இலவச மின்சாரமும், வருமானமும்..

வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இலவச மின்சாரமும், வருமானமும்..

வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது உலக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்டவை இன்னும் சில காலத்துக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் என்றைக்குமே அழியாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த வற்றாத சக்தியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் உள்ளது. அதில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஒளி ஆற்றல் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவிவரும் மின் பற்றாக்குறையைவிட 2020-ஆம் ஆண்டு இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு தீர்வாக சூரியசக்தியிலிருந்து மின்சாரத்தைத் தயாரிப்பது மிக அவசியமாகிறது. 
இந்தியாவில் ஆண்டுக்கு 250 முதல் 300 நாள்கள் வரை சுமார் 3 ஆயிரம் மணி நேரம் சூரிய ஒளி தடையின்றி கிடைக்கிறது. இதைக் கொண்டு 5 ஆயிரம் டிரில்லியன் கிலோ வாட் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும். சூரிய சக்தி மின்சக்தி தகடுகளின் (Photovoltaic Cells) ஆயுட்காலம் 25 ஆண்டுகள். சூரிய ஆற்றலை சேமிக்க ஹைட்ரஜன் செல் (Hydrogen Cell Technologies) தொழில்நுட்பம் வருங்காலங்களில் பெரும் பங்காற்றப்போகிறது.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிப்பது என்ற இலக்கை அடைவதற்கு சூரியத் தகட்டிலிருந்து மின்சாரம் (Panel to Power) மற்றும் "இந்தியாவில் உற்பத்தி' (Make in India) ஆகியவை மிகவும் முக்கியமானவை. அடுத்த 4 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி டாலர் முதல் 80 ஆயிரம் கோடி டாலர் வரை இத்துறையில் வணிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்தியாவில் சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் கார்களே இருக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், பெட்ரோல் நிலையங்கள் போல, சோலார் மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த ரூ. 2.2 லட்சம் செலவாகும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 65 சதுரஅடி இடம் தேவை. 
இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் www.teda.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com