Enable Javscript for better performance
பெண்களை சாதனையாளர்களாக உருமாற்றும் தொழில்முனைவோர் சங்கம்- Dinamani

சுடச்சுட

  

  பெண்களை சாதனையாளர்களாக உருமாற்றும் தொழில்முனைவோர் சங்கம்

  By DIN  |   Published on : 11th October 2019 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  women_enterprenur

  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த நிலை மாறி, ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பரிணமித்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
   விமானம், ரயில், சாலைப் போக்குவரத்துத் துறைகள், கல்வி, மருத்துவம், விளையாட்டு,தொழில், வர்த்தகம், விஞ்ஞானம் என பெண்கள் இன்று இல்லாத துறைகளே இல்லை. அந்தளவுக்கு திறமைகளை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
   அந்த வகையில், தமிழகத்தில் குறிப்பாக மாநிலத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சியில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில்முனைவோர்களாக முடியும் என்பதை எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு தொழில்முனைவோர்களை பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறையுடன் இணைந்து உருவாக்கி வருகிறது மகளிர் தொழில்முனைவோர் சங்கம்.
   தொழில் முனைவோர்களாக உருவாக்குவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், அவர்களுக்கு வழிகாட்டி-ஊக்கப்படுத்தி ஆண்டுதோறும் சிறந்த தொழில்முனைவோர்களுக்கான விருதுகளையும் வழங்கி கௌரவித்து வருகிறது தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம்.
   இந்த சங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் மற்றும் இயக்குநர் ந. மணிமேகலை கூறியது:
   மகளிரியல் துறையும், மகளிர் தொழில்முனைவோர் சங்கமும் இணைந்து, கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு கருத்தரங்குகள், விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டும் நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் ஏராளமான மகளிர் தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
   பெண்கள் தொழில் முனைவோர்களாவதற்கு பயம் மற்றும் ஆர்வமின்மை உள்ளிட்டவை முக்கியத் தடைகளாக உள்ளன. வெற்றி என்பது சந்தோஷத்தை அளித்தாலும், தோல்வி, அனுபவத்தையும் எதிர்காலத்தில் மேலும் தவறுகள் நிகழாமல் சரியான பாதையில் செல்லவும் வழிகாட்டுகிறது.
   தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டல், ஆலோசனை வழங்குவதுடன், பொருளாதார ரீதியில் வங்கிக்கடன் பெறுவதற்கும், உற்பத்தி செய்த பொருள்களை சந்தைபடுத்துவதற்கும் போதுமான உதவிகள் செய்வது, மத்திய மற்றும் மாநில அரசுத்திட்டங்கள், நிதியுதவி, இ-மார்கெட்டிங், திறன் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மகளிர் தொழில்முனைவோர் சங்கம் வழங்கிஅரசு-வங்கி, தொழில்முனைவோர்களுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாக செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தொழில் மையம், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தேசிய சிறு தொழில் கழகம், நபார்டு, இந்திய வேளாண் அறிவியல் மையம், தாட்கோ,சிட்கோ, வங்கிகளின் திறன் மேம்பாட்டு மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொழில் சங்கங்கள், மண்டல மகளிர் தொழில் பயிற்சி மையங்களிலிருந்து அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் , பல்வேறு துறை சார்ந்த சுயதொழில் முனைவோர்கள் கருத்தாளர்களாக இருந்து தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து புதிய தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
   தொழில்வாய்ப்புகள், எந்த தொழில் யாருக்கு ஏற்றது, வேலையில்லா இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள், முத்ரா திட்டம், மானியங்கள் விவரங்கள் அளித்தல் போன்றவற்றுடன், மகளிர் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு ஊக்கத்தையும் அளித்து வருகிறோம்.
   ஆண்டுதோறும் விருது: மகளிர் தொழில்முனைவோரை உருவாக்குவதோடு எங்கள் பணி நின்றுவிடாது. அதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 12 ஆண்டுகளாக மகளிர் தொழில்முனைவோரில் பல்வேறு வழிமுறைகள் நிலைகளில் சிறந்து விளங்கியவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகளையும் வழங்கி வருகிறோம்.
   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறையும், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கமும் இணைந்து, ஆண்டுதோறும் தொழில்வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து தொழில்முனைவோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாநாட்டையும் நடத்தி, அதில் மகளிர் தொழில்முனைவோராக உயர்ந்தவர்களின் சாதனை, அதற்காக அவர்களின் போராட்டம், தியாகம் போன்றவை குறித்து புதிய தொழில்முனைவோர்கள் மத்தியில் வெற்றி பெற்றோரை பேச வைத்து, ஊக்கப்படுத்தி வருகிறோம். தொழில் முனைவோராகும் விருப்பமுள்ளோர், பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை அல்லது தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (செயின்ட் பால் காம்ப்ளக்ஸ், தலைமை அஞ்சலகம் எதிரில், திருச்சி-1 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் மணிமேகலை.
   என்னால் என்ன செய்ய முடியும் என்று வீட்டில் பெண்கள் ஒதுங்கிவிடாமல், என்னாலும் எல்லாம் முடியும் என்பதை வெளிகாட்டும் வகையிலும், பல்வேறு தொழில்களை சாதனைகளைப் புரிந்த மகளிர் தொழில்முனைவோர்கள் தொடர்ந்து வீறுநடைப் போட்டு கொண்டிருப்பார்கள். பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
   ஆர்.எஸ். கார்த்திகேயன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai