கால்நடை வளர்ப்பில் வழிகாட்டும் பொறியியல் பட்டதாரி

சென்னையில் தனியார் பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளராக மாதம் ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்த வேலையை விட்டு
கால்நடை வளர்ப்பில் வழிகாட்டும் பொறியியல் பட்டதாரி

சென்னையில் தனியார் பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளராக மாதம் ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்த வேலையை விட்டு கால்நடைகள் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு மற்ற இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார் கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த எம்.டெக். பட்டதாரி ஆர். சரவணபிரபு (31).
 கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினம். கோவையில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கால்நடைகள் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக, கோடங்கிப்பட்டியில் ஆள்களை நியமித்து ஆடு, மாடு, கோழி, குதிரைகளை வளர்த்து வந்தார்.
 கடந்த 2013 -ஆம் ஆண்டில் திடீரென ரத்தினம் இறந்த நிலையில், அவர் வளர்த்து வந்த கால்நடைகளை விற்க மனமில்லாமல் அவரது இளையமகன் சரவணபிரபு, தனது வடிவமைப்புப் பொறியியல் பணியை விட்டு, கால்நடைகளை தானே பராமரிக்கத்தொடங்கினார்.
 தொடக்கத்தில் குடும்பத்தினர்,உறவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்த அவர், பின்பு தொழிலில் நல்ல லாபம் பெறத் தொடங்கியதால் அத்தனை எதிர்ப்புகளும் அடங்கிப் போயின.
 தந்தையின் ஆசை, தனது குடும்பச் சூழல், வேலையை விட்டு வந்தது, கால்நடைகளின் பராமரிப்பு குறித்து கூறுகிறார் சரவணபிரபு:
 கால்நடைப் பண்ணை அமைந்துள்ள இந்த 5 ஏக்கர் நிலம்தான் எங்கள் சொத்து. இங்கு 25 குதிரைகள், 53 கலப்பின மாடுகள், 600 ஆடுகள், 150 கோழிகளை எனது தந்தை வளர்த்து வந்தார். இதனால் எனக்கும் சின்ன வயதில் இருந்தே விலங்குகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம்.
 நான் கால்நடை மருத்துவராக வேண்டும் என்றுதான் படித்தேன். ஆனால் அப்பா என்னையும் (சரவணபிரபு), என் அண்ணன் கார்த்திக்பிரபுவையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் படிப்பில் சேர்த்துவிட்டார்.
 2009- ஆம்ஆண்டில் பி.இ. படித்து முடித்த பின்னர், கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து 2011- ஆம் ஆண்டில் எம்.டெக். படித்து முடித்தேன். இதன் பின்னர், சென்னையில் ரூ.10
 ஆயிரத்தில் பணியில் சேர்ந்தாலும், மனதுக்குள் அப்பா பராமரித்த பண்ணைக்கு வர முடியவில்லையே, நாம் ஆசைப்பட்ட விலங்குகள் வளர்ப்பில் ஈடுபட முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
 இந்நிலையில்தான் 2013- ஆம் ஆண்டில் தந்தை திடீரென காலமானார். அண்ணன் சென்னையில் வேலை பார்த்து வந்ததால், எனது தந்தை விட்டுச் சென்ற பண்ணையை விடுமுறை நாள்களில் பார்த்துக் கொள்ளத் தொடங்கினேன்.
 மேலும் ஆள்களை நியமித்து பண்ணையைத் தொடர்ந்து பராமரிக்கத் தொடங்கினாலும், நேரடியாக நிர்வாகம் செய்ய முடியாமல் போனதால், 40 ஆடுகள், 50 கோழிகள், 4 குதிரைகள் இறந்தன. அதனால் கால்நடைப் பண்ணையை நானே நிர்வகிக்கலாம் என முடிவு செய்தேன்.
 2016 ஆம் ஆண்டு வரை ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை பார்த்து வந்த நான், அதன் பின்னர் வேலையை விட்டுவிட்டு, பண்ணையை நிர்வகிக்கத் தொடங்கினேன். தாயார் மற்றும் உறவினர்கள் இதை வேண்டாம் என வற்புறுத்திய போதும், என்னால் முடியும் என்று துணிந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபடத்தொடங்கினேன் என்கிறார் சரவணபிரபு.
 தொடக்கத்தில் சிரமமாகத்தான் இருந்தது. பின்னர் ஆன்லைன் விடியோக்கள், கால்நடை மருத்துவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் தெளிவு பெற்றேன்.
 குதிரை, மாடு, கோழி,ஆடுகளின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கிய நான், இதற்கு தேவையான தீவனங்களை தோட்டத்திலேயே விளைவித்தேன். பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை மட்டும்தான் வெளியில் வாங்குகிறேன்.
 2016- ஆம் ஆண்டில் நாட்டு மாட்டுப் பால் விற்பனையைத் தொடங்கினேன். 8 லிட்டர் பாலில் தொடங்கி இப்போது தினமும் 65 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது 15 நாட்டு மாடுகள், 13 குதிரைகள், 60 கோழிகள், 75 ஆடுகள் வரை உள்ளன. நாட்டு மாட்டுப்பால் கரூர் நகரத்துக்குள் விற்பனையாகிறது.
 என்னிடம் இருக்கும் குதிரைகள் அனைத்தும் பண்டைய கால ராஜாக்கள் பயன்படுத்திய போர்க்குதிரையான மார்வாரி குதிரை ரகங்கள். ஆண்டுக்கு தலா ஒரு குதிரையை ரூ. 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை விற்கிறேன்.
 நாட்டு மாட்டுப் பால் விற்பனை மூலம் மாதம் ரூ. 40 ஆயிரம், ஆடு விற்பனை மூலம் மாதம் ரூ.30 ஆயிரம், கோழி விற்பனை மூலம் ரூ. 24 ஆயிரம் கிடைக்கிறது. தவிர, கோழி முட்டைகள், சாண எரு, குதிரை லத்தி விற்பனை மூலமாக மாதம் ரூ. 20 ஆயிரம் கிடைக்கும். அனைத்தும் சேர்த்து மாதம் ரூ. 1.20 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. என்னைப் போல துணிந்து இந்த தொழிலுக்கு வரும் பட்டதாரி இளைஞர்கள், பால் மட்டும் விற்பேன் என நினைக்கக் கூடாது. பாலுடன் முட்டை, பஞ்சகாவ்யா போன்ற இயற்கை உரம் போன்றவற்றையும் விற்றால் மட்டுமே இந்தத் தொழிலில் ஜெயிக்க முடியும்.
 இத்தொழிலுக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் ரூ.100 தினக்கூலிக்கு ஆள் கிடைத்தார்கள். இப்போது கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். எனது பண்ணையில் மூன்று பணியாளர்களுக்கு நாள்தோறும் தலா ரூ.300 கூலி தருகிறேன் என்று புன்னகையோடு குறிப்பிட்டார் சரவணபிரபு.
 கால்நடை வளர்ப்பில் என்ன கிடைத்துவிடப் போகிறது என்று கூறுபவர்களுக்கு மத்தியில், மாதம் ரூ.1.20 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம் என்பதற்கு வழிகாட்டுகிறார்கோடங்கிப்பட்டி பொறியியல் பட்டதாரி சரவணபிரபு.
 

அ. அருள்ராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com