இயற்கை முறை சாம்பிராணி தயாரிப்பில் மகளிர்!

திருவள்ளூர் அருகே கலப்பில்லாத, முற்றிலும் இயற்கை முறையிலான சாம்பிராணி தயாரிப்பில் பெண்கள் ஈடுபட்டு, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் தொழிலாக இதனை மாற்றியுள்ளனர்.
இயற்கை முறை சாம்பிராணி தயாரிப்பில் மகளிர்!

திருவள்ளூர் அருகே கலப்பில்லாத, முற்றிலும் இயற்கை முறையிலான சாம்பிராணி தயாரிப்பில் பெண்கள் ஈடுபட்டு, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் தொழிலாக இதனை மாற்றியுள்ளனர்.
 திருக்கோயில்களிலும், வீடுகளிலும் வழிபாட்டின்போது சாம்பிராணி புகை போடுவது வழக்கம். தற்போது சந்தைகளில் மூலிகைச் சாம்பிராணி, மல்லிகை, சந்தன சாம்பிராணி என பல்வேறு நறுமணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் இதன் தன்மைகள் புகையும் போதுதான் தெரிய வரும்.
 சுத்தமான குங்குலிய மரப்பட்டை மற்றும் அந்த மரத்தின் பிசின்களில் இருந்து முற்றிலும் இயற்கை முறையில் நீண்டநேரம் புகையும் சாம்பிராணியை திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் ராகவேந்திரா நகரில் தயாரிக்கின்றனர். இத்தொழிலில் கிராம பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். தேவை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் சாம்பிராணி இயந்திர உதவியுடன் பாக்கெட் செய்து ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
 தேவையான மூலப்பொருள்கள்: குங்குலிய மரப்பட்டை, அதன் பிசின் ஆகியவை இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மொத்த வியாபாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், சாக்கோல் குப்பி (கப்) தயாரிப்பதற்கான கரித்துகள் ஒரு கிலோ தரத்திற்கு ஏற்ப ரூ.15 முதல் ரூ.25 வரையிலும், ஒரு கிலோ குங்குலிய மரப்பட்டை ரூ.290-க்கும், குங்குலிய மரப் பிசின் அதன் தன்மைகேற்ப ரூ.1,200 முதல் ரூ.1,900 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மூலப்பொருள்களான மரப்பட்டையையும், கட்டியாக உள்ள பிசினையும் நன்றாக அதற்கான இயந்திரத்தில் அரைத்து தூளாக்க வேண்டும். பின்னர் அதனை கரைத்து மாத்திரை வடிவில் வில்லைகளாக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். அதேபோல், கரித்துகள் பவுடரை கரைத்து மிஷினில் வைத்து சாக்கோல் (கப்) தயாரிக்கின்றனர். இதை ஸ்தூபக்கால் மேல் சாக்கோல் கப் வைத்து பற்ற வைத்து அதைத் தொடர்ந்து அதன் மேல் சாம்பிராணி வில்லை போட்டால் நீண்டநேரம் புகையும் வரும் வகையில் தயாரிப்பதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்தனர்.
 இது குறித்து இத்தொழில் நிறுவனத்தின் நிர்வாகிஅனிலா பெர்னாட் (42) கூறியது: தற்போதைய காலகட்டத்தில் மின்சார அடுப்பு, எரிவாயு சிலிண்டர் ஸ்டவ் ஆகியவற்றையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் விறகு அடுப்புகளையே மக்கள் பயன்படுத்தினர். அப்போது, அடுப்பில் கிடைக்கும் தீக்கங்குகளை ஸ்தூபக்காலில் போட்டு அதன் மேல் சுத்தமான சாம்பிராணி துகள்களைப் போட்டால் நன்றாக புகை வரும். அதை வீடுகள் முழுவதும் காட்டினால் நச்சுகள் விலகும். தற்போது, நவீன அடுப்புகளின் வரவால் தீக்கங்குகளை எடுக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே அந்தப் பழைய முறையை மீண்டும் கொண்டு வருவதுதான் இயற்கை முறையில் சாம்பிராணி தயாரித்தலின் நோக்கமாகும். இதற்காகவே கரித்துகளாலான சாக்கோல் கப் பற்ற வைப்பதன் மூலம் கங்குகள் உண்டாகும். அதில் சாம்பிராணியைப் போடும்போது புகைந்து கொண்டே இருக்கும்.
 இந்தத் தொழிலுக்கு 2 ஆயிரம் சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. அதோடு, அரைக்கும் இயந்திரம், பாக்கெட் செய்யும் இயந்திரம், தூள்பவுடர் அடைக்கும் இயந்திரம் ஆகியவற்றுக்கும் முதலீடு செய்ய வேண்டும். மேலும், இங்கு தயாரிக்கப்படும் சாம்பிராணி வில்லைகள் நீண்ட நேரம் எரியும் தன்மையுடையவை. ஒரு கிலோ குங்குலிய மரப்பிசின் தூள் மூலம் 412 வில்லைகளைத் தயாரிக்க முடியும். அதேபோல், ஒரு கிலோ கரித்துகள் பவுடரில் 98 சாக்கோல் கப் தயாரிக்க முடியும். ஒரு பாக்கெட்டில் 12 வில்லைகள், 20 கிராம் சாம்பிராணி பவுடர் போட்டு அடைக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் 40-க்கும் மேற்பட்டோர் சாம்பிராணி, வில்லைகள் தயாரிப்பு மற்றும் பேக்கிங் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
 -எஸ்.பாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com