உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் புதிய மாவட்டம்..!

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உதயமாகியுள்ள சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு, நிதி, தொழில் துறையினருக்குத் தேவையான அனைத்து அரசுத் துறைகளின்
உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் புதிய மாவட்டம்..!

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உதயமாகியுள்ள சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு, நிதி, தொழில் துறையினருக்குத் தேவையான அனைத்து அரசுத் துறைகளின் விரைவான சேவை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக எதிர்நோக்கி காத்திருக்கிறது.
 வேலூர் மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரான ராணிப்பேட்டையில் கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிப்காட் 2, சிட்கோ 1, 2, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சிப்காட் வளாகத்தில் உருவாகின.
 இத்தொழிற்பேட்டைகளில் நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம், தோல் பொருள்கள் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கணிசமான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தோல் தொற்சாலைகள், மத்திய அரசின் கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி மாற்றும் ஆராய்ச்சி நிலையம், ரசாயனம், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 அதேபோல், முகுந்தராயபும் ஊராட்சிக்கு உள்பட்ட நெல்லிக்குப்பம் அருகே சிப்காட் பேஸ் 3 மற்றும் 260 ஏக்கர் நிலப்பரப்பில் பொறியியல் துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச தொழில் நிறுவனங்கள் பல தொழிற்சாலையை நிறுவி தங்களது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
 இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கினால் முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிச்சலுகை கிடைக்கிறது. சுங்கம், வணிகவரி, சேவை வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தத் தேவையில்லை. அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வருமான வரி மட்டும் செலுத்தினால் போதும்.
 தொழிற்பேட்டைக்கு மிக அருகிலேயே சென்னை துறைமுகம் மற்றும் ரயில் நிலையம் உள்ளன. மேலும், அனைத்து நகரங்களையும் இமைக்கும் தங்க நாற்கர சாலை அமைந்துள்ளதால் போக்குவரத்தும் எளிது போன்ற காரணங்களுக்காக தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை இங்கு அமைத்து வருகின்றன.
 சென்னை-பெங்களூரு விரைவு வழித் (எக்ஸ்பிரஸ்வே) திட்டம் இரு நகரங்களை மட்டுமே இணைக்கும் வகையில் ராணிப்பேட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு அருகிலேயே சாலை அமைக்கப்பட உள்ளது.
 இதற்காக ஒரு கி.மீட்டருக்கு சுமார் ரூ. 18 முதல் ரூ. 20 கோடி செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் மூன்று மணிநேரத்தில் செல்லலாம். இரு நகரங்களிடையே பயண நேரம் குறைந்து சுமார் 86 கி.மீ. தூரம் மிச்சமாகும் என கண்டறிப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை தொழில் நகரம் புத்துயிர் பெற்று தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகும் என தொழில் துறைனர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 இந்நிலையில் தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3-ஆகப் பிரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா உரையில் அறிவித்தார்.
 அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உதயமாகியுள்ள இந்த சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்காகவும், உள்கட்டமைப்பு, நிதி, தொழில் துறையினருக்கான அனைத்து அரசுத் துறைகளின் அனுமதி, சான்றிதழ் உள்ளிட்ட விரைவான சேவைகளைப் பெற மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காகவும் எதிர்நோக்கி காத்திருப்பதாக சிப்காட், சிட்கோ, புதிய பொருளாதார மண்டலம், சிறு, குறு தொழில் துறையினரும் காத்திருக்கின்றனர்.
 - பெ.பாபு
 ராணிப்பேட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com