Enable Javscript for better performance
மதிப்புக்கூட்டிய பால் பொருள்களை தயாரித்தும் சாதிக்கலாம்- Dinamani

சுடச்சுட

  

  மதிப்புக்கூட்டிய பால் பொருள்களை தயாரித்தும் சாதிக்கலாம் 

  By DIN  |   Published on : 11th October 2019 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Milk

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வெற்றிவாகைச் சூட அவரவர் சுய விருப்பத்துக்கு ஏற்ப சுய தொழில் தொடங்கலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கேற்ற முதலீடுகள் தேவைப்படும். மேலும் தொழிலில் வரும் இழப்புகளை சமாளிக்கும் மனதைரியமும் இருந்தால் தொழில் தொடங்கி வெற்றி காணலாம். இன்றைய நிலையில் கஷ்டங்கள் இல்லாத தொழில் இல்லை.
   இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஸ்மார்ட் போனில் இணையத்தில் அனைத்து தகவல்களும் கிடைத்து விடுவது போல, தங்களுக்கு அனைத்தும் இலகுவாகக் கிடைத்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. சுயதொழிலில் முன்னேற வேண்டுமெனில், நவீன உத்திகளைக் கையாண்டு தங்கள் அறிவை எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
   அந்த வகையில் சுய தொழில்தொடங்குவோருக்கு பால் பொருள்கள் உற்பத்தியைப் பொருத்த வரை அதிக முதலீடு தேவைப்படாது. அதே நேரத்தில் கவனத்தோடு பால்பொருள்களை கையாளுவதன் மூலம் இழப்பீடுகளைத் தவிர்க்கலாம்.
   கறவை மாடு வைத்திருப்போர் பால் மிகுந்து இருக்கும்போது அதை விற்பனை செய்ய முடியாத நிலையில் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சிறு சிறு உதவி சாதனங்களைக் கொண்டே பால் பொருள்களாக மாற்றி தொழில் செய்யலாம். இதன் மூலம் பால் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதோடு, நீண்ட நாளுக்கு வைத்திருக்க கூடிய பால்பொருள்களாக மாற்ற முடியும்.
   மாறி வரும் இன்றைய நவீன உலகில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பற்றி மக்களிடையே மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சத்துமிகுந்த அதே நேரத்தில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அமையபெற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் கிடைப்பது நுகர்வோரிடையே அரிதாக உள்ளது.
   இந்த சூழ்நிலையில் சத்துமிகுந்த பாலை மேலும் மதிப்புக் கூட்டிய பால் பொருள்களாக மாற்றுவதன் மூலம், பாலின் சேமிப்பு காலத்தை கூட்டுவதோடு நுகர்வோருக்கும் நல்ல தரமான பால் பொருள்களை வழங்கலாம்.
   இதுகுறித்து திருச்சியிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பி.என். ரிச்சர்டு ஜகதீசன், பேராசிரியை வே.ஜெயலலிதா கூறியது:
   கோடைகாலத்திற்கேற்ற பால் பானங்கள் நொதிக்கப்பட்ட பால் பொருள்களான தயிர், லஸ்ஸி, யோகர்ட் போன்றவைகளை தயாரிக்க வீட்டிலுள்ள எளிய சாமான்களே போதும். சிறிய மூலதனத்தில் பால் பொருள்களைத் தயார் செய்து சிறுதொழில் ஒன்றை ஆரம்பிக்கலாம்.
   இயற்கை பால் பானம் : செயற்கை நறுமணமூட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாட்டில் பால் பானத்தை விட, இயற்கையாக கேரட், பீட்ரூட் சாறுகள் கொண்டு உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் இயற்கை பால் பானத்துக்கு நல்ல சந்தை மதிப்பு கிடைக்கும்.
   1 லிட்டர் பாலுக்கு 20மி.லி. கேரட்சாறு அல்லது 10 மி.லி. பீட்ரூட் சாறு 750 கிராம் சர்க்கரை மற்றும் நறுமணமூட்டியாக 5 ஏலக்காய் மட்டுமே தேவைப்படும். பாலை காய்ச்சி அதனுடன் இந்த சாறை சேர்த்து, சர்க்கரையும் ஏலக்காயும் பொடித்து அதில் போட்டு, கலக்கி வடிகட்டி பாட்டிலில் அடைத்து குக்கரில் வைத்து கொதிக்க வைத்து ஆறவைத்தல் வேண்டும். 1 லிட்டர் பாலுக்கு 5 பாட்டில்கள் தயாரிக்கலாம். இந்த பால் பானத்தில் பாலுக்குப் பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலைப் பயன்படுத்தினால் லாபம் இன்னும் அதிகரிக்கும். இதற்கு ஏடுபிரிப்பான் எனும் சாதனம் தேவைப்படும். இதன் மூலம் கீரீமை பிரித்தெடுத்தால் அதனை கொண்டு நெய் தயாரிக்கலாம்.
