கிராமப்புறங்களில் மவுசு குறையாத உரல், அம்மிக்கல்

மாவு அரைப்பதற்கான நவீன இயந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், அரை நூற்றாண்டு காலமாய் மேற்கொண்டு வரும் தொழில் நலிவடைந்து வந்தாலும், கிராமப்புறங்களில் உரல், அம்மிக்கல்லுக்கு
கிராமப்புறங்களில் மவுசு குறையாத உரல், அம்மிக்கல்

மாவு அரைப்பதற்கான நவீன இயந்திரங்கள் வந்துவிட்ட நிலையில், அரை நூற்றாண்டு காலமாய் மேற்கொண்டு வரும் தொழில் நலிவடைந்து வந்தாலும், கிராமப்புறங்களில் உரல், அம்மிக்கல்லுக்கு இன்றும் மவுசு இருக்கத்தான் செய்கிறது.
 பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை உள்ளிட்ட பகுதிகளில் அம்மிக்கல், உரல் மற்றும் ஆட்டுக்கல் செதுக்கும் பாரம்பரியத் தொழிலில், சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
 இத்தொழிலில் மலையில் கல் உடைப்பவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நவீன மாவு அரைக்கும் இயந்திரங்களின் வருகையால், அம்மிக்கல், உரல், ஆட்டுக்கல் ஆகியவற்றுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்தது.
 சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுகள்தோறும் அம்மிக்கல், ஆட்டுக்கல் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. பெரிய உணவகங்கள் முதல் சிறு குடும்பத்தில் கூட அம்மிக்கல் மூலமே மசாலாப் பொருள்கள் அரைக்கப்பட்டு வந்தன. உரல், ஆட்டுக்கல் மூலமே மாவு அரைத்தல், நெல் மற்றும் சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை இடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 அம்மியில் அரைக்கும் மசாலா, உரலில் இடிக்கும் மாவுப் பொருள்களில் இருந்து தயார் செய்யப்படும் பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் ருசியாக இருப்பதோடு, நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருக்கும்.
 தற்போது நவீன இயந்திரங்களின் வருகையால் அம்மிக்கல், ஆட்டுக்கல் தொழில் நலிவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 இது குறித்து, பெரம்பலூர்- ஆத்தூர் சாலை எசனையில் இத்தொழிலை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் கூறியது:
 தரமான கருங்கற்களைத் தேர்வு செய்து, உளியால் நுணுக்கத்துடன் வேலைகள் செய்து உரலையும், ஆட்டுக்கல்லையும் செதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு உரலும், அம்மிக்கல்லும் மட்டுமே செதுக்க முடியும். இதை விற்பனை செய்தால் ரூ. 300 முதல் ரூ. 400 கிடைக்கும். அம்மிக்கல்லில் அரைத்து பயன்படுத்துவதால் நன்மைகள் அதிகம் உள்ளன.
 தற்போது, மிக்ஸி, கிரைண்டர்கள் வித விதமாக வந்துவிட்டதால் சிரமப்படாமல் அவற்றையே பெண்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
 150 கற்கள் கொண்ட லோடுக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகும். தொடர்ந்து கூலி ஆள்கள் மூலம் அம்மி, உரல் தயார் செய்வதற்கு குறைந்தது 2 மாதங்களாகும். பின்னர், தயாரான பொருள்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிராமங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறோம். இதில் ஆட்டுக்கல்லை ரூ. 1,200 முதல் ரூ. 1,300 வரையிலும், அம்மிக்கல்லை ரூ. 600 முதல் ரூ. 700 வரையிலும் விற்பனை செய்கிறோம்.
 நகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வாடகை வீட்டில் வசிப்போர் அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால், சிறு, சிறு அம்மிக்கல் செதுக்கப்பட்டு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்து வருகிறோம். இதுபோன்ற பொருள்கள் நகர்ப்புற மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மிக சொற்ப லாபமே கிடைக்கிறது. ஆனால், கிராமங்களில் உரல், அம்மி விற்பனையாகிறது. மேலும், நகர் பகுதிகளில் விற்பனை குறைந்து விட்டதால் இத்தொழில் மூலம் கிடைக்கும் வருவாயும் குறைந்து விட்டது.
 இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தற்போது குறைந்த அளவிலான தொழிலாளர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் குடும்பத்துடன் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர் என்றனர் அவர்கள்.
 கிராமங்களில் இன்றும் இத் தொழிலுக்கு ஆதரவு இருப்பதால், பாரம்பரிய தொழிலை விட்டுவிடாமல் சாலையோரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களை பாதுகாக்கவும் தமிழக அரசு கடனுதவியும், விற்பனை மையமும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் வேண்டுகோளாகும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com