ஏற்றுமதி அதிகரிக்க தோல் தொழிலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?

பொருளாதார மந்த நிலையால், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை நோக்கி தோல் தொழிற்சாலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
ஏற்றுமதி அதிகரிக்க தோல் தொழிலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?

பொருளாதார மந்த நிலையால், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை நோக்கி தோல் தொழிற்சாலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
 இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருள்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. தமிழ்நாட்டில் தோல் தொழில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடந்தாலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய பகுதியில் இத்தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
 தற்போது இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நீடிப்பதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வாகன உற்பத்தி, ஜவுளி போன்ற தொழில் நிறுவனங்கள் மிகவும் தேக்க நிலையில் இருப்பதாகவும், இதனால் பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடக்கூடிய சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மந்த நிலை தோல் தொழிலையும் விட்டு வைக்கவில்லை. தோல் தொழில் கடந்த 4 ஆண்டுகளாக இறங்கு முகத்தில் செல்கிறது. தோல் பொருள்கள், ஷூ போன்றவை ஆம்பூர், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன், பிரான்சு, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷ்யா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது அந்தந்த நாடுகளும் தோல் உற்பத்தியிலும் இறங்கி விட்டதாலும், அங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாலும் இந்திய தோல் பொருள்களுக்கு சர்வதேச சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
 தோல் தொழில் சரிவுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைப்படுத்தி வரும் கடுமையான விதிமுறைகள், உலக நாடுகளில் விரும்பும் காலமாற்றத்துக்கு ஏற்ப புதுமையான வடிவமைப்புகளை தயாரிக்காத நிலை, இந்திய கால்நடைகள் வளர்ப்பில் உள்ள குறைகள் போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.
 ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாகவும் தோல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகள், அதன் படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கெடுபிடிகள், ஏற்றுமதி செய்த நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி தொகை திரும்பப் பெற ஏற்படும் காலதாமதம் போன்ற காரணங்களால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு சென்றுள்ளன.
 இதனால் புதியதாக இயந்திரம் வாங்கக்கூட தொழில் நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் பல தொழில் நிறுவனங்கள் உற்பத்தி அளவை குறைத்து வருகின்றன.
 இந்நிலையில் இந்தியாவில் தோல் தொழிலில் உற்பத்திச் செலவு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் தைவான், வியட்நாம், வங்கதேசம், இந்தோனேஷியா, ஆப்ரிக்க நாடுகளில் தோல் தொழிலுக்கு உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால் அந்தநாடுகளில் தோல் மற்றும் தோல் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதனால் பல நாடுகள் தங்களுக்குத் தேவையான தோல் பொருள்களை விலைகுறைவான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் இந்திய தோல் தொழில் மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டது.
 தோல் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பொருத்தவரை கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 6.49 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2015-16-இல் 5.85 பில்லியன் அமெரிக்க டாலர், 2016-2017-இல் 5.66 பில்லியன் அமெரிக்க டாலர் என அதன் வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சம் அடைய செய்துள்ளது. எனவே தோல் தொழில் தொடர்ந்து நடத்த அரசு ஏற்றுமதி செய்யும் தோல் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை பழையை முறைப்படி வழங்க வேண்டும். வெளிநாட்டினர் விரும்பி வாங்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும் தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கு ஏற்ப பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க கூடிய தோல் தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை வழங்க வேண்டும்.
 - எம்.அருண்குமார், ஆம்பூர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com