   தயிர் : கோடை காலத்திற்கேற்ற நல்ல ஜீரணமாகும் வகையில், நொதியூட்டப்பட்ட பால்பொருள் தயிர் ஆகும். பால் செரிமானம் ஆகாதவர்களுக்கும் தயிர் செரித்து விடும். ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்சி பின் அதனுடன் தயிருக்கான உறை மோர் (அ) நுண்மக்கலவை ( லேக்டோபேஸில்லஸ்) சேர்த்து 4 மணி முதல் 6 மணி நேரம் உறைய வைத்தால் தயிர் தயார். நுண்மக் கலவை சேர்க்கப்பட்ட பாலை 100 கிராம் கப்புகளில் (அ) மண் குவளைகளில் நிரப்பி உறைய வைத்தால் விற்பனைக்கு எளிது. உறைந்த பின் தயிரை விற்பனை வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருத்தல் வேண்டும்.
   யோகர்ட் : தயிர் போலவே யோகர்ட்டும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. தினசரி யோகர்ட் சாப்பிட்டால் இருதய நோய்கள் குறைவதாக ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. தயிருக்கும் யோகர்ட்டுக்கும் வித்தியாசம் இனிப்பு மற்றும் நுண்மக்கலவை ஆகும். ஏனெனில் யோகர்ட்டுக்கு தனித்துவமான நுண்மக்கலவை (லேக்டோபேஸில்லஸ் பல்காரிகஸ் மற்றும் ஸ்ட்ரùப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ்) பயன்படுத்த வேண்டும். இது இனிப்பு மற்றும் புளிப்புசுவை கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஐஸ்கீரீம் போலவே வெயில் காலத்தில் சாப்பிட இதமாக இருக்கும் பால் பொருளாகும்.
   பன்னீர்
   பால் மிகுந்து விடும் போது பன்னீராக மாற்றுவதன் மூலம், அதை நாம் 7 நாள்களுக்கு சேமித்து வைக்க முடியும். பாலை நன்கு காய்ச்சி,2 சதவிகித சிட்ரிக் அமிலக்கரைசலை சேர்க்க திட மற்றும் திரவசத்துக்கள் தனியே பிரிந்து விடும். திடச்சத்துகளை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி அதன் மீது அழுத்தம் கொடுக்க பன்னீர் தயாராகி விடும். இது புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த பொருளாதலால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
   பால் இனிப்புகள்
   பால்கோவா, பால் பேடா, குலாப்ஜாமூன், ரசகுலா, ரசமலாய் மற்றும் ஸ்ரீகந்த் போன்ற பால் இனிப்புகளை தயாரிக்க வீட்டிலிருக்கும் பொருள்களே போதுமானது. பாலை இரும்புச்சட்டியில் ஊற்றி நேரடியாக தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளற கோவா கிடைக்கும். பாலில் சாதாரணமாக இரும்புச்சத்து கிடைப்பதில்லை. ஆனால் இரும்புச்சட்டியில் கிளறுவதால் கோவாவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. கோவாவை சர்க்கரை சேர்த்து செய்யும் போது பேடா எனப்படும். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையுடன் இருப்பதால் அடிக்கடி கொடுக்கலாம்.
   சர்க்கரை சேர்க்காமல் உள்ள கோவாவை மைதா சேர்த்து, உருண்டையாக உருட்டி நெய்யில் பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் ஊறவைக்க குலாப்ஜாமூன் தயாராகி விடும். ரசகுல்லா, ரசமலாய் செய்ய பன்னீர் தயாரிப்பது போல திடச்சத்துக்களை பிரித்துகட்டி தொங்க விட சன்னா கிடைக்கும். சன்னாவை சர்க்கரை பாகில் வேகவைத்தால் ரசகுல்லா என்றும் பாலில் வேகவைத்தால் ரசமலாய் என்றும் பெயர்.
   தயிரில் உள்ள திடச்சத்துக்களை பிரித்து சர்க்கரை மற்றும் நறுமணமூட்டி சேர்த்து தயாரித்தால் ஸ்ரீகந்த் ஆகும். இது தயிரின் மூலம் செய்வதால் செரிமானத்திற்கு எளிதாகும்.
   இது போன்ற பால் பொருள்களை குறைந்த மூலதனத்தில் தயாரித்து அவரவர் பகுதிகளில் விற்பனை செய்யலாம். இன்றைய இளைஞர்கள் நாளைய சமுதாயம் என்பதை மறந்து விடாமல், உற்சாகத்துடன் சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறலாம்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai