Enable Javscript for better performance
புத்துயிர் பெறுமா ... தென்னை நார் கயிறு உற்பத்தித் தொழில்- Dinamani

சுடச்சுட

  

  புத்துயிர் பெறுமா ... தென்னை நார் கயிறு உற்பத்தித் தொழில்

  By DIN  |   Published on : 11th October 2019 12:21 PM  |   அ+அ அ-   |    |  

  rope1

  பல தலைமுறைகளாக செழித்திருந்த கயிறு திரிக்கும் தொழில், தற்போது முற்றிலும் சரிவடைந்துவிட்டது. சுற்றுச்சூழல் நலன் கருதியாவது பாரம்பரியம்மிக்க இத்தொழிலைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
   தமிழகத்தில் பிரதானமாக விளங்கும் தென்னை விவசாயத்தைச் சார்ந்த பிரதானத் தொழிலாக கயிறு உற்பத்தி உள்ளது. குடிசை வீடு கட்ட, பந்தல் அமைக்க, கால்நடைகளைக் கட்டி வைக்க, கோழிப் பண்ணைகளுக்கு தேங்காய் நார் கயிறுகள் அதிகளவில் தேவைப்படுகிறது. இருப்பினும், நிரந்தர இட வசதியின்மை, குறைந்த வருவாய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிசைத் தொழிலாக தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
   ஒரு காலத்தில் பெரம்பலூர் நகர் மட்டுமின்றி எசனை நார்க்காரன் கொட்டகை, தெப்பக்குளம், அரியலூர் சாலை உள்பட பல்வேறு இடங்களில், சாலையின் இருபுறங்களிலும் கயிறு திரிக்கும் பணியை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகுதி பகுதியாக செய்துவந்தனர்.
   தேங்காய் சிரட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நாரை மெத்துவது, திரிக்கும் இயந்திரத்தில் நீட்டித் திரிப்பது, அவற்றை தேவைக்கேற்ப கயிறுகளாய் முறுக்குவது என சாலையோரத் தொழில் காண்போரைக் கவர்ந்தது. ஆனால், இன்று இத்தொழிலையும், தொழிலாளர்களையும் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
   இதனால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றால் பல குடும்பங்கள் வறுமை நிலையிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. இந்தக் குடும்பத்தினர் தங்களது வாழ்வதாரத்துக்காக குடிசைத் தொழில்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இத்தொழிலில் தாங்கள் மட்டுமின்றி தங்களது குழந்தைகளையும் ஈடுபடுத்தி வருமானம் ஈட்டினாலும், அவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. நான்கு தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டும் இன்றளவும் மேம்படவில்லை. சாலையோரத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லாத இருப்பிடங்களில், முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இருப்பினும், நிரந்தரமான மாற்று இடம் ஒதுக்கி, வீடுகள் கட்டித்தர அரசு சார்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
   தற்போதைய காலக்கட்டத்தில் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிலில் இயந்திரங்கள் பலவற்றைப் பயன்படுத்தி பல பெரிய நிறுவனங்கள் கூடுதல் லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், குடிசைத் தொழிலாக செய்து வரும் குடும்பங்களால் இன்றளவும் அத்தகைய முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை. நவீன இயந்திரங்கள் அமைத்து தங்களது தொழிலை விரிவுபடுத்திக்கொள்ள விரும்பும் தொழிலாளர்கள், அரசின் மானிய உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
   இதுகுறித்து, சாலையோரம் கயிறு கடை நடத்தி வரும் மாதேஷ் கூறியது:
   எனக்கு 65 வயதாகிறது. என்னோட தாத்தா, பாட்டி காலத்திலேயே சேலம் மாவட்டத்திலிருந்து வந்து பெரம்பலூரில் குடியேறினோம். கடந்த காலங்களில் கிணறு வெட்ட, வயலுக்கு ஏற்றம் இறைக்க, வீட்டுக் கிணற்றில் நீர் இறைக்க, கலப்பை, ஆடு, மாடுகள் கட்டுவதற்குத் தேவையான விதவிதமாக கயிறு திரிப்போம்.
   கேரளத்திலிருந்து நார் வரவழைச்சு, அதை பக்குவப்படுத்தி சாலையோர மரத்தடியில கயிறுகளைத் திரித்து வந்தோம். கயிறு திரிக்கும் லாவகத்தைப் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து பலர் வந்து பார்த்து சென்றனர்.
   நைலான் கயிறு வந்தப் பிறகு, நார் கயிறின் விற்பனையும், உற்பத்தியும் வெகுவாகக் குறைந்தது. இதனால், இத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானோர் கூலி வேலைக்கும், இரவு நேரங்களில் இட்லி கடைகளை நடத்தி வாழ்ந்து வருகிறோம். ஒரு காலத்தில் சொந்தமாக கயிறு திரிச்சி விற்பனை செய்து வந்த நான், தற்போது நிலைமை மாறி, திருச்சியில் இருந்து கயிறுகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம் என்றார் அவர்.
   வறட்சியால் நாளுக்கு நாள் விவசாயம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குடிசைத் தொழில்களை நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தி வரும் இத்தகைய குடும்பங்கள் அரசிடம் எதிர்பார்த்திருப்பது சிறு, சிறு கடனுதவிகள் மட்டுமே.
   அந்த உதவிகள் கிடைத்தால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். எனவே, நெருக்கடி நிலையில் உள்ள குடிசைத் தொழில்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து உதவி செய்ய வேண்டும் என்பதே தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.


   
   கே. தர்மராஜ்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai