அழிவின் விளிம்பில் உப்பு உற்பத்தித் தொழில்...

உப்பளத்தின் குத்தகைக் கட்டணம் உயர்வு, போதிய விலை கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் அழிவின் விளிம்பில் உப்பு உற்பத்தித் தொழில் உள்ளதாகவும்,
அழிவின் விளிம்பில் உப்பு உற்பத்தித் தொழில்...

உப்பளத்தின் குத்தகைக் கட்டணம் உயர்வு, போதிய விலை கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் அழிவின் விளிம்பில் உப்பு உற்பத்தித் தொழில் உள்ளதாகவும், இத்தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் உப்பு உற்பத்தித் தொழிலகத்தினர்.
 நாகப்பட்டினம் மாவட்டம், வேதராண்யத்தைப் போன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினமும் அதிகளவில் உப்பு உற்பத்தி நடைபெறும் பகுதியாகும். இங்கு கடலோரப் பகுதிகளையொட்டி 3 ஆயிரம் ஏக்கரில் இந்திய உப்புத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான உப்பளங்கள் உள்ளன.
 இதில் அதிராம்பட்டினம் பகுதியில் மட்டும் ஏறக்குறைய 800 ஏக்கர் உப்பளங்களில் உணவு உப்பு, கெமிக்கல் உப்பு என 2 வகை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், போதிய விலை கிடைக்காதது, உப்பளத்தின் குத்தகைக் கட்டணத் தொகை உயர்வு போன்ற காரணங்களால் உப்பு உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.
 இந்த நிலைக்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து அதிராம்பட்டினத்தில் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தித்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏ.பிச்சை கூறியது:
 அதிராம்பட்டினம் பகுதியில் உற்பத்தியாகும் உப்பு வழக்கமாக ஆந்திரம், புதுச்சேரி, மணலி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். ஆனால் தற்போது இந்தப் பகுதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாகும் உப்பு மிகக் குறைந்த விலையில் கப்பல் மூலம் விற்கப்படுவதால், தமிழகப் பகுதிகளில் உற்பத்தியாகும் உப்புக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டது.
 குத்தகைக் கட்டணமும் பலமடங்கு உயர்வு : ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிராம்பட்டினம் பகுதி உப்பளங்களில் 1 ஏக்கரில் குறைந்தபட்சம் 20 டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, டன்னுக்கு உப்பள குத்தகைக் கட்டணத் தொகையாக ரூ. 10 வீதம் 20 டன்னுக்கு ரூ. 200 வசூலிக்கப்பட்டது.
 முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதன் பதவிக் காலம் முடியும் நேரத்தில், தமிழகத்தில் உப்பு உற்பத்திக்காக அரசிடமுள்ள இடத்தின் குத்தகைக் கட்டணத் தொகையை 10 மடங்கு உயர்த்தியது. அதனால், அன்று முதல் தற்போது வரை குத்தகைக் கட்டணத் தொகை 20 டன்னுக்கு ரூ. 2,000 என வசூலிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் பலர் இந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
 குறைந்தளவில் உப்பு உற்பத்தி : கடந்த ஜனவரி மாதம் அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 30 ஏக்கரில் மட்டுமே உப்பு உற்பத்திப் பணி தொடங்கியது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்ததால் கடந்த ஜூலை மாதம் உப்பு உற்பத்தியை உற்பத்தியாளர்கள் நிறுத்தினர்.
 மேலும், குஜராத்தில் உப்பு உற்பத்தி செய்வதற்கான இடம் மாநில அரசிடம் உள்ளதால் குத்தகைக் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. ஆனால், தமிழகத்திலுள்ள உப்பு உற்பத்தி செய்வதற்கான இடம் மத்திய அரசு வசம் உள்ளதால் குத்தகைக் கட்டணமும் மிக அதிகளவில் உள்ளது. ஆகையால், தமிழகத்தில் அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கும் உப்பு உற்பத்தித் தொழிலை மத்திய, மாநில அரசுகள்தான் காப்பாற்ற வேண்டும். உடனடியாக மத்திய அரசு உப்பள குத்தகைக் கட்டணத் தொகையை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
 தமிழக அரசு இலவச மின்சாரம் அளிக்க வேண்டும்: குஜராத்தில் உப்பு உற்பத்திக்கு மாநில அரசு இலவச மின்சாரம் வழங்குவதால் அங்கு உப்பு உற்பத்திச் செலவு மிகக் குறைவு. ஆனால் தமிழகத்தில் உப்பு உற்பத்தியின்போது தண்ணீர் இறைக்க வணிகக் கட்டணத்தில் மின்சாரம் பயன்படுத்த வேண்டியுள்ளதால் இங்கு உப்பு உற்பத்திச் செலவு அதிகம். எனவே, தமிழக அரசு உப்பு உற்பத்திக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மழைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இத்தொழிலை அழிவின் விளிம்பு நிலையிலிருந்து காப்பாற்ற முடியும்.


 - எஸ். பார்த்திபன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com