகளைக் கொண்டவை சிறுதானியங்கள். எனவே, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளை ஊக்குவிக்கிறோம். எங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய விளைபொருள்கள் தினமும் சென்னைக்கு செல்கின்றன. வாரந்தோறும் கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலச் சந்தைகளுக்கும், மாதந்தோறும் தில்லி சந்தைக்கும் செல்கின்றன. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால் கடந்த 2018-இல் சிறந்த வேளாண் உற்பத்தி நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளோம். வடமலாப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி, தமிழ்நாடு வேளாண் வணிகத் துறையின் நிதியுதவியுடன் சிறுதானிய அரைவை மில், விதை சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கினோம். அதைத் தொடர்ந்து வேளாண் பொறியியல் துறையின் நிதியுதவியுடன் எண்ணெய் ஆட்டும் இயந்திரங்களையும் வாங்கியுள்ளோம். 2018-19 நிதியாண்டில் சுமார் ரூ. 2 கோடி விற்றுமுதல் (டர்ன் ஓவர்) புதுக்கோட்டை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்தப் பெருமை முழுக்க எங்கள் நிறுவனத்தின் 1,028 விவசாய உற்பத்தியாளர்களையே சேரும் என்கிறார் ஆதப்பன்.
   - சா. ஜெயப்பிரகாஷ்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai