இளைஞர்கள் பால்கோவா தயாரிப்பு தொழில் தொடங்கலாம்

படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையே என வேதனைப்படும் இளைஞர்கள், குறைந்த முதலீட்டில் பால்கோவா தயாரிக்கும் தொழில் தொடங்கலாம். குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் இத்தொழிலைத் தொடங்கலாம்.
இளைஞர்கள் பால்கோவா தயாரிப்பு தொழில் தொடங்கலாம்

படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையே என வேதனைப்படும் இளைஞர்கள், குறைந்த முதலீட்டில் பால்கோவா தயாரிக்கும் தொழில் தொடங்கலாம். குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் இத்தொழிலைத் தொடங்கலாம்.
 பால்கோவா தயாரிப்பு என்பது விவசாயத்துடன் தொடர்புடைய ஒரு துணைத் தொழிலாகும். கிராமங்களில் தற்போது கோழிப்பண்ணை, மீன் பண்ணை, காளான் வளர்ப்பு, கால்நடைப் பண்ணை ஆகிய தொழில்கள் பரவலாக செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் 15 மாடுகள் கறக்கும் பாலைக் கொண்டு பால்கோவா தயாரிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் இத்தொழிலில் பலரும் ஈடுபட்டுள்ளனர். மற்ற ஊர்களில் ஆங்காங்கே ஒரு சிலர் குறைந்த அளவில் பால்கோவா தயாரிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளதால், பால்கோவா தயாரிக்கும் தொழில் பலரையும் ஈர்த்துள்ளது. தரமான ஒரு கிலோ பால்கோவா தயாரிக்க சுமார் ஐந்தரை லிட்டர் பசும்பால் தேவை. எருமைப் பாலாக இருந்தால் 4 லிட்டர் போதும். தற்போது எருமை வளர்ப்பு அரிதாகி விட்டதால், பெரும்பாலும் பசும்பாலில் இருந்தே பால்கோவா தயாரிக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் விறகு அடுப்பில்தான் பால்கோவா தயாரிக்கப்பட்டு வந்தது. அடுப்பில் கடாயை வைத்து அதில் 5 லிட்டர் பாலை ஊற்றி, தொடர்ந்து கரண்டியால் கிண்டிக் கொண்டேயிருந்தால் சிறிது நேரத்தில் கோவா தயாராகிவிடும். அதில் தேவையானால் நாம் சர்க்கரை சேர்த்து கோவாவை விற்பனைக்கு கடைகளுக்கு அனுப்பலாம்.
 கோவாவில் இருந்து வேறு ஸ்வீட்கள் செய்வதாக இருந்தால் சர்க்கரையை சேர்க்கக் கூடாது. ஒருவர் குறைந்த பட்சம் 4 அடுப்புகளை வைத்து இத்தொழிலை செய்யலாம். இதற்கு குறைந்த அளவு முதலீடே போதுமானது. நாளடைவில், நீராவி அடுப்பில் கோவா தயாரிக்கும் வகையில் இத்தொழிலில் மாற்றம் காணப்பட்டது. ஒரு பெரிய பாய்லரில் விறகு அடுப்பு மூலம் தண்ணீரை கொதிக்க வைத்து, அதிலிருந்து வெளியாகும் நீராவியை குழாய்கள் மூலம் கோவா தயாரிக்கும் ராட்சத அளவிலான கடாய்களுக்குக் கொண்டு சென்று அந்த வெப்பத்தில் பாலை கொதிக்க வைத்து கோவா தயாரிக்கலாம்.
 ஒரு நீராவி அடுப்பிலிருந்து 2, 4, 6 என தேவைக்கேற்ப கடாய்களை வைத்து கோவா தயாரிக்க முடியும். இந்த முறையில் அதிக அளவில் கோவா தயாரிக்கலாம். இதற்கு கூடுதல் முதலீடு தேவை. வேலூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பால்கோவாவுக்கு சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கிராக்கி அதிகம்.
 அங்குள்ள பெரிய ஸ்வீட் கடைகளில் இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா பெருமளவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குலாப் ஜாமூன் தயாரிக்கவும், பேடா ஸ்வீட்கள் தயாரிக்கவும் பால்கோவா தேவைப்படுகிறது.
 முன்பு பேருந்துகள் மூலம் சென்னை, பெங்களூருக்கு கோவா அனுப்பி வைக்கப்பட்டது. இத்தொழில் அபிவிருத்தி அடைந்ததை அடுத்து சிலர் தனியாக வேனில், தயாரிப்பாளர்களிடம் இருந்து கோவாவை வாங்கிச் சென்று பெருநகரங்களில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர்.
 அதற்கான பணத்தையும் அவர்கள் நாள்தோறும் பெற்று வருகின்றனர். முன்பெல்லாம் மழைக் காலங்களில் புற்கள் நன்கு வளர்ந்து மாடுகளுக்கு நல்ல தீவனம் கிடைக்கும். பால் உற்பத்திப் பெருகும். அப்போது பால்கோவா தயாரித்து விற்கப்பட்டது.
 ஆனால், இப்போது எல்லா காலத்திலும் மாடுகளுக்கு தீவனம் அளித்து பால் உற்பத்தி சீராக்கப்பட்டுள்ளது. இதனால் பால்கோவா தயாரித்து விற்பது என்பது நிரந்தரத் தொழிலாகி விட்டது.
 - கே. நடராஜன், குடியாத்தம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com