உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் கலைத்தட்டு

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் கலைத்தட்டு

சோழர் காலம் முதல் பாரம்பரியக் கலைகளுக்குப் புகழ்பெற்ற நகரமாக இருக்கிறது தஞ்சாவூர். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை போன்றவற்றின்

சோழர் காலம் முதல் பாரம்பரியக் கலைகளுக்குப் புகழ்பெற்ற நகரமாக இருக்கிறது தஞ்சாவூர். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை போன்றவற்றின் வரிசையில் தஞ்சாவூர் கலைத் தட்டும் ஒன்று.
 இக்கலைத் தட்டு இரண்டாம் சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் (1777 - 1832) அறிமுகம் செய்யப்பட்டது. வட்ட வடிவமான இத்தட்டு பரிசுப் பொருளுக்காகத் தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.
 உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் கலைத்தட்டு செய்வதற்குப் பித்தளைத்தகடு, செம்புத்தகடு, வெள்ளித்தகடு, குங்குலியம் போன்றவையே மூலப் பொருள்கள். இத்தட்டின் அடிப்பகுதியான பித்தளை மீது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதில், வெளிச்சுற்றில் செம்பு, வெள்ளித் தகடுகளைப் பூ, தெய்வ உருவங்களுடன் கூடிய புடைப்புச் சிற்பங்களாகப் பதிய வைக்கப்படுகின்றன. நடுச்சுற்றில் செம்பு, பித்தளையால் சித்திர வேலைப்பாடுகள் செய்து பதிக்கப்படுகின்றன. உள்சுற்றில் வெள்ளித் தகடில் மயில், வணிக நிறுவனத்தின் இலச்சினை என விரும்பிய வடிவங்களில் புடைப்புச் சிற்பமாகப் பதியப்படுகிறது. இதன் பிறகு இயற்கைப் பொருள்களால் பளபளப்பாக்கி மெருகூட்டப்படுகிறது. இதில், வெள்ளி, செப்புத் தகடுகளில் செய்யப்படும் புடைப்புச் சிற்பத்துக்காகத் தயாரிக்கப்படும் அச்சு தயாரித்தலே தஞ்சாவூர் கலைத் தட்டின் தனிச்சிறப்பு.
 இப்போது, இத்தொழிலில் ஏறத்தாழ 250 பேர் இருப்பதாகச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கிட்டத்தட்ட 50 பேர் மட்டுமே முழுமையாக இத்தொழிலை நம்பி உள்ளனர். பெரும்பாலான கைவினைஞர்கள் தச்சு வேலை உள்ளிட்ட கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர்.
 ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு கைவினைஞரால் 3 முதல் 4 கலைத்தட்டுதான் உருவாக்க முடியும்.
 ஒரு தட்டுக்கு ரூ. 80 வீதம் அதிகபட்சமாக ரூ. 320 தான் நாள் கூலியாகக் கிடைக்கும். இதுவும் மாதத்துக்கு 5 முதல் 10 நாள்களுக்குத்தான் வேலை இருக்கும். மற்ற நாள்களில் வேலை இருக்காது. இந்த நிலைமை 10 ஆண்டுகளாகவே இருக்கிறது.


இதுகுறித்து தஞ்சாவூர் கலைத்தட்டு கைவினைஞர்கள் கூறியது: "இத்தொழிலில் முன்புபோல இப்போது வேலை இருப்பதில்லை. செம்பு, வெள்ளித் தகடுகளுக்குப் பதிலாக அலுமினிய தகடுகளைப் பதித்து, தஞ்சாவூர் கலைத்தட்டு என விற்பனை செய்யப்படுகிறது. அலுமினிய தகடுகள் ஆயத்தமாகவே இருப்பதால், அதை யார் வேண்டுமானாலும் தட்டில் பதிய வைக்கலாம். இதில், கைவினைக் கலைஞர்களுக்கு வேலை இல்லை.
 அசல் கலைத்தட்டின் விலை ரூ. 900, 1,000 என்றால் அலுமினிய கலைத்தட்டின் விலை ரூ. 300, ரூ. 350-க்கே கிடைக்கிறது. எனவே, விலை குறைவு காரணமாக அலுமினியம் பதிக்கப்பட்ட தட்டுகளையே மக்களும் வாங்க விரும்புகின்றனர். இதுவும், இத்தொழிலில் வேலை குறைந்துவிட்டதற்குக் காரணம்' என்றனர் கைவினைஞர்கள்.
 எனவே, தஞ்சாவூர் கலைத்தட்டுக் கைவினைஞர்களுக்கு முதலீட்டுக்காக அரசு வங்கிக் கடனுதவி செய்ய வேண்டும். மேலும், கைவினைஞர்களால் உருவாக்கப்படும் தஞ்சாவூர் கலைத்தட்டுகளைச் சந்தைப்படுத்துவதற்கு பூம்புகாரை போன்று வேறு சில நிறுவனங்களையும் அரசுத் தோற்றுவிக்க வேண்டும். ஆங்காங்கே கண்காட்சிகள் நடத்தி விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என கைவினைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 இதனிடையே, கைவினைஞர்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதால் இப்போது தஞ்சாவூர் கலைத்தட்டு செய்வதற்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இதனால், இக்கலையும் படிப்படியாக மறையக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com