கிராமப்புற வறுமையை வெல்லும் "வெல்மா" உற்பத்திகள்

பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளையும் சுயதொழில் முனைவோராக்குவதுடன், கிராமப்புற வறுமையை வெல்லம் அற்புதப்படைப்பாக விளங்குகிறது "வெல்மா' உற்பத்திப் பொருள்கள்.
கிராமப்புற வறுமையை வெல்லும் "வெல்மா" உற்பத்திகள்

பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளையும் சுயதொழில் முனைவோராக்குவதுடன், கிராமப்புற வறுமையை வெல்லம் அற்புதப்படைப்பாக விளங்குகிறது "வெல்மா' உற்பத்திப் பொருள்கள்.
 தமிழக ஊரக, நகர்ப்புற வாழ்வதார இயக்கத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 817 சுய உதவிக் குழுக்களும், அவற்றில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 227 பெண்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்த மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நீடித்த வருவாயை ஏற்படுத்த சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பல்வேறு வகையிலான பொருள்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படுகின்றன.
 அதன்படி, இம்மாவட்டத்தில் சத்துமாவு, மகளிர் ஆபரணங்கள், தேன், அகர்பத்தி, சிறுதானிய உணவு வகைகள், குழந்தைகளுக்கான படுக்கைகள், பொம்மைகள், தின்பண்டங்கள், தேன், ஊறுகாய், சாம்பிராணி, மண்புழு உரம், நைட்டிகள், உள்பாவாடைகள், சணல் பைகள், பினாயில், சலவைத் தூள், சோப் ஆயில், பிளிச்சிங் பவுடர், கால்நடை தீவனம், சானிடரி நாப்கின் என 150 வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 மேலும், தையல் பயிற்சி மையம், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம், தோல் பொருள்கள் உற்பத்தி நிறுவனம், செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடை, உற்பத்தி நிறுவனம், விளையாட்டு பொம்மைகள் உற்பத்தி நிறுவனம், சிறிய கோழிப் பண்ணை உள்ளிட்ட தொழில்கள் செய்வும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு மானிய அடிப்படையில் வங்கிக் கடனுதவியும் அளிக்கப்பட்டு வருகின்றன.
 உற்பத்தி செய்யும் பொருள்களை பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளிலும் விற்பனை செய்ய "வெல்மா' என்ற பெயரில் வணிகச் சின்னமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கு வணிகச் சின்னம் ஏற்படுத்தி சந்தைப்படுத்துவது வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாகும். பொருள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் இடையே உள்ள இடையூறுகளை அகற்றி, சுய உதவிக் குழுக்கள் மூலம் தரமான பொருள்களை உற்பத்தி செய்தல், அவற்றை சந்தைப்படுத்துதல், தயாரிப்புகளுக்கு தனி இடம் உருவாக்குதல், ஒரே வணிக முத்திரையில் அனைத்து பொருள்களை விற்பனை செய்தல் என்பதே இதன் நோக்கமாகும்.
 இதையடுத்து "வெல்மா' உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தவும், அதன்மூலம் உற்பத்தியில் இல்லாத மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக "வெல்மா' விற்பனை அங்காடிகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன.
 அந்த வகையில், "வெல்மா' வணிக முத்திரையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நீடித்த வருவாய் ஈட்டித்தரப்படுவதால், இதன்மூலம் ஏராளமான பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் சுயதொழில் முனைவோராக்கப்பட்டு வருகின்றனர்.
 அந்தவகையில், மாவட்டம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஏராளமான பொருள்களைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்து "வெல்மா' வணிக முத்திரையின் கீழ் விற்பனை செய்து தங்களுக்கு நிலையான வருவாயையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
 தற்போது "வெல்மா' உற்பத்திகள் இணையதளங்கள் மூலமாகவும், முகவர்கள் வழியாக தனியார் விற்பனை அங்காடிகளிலும், வணிக மையங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அப்பொருள்களுக்கான தேவையும், விற்பனையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மகளிருக்கான சுய வேலைவாய்ப்பும் மேம்பாட்டு வருகின்றன. அந்தவகையில், வெல்மா உற்பத்திகள் கிராமப்புற வறுமையை அகற்றி பொருளாதாரத்தை ஊக்குவித்து வருகிறது என்றால் அதில் மிகையில்லை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com