இளைஞர்களுக்கான கடனுதவி திட்டம்!

இன்றைய இளைஞர்கள் படிக்கும்போதே ஒயிட் காலர் ஜாப் கிடைக்கும், நாம் என்றும் ஜாலியாக இருக்கலாம் என கனவுலகில் இருப்பார்கள்.
இளைஞர்களுக்கான கடனுதவி திட்டம்!

இன்றைய இளைஞர்கள் படிக்கும்போதே ஒயிட் காலர் ஜாப் கிடைக்கும், நாம் என்றும் ஜாலியாக இருக்கலாம் என கனவுலகில் இருப்பார்கள். அத்தகைய கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாக நிகழும். மற்றவர்களின் நிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மன நிம்மதியற்ற நிலை, வேதனைமிக்க வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.
 பல்வேறு சிரமங்களுக்கு இடையே படிப்பை நிறைவு செய்த லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. அவர்கள் எல்லோருக்கும் அரசு வேலை வழங்க இயலாது. அதே நேரத்தில் போட்டி நிறைந்த இந்த உலகில் தனியார் நிறுவனங்களும் திறமை வாய்ந்த இளைஞர்களையும், பெண்களையும் மட்டுமே பணியில் அமர்த்தும் நிலையும் உள்ளது.
 இத்தகைய சூழலில் நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில் "நம் வாழ்வு நம் கையில்' என்ற ரீதியில் சுயதொழில் முனைவோராக இன்றைய இளைஞர்கள் களம் இறங்க தேவையான உதவிகள் பலவற்றை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.
 படித்துவிட்டு வேலைவாய்ப்பை தேடி வரும் இளைஞர்களுக்கு அரசின் மாவட்டத் தொழில் மையம் சார்பில் வங்கிகள் மூலம் பாரதப் பிரதமரின் சுயவேலை வாய்ப்புக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
 பாரதப் பிரதமரின் சுயவேலைவாய்ப்பு கடனுதவித் திட்டம், கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருமானம் ஈட்ட இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
 ரூ.5 லட்சம் வரை கடனுதவி: ஆட்டோ, ஜெராக்ஸ் மிஷின், செங்கல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த பணிகளுக்காக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மளிகை, ஸ்டேஷனரி வியாபாரம் செய்வதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
 வேலைவாய்ப்பு பதிவு அவசியம்: இத்திட்டத்தில் கடனுதவி பெறுவோர் அவசியம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். சுயதொழில் புரிய விரும்பும் இளைஞர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை நாடினால் அவர்களுக்கு தேவையான விவரங்களை அலுவலர்கள் வழங்குவர்.
 கல்வித் தகுதி: இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புவோர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 பெண்கள், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 45-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாவட்டத் தொழில் வளர்ச்சி மையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
 உரிய பரிசீலனைக்கு பின் விண்ணப்பித்த நபர்களை நேர்காணல் செய்து, தொழில் தொடங்கத் தகுதி உடையவர்களைத் தேர்வு செய்து அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள வங்கிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பர். கடனுதவியாக கோரியுள்ள தொகையை வங்கி மேலாளர் மூலம் பெறலாம்.
 குறைந்த வட்டியுடன் மானிய உதவியுடன் வழங்கப்படும் இந்த கடனைப் பெற்று முறையாக செலுத்தினால், தொழிலின் தன்மைக்கேற்ப தொடர்ந்து கடனுதவிகளை தொடர்புடைய வங்கிகள் பரிசீலனை செய்யும் வாய்ப்பையும் பெற முடியும்.
 அரசு வேலையையும், தனியார் துறை வேலையையும் நம்பி காலம் கடப்பதை விட சுயமாக ஒரு தொழிலை துணிவுடன் தொடங்கினால் அதில் நிச்சயம் சாதிக்க முடியும்.
 -எம்.குமார், மதுராந்தகம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com