Enable Javscript for better performance
வருவாய், மாசற்ற காய்கறிக்கு மாடித் தோட்டம்!- Dinamani

சுடச்சுட

  
  ch4

  மாடித்தோட்டம் அமைத்தல் மூலமாக தங்கள் சொந்த தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அற்ற இயற்கை உரமிட்ட காய்கறிகள் மற்றும் மூலிகை செடிகளை விற்பனை செய்வதன் மூலமாக கணிசமாக வருவாயும் ஈட்ட முடியும் என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள்.
   சமச்சீரான உணவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஓர் முக்கிய தேவையாகும். இவை நமது உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களை கொடுக்கக் கூடியவை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒரு மனிதன் சராசரியாக 85 கிராம் பழங்கள், 300 கிராம் காய்கறிகளை தினசரி உட்கொள்ளவேண்டும்.
   ஆனால், தற்போது தினசரி 30 கிராம் பழங்கள் மற்றும் 120 கிராம் காய்கறிகள் மட்டுமே பெரும்பாலோர் உட்கொள்கின்றனர். இதனால், பல்வேறு வைட்டமின் குறைபாடு மற்றும் அதனை சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
   இந்த பிரச்னைக்கு அவரவர் வீடுகளிலேயே காய்கறிகள், மூலிகைகளை உற்பத்தி செய்து தீர்வு காண முடியும்.
   தீர்வு தரும் மாடித் தோட்டம்: மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக, பெருமளவிலான நிலங்கள், வீடுகள் கட்டுவதற்கே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைக்க என தனி இடம் ஒதுக்குவது மிகவும் கடினம். அதிலும், அடுக்குமாடிக் கட்டடங்களில் காய்கறி மற்றும் அலங்காரத் தோட்டம் வளர்ப்பது என்பது தொட்டிகளிலும், கொள்கலன்களிலும் மட்டுமே முடியும். இவ்வாறு தொட்டிகளில், கொள்கலன்களில் காய்கறி மற்றும் அலங்காரச் செடிகள் வளர்க்கும் விதமே மாடித்தோட்டம் வளர்ப்பு முறை.
   அனைத்து குடும்பத்தினருக்கும் ஏற்ற முறையில் மாடித்தோட்டத்தில் காய்கறி, பழங்கள், மூலிகைப் பயிர்களை வளர்க்கலாம்.
   மாடித் தோட்டம் அமைப்பது எப்படி: மாடித் தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத் தான். மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும், வழியும் உள்ளன.
   மாடிப்பகுதியில் அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படியான நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதியுள்ள இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாகத் தொட்டிகள் அமைக்கும்போது எல்லா தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிகம் பராமரிக்க வேண்டிய செடிகளை தனியாகவும் பிரித்தும் அமைக்க வேண்டும்.
   பயிரின் வளர்ச்சி மற்றும் வயதை கருத்தில் கொண்டே தொட்டிகளை தேர்வு செய்ய வேண்டும். சந்தைகளில் பலவகையான தொட்டிகள் பல்வேறு வடிவத்திலும், அளவுகளிலும் கிடைக்கின்றன. மேலும், வீட்டில் இருக்கும் பழைய வாளிகள், டின், பெட்டிகளை பயன்படுத்தலாம். இந்த தொட்டிகளில் செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும்.
   தென்னை நார் கழிவானது மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்க வைத்து செடிகளைக் காக்கும். அளவுக்கு அதிகமாகப் போட்டால் செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்பட்டு வேர்கள், செடிகள் பாதிப்படையும். செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும்.
   வேப்பம் பிண்ணாக்கு பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும். மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக் கூடாது. 7 முதல் 10 நாள்களில் நாம் தயார் செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகிவிடும். அதன் பிறகே அதில் எந்த விதையையும் நடவு செய்ய வேண்டும்.
   விதைப்பது எப்படி: விதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை. பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேறத் துவாரங்கள் இட வேண்டும். தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளில் இருந்து எடுக்கலாம். கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதையானது நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு. விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவு செய்தால் போதுமானது. அதன்பின்னர், மண்ணால் மூடிவிட வேண்டும்.
   காலநிலையை கவனிக்க வேண்டும்: மாடித்தோட்டத்தில் காலநிலையைக் கவனிக்க வேண்டும். அதாவது ஜூன், ஜூலை மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்கச் சரியான காலம். கோடைக்காலத்தில் எக்காரணம் கொண்டும் விதைகள் நடவு செய்யக் கூடாது. அதன் பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடலாம்.
   சிலர் குளிர்கால காய்கறிகளான பீட்ரூட், முட்டைகோஸ், அன்னாசி, கேரட் ஆகியவற்றை அக்டோபர் மாதங்களில் நடவு செய்கிறார்கள்.
   பராமரிப்பதில் அதிக கவனம் தேவை: மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்புதான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். மாடித் தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித் தோட்டத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யத்தை தெளிக்கலாம். வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பும் பஞ்சகவ்யத்தை தெளிக்கலாம்.
   காய்களை பறிக்கும்போது முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிட வேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்ற விடலாம். பூச்சி தாக்குதலைத் தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். ஒருமுறை விளைந்த செடிகளின் மகசூலுக்குப் பின்னர் மீண்டும் அதில் மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, மாட்டு எரு ஆகியவற்றைக் கலந்து மீண்டும் அந்த மண்ணைப் பயன்படுத்தலாம்.
   தவிர்க்க வேண்டியவை: கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது. பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது. பைகளைத் தயார் செய்த உடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது. பைகளை அடர்த்தியாக நெருக்கி வைக்கக் கூடாது.
   பலன்கள்: மாடித் தோட்டத்தில் விளையும் பொருள்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதனால் மருத்துவச் செலவுகள் குறையும். இதுதவிர அவசரக் காலங்களுக்குத் தேவையான மூலிகைகளை வளர்ப்பது இன்னும் நன்மை தரும். மாடித் தோட்டத்தினால் வீடுகள் குளிர்ச்சி அடையும். அதனால் வீட்டில் ஏ.சி. போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடும் குறையும். வீட்டில் மட்கும் குப்பைகளான பழக்கழிவுகள், காய்கறி தோல்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை வெளியில் கொட்ட தேவையில்லை. செடிகளுக்கு உரமாகப் போடலாம்.
   பயிற்சி வகுப்பு: சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடித் தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த மையத்தின் தலைவர், உதவி பேராசிரியர் ஆகியோர் கூறியது: மாடித்தோட்டம் அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் போதும். குறைந்த பட்ச முதலீடு ரூ.1,000 முதல் ரூ.2,000. இதை முறையாக பராமரிப்பது மூலமாக ஆண்டுதோறும் பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை பெறலாம். மேலும், காய்கறி மற்றும் பழங்களை பயிரிடுவதால் வீட்டின் செலவினத்தில் ஒரு பகுதியை குறைக்க முடியும். உபரி காய்கறிகள் மற்றும் மூலிகை செடிகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். ஆண்டுதோறும் உணவுக்கும், மருந்துக்கும் ஏற்படும் உடனடி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.
   - மு.வேல்சங்கர்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai