சுயமாகத் தொழில் தொடங்க...தேவையான நடைமுறைகள்

இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் பல நேரங்களில் பலரும்
சுயமாகத் தொழில் தொடங்க...தேவையான நடைமுறைகள்

இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் பல நேரங்களில் பலரும் தவித்து வருகின்றனர்.
 தொழிலைத் தேர்ந்தெடுத்தல், வங்கியில் கடன்பெறுவதற்குத் திட்ட அறிக்கை தயாரித்தல், தொழிலைப் பதிவு செய்தல், தொழில்முறை மின் விநியோகத்தை பெற மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி ஒவ்வொரு சுயதொழில் முனைவோரும் அறிந்து கொள்வது அவசியம்.
 இதுகுறித்து திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் என். கனகசபாபதி வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கிறார். தொடர்ந்து அவர் கூறியது:
 தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முன்பு: ஒரு தொழிலைத் தேர்வு செய்வதற்கு முன்பு அதில் உங்களின் ஆர்வம், திறன், அத்தொழிலுக்கு உள்ள வரவேற்பு, அதைச் செய்வதற்கான சூழலின் சாத்தியம் போன்றவற்றை பரிசீலித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 அந்தத் தொழில் ஆரம்பித்தால் நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை தவறு. இந்த தொழில் தேவையில்லை என்று நினைக்கும் பலவும் மிக அதிக வருமானம் தருவதாக இருக்கக்கூடும். எனவே, தேர்ந்தெடுக்க நினைக்கும் தொழில் பற்றி நன்கு ஆய்ந்து ஆராய்ந்து பின்னர் அதை தொடங்க வேண்டும்.
 தொழில்முறை மின்சார விநியோகம்: வீட்டுப் பயன்பாடு, வணிகப் பயன்பாடு என்று இரண்டு வகைகளில் மின்சாரக் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.
 அதிக மின்சாரம் தேவைப்படாத தொழில்களை குடிசைத் தொழிலில் (அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில்) பதிவுசெய்து வீட்டிலேயே செய்யலாம். வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தொழிலுக்காகப் பயன்படுத்தும்போது, இதற்கான அனுமதியை, நீங்கள் நிலம் அல்லது வீட்டு வரி செலுத்தும் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று, மின்சார வாரியத்திடம் கொடுத்து வணிக ரீதியான இணைப்பை பெறுவதற்கு அனுமதியைப் பெறலாம்.
 வங்கிக் கடன், திட்ட அறிக்கை: தொழிலுக்கான வங்கிக் கடன் பெற, ஒன்றாக சேர்க்க திட்ட அறிக்கை அவசியம். குறிப்பிட்ட தொழிலை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வலுவாகச் சொல்ல வேண்டும். அது சூழலுக்கு பொருத்தமான தொழிலா, உத்தேச வருமானம், லாபம் என்ன, உற்பத்தித் தொழில் எனில் அதன் சந்தை நிலவரம் எப்படி என தொழில் சம்பந்தப்பட்ட தகவல்களை விளக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட வேண்டும்.
 வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழிலா அல்லது தனியாக இடம் பிடித்து ஆரம்பிக்க வேண்டுமா, முதலீட்டு மூலப்பொருள்கள் என்னென்ன, இயந்திரங்கள் வாங்க வேண்டிவருமா என்பது போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.
 அவற்றை எந்த நிறுவனத்திடம் இருந்து பெறுகிறீர்களோ, அவர்களின் முழு விவரம் மற்றும் தொழில் முகவரியைக் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட தொழிலில் நீங்கள் பயிற்சி பெற்றிருப்பின், அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.
 திட்ட அறிக்கை தயாரானதும், நீங்கள் வசிக்கும் அல்லது தொழில் தொடங்கவிருக்கும் இடத்துக்குள்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சமர்ப்பித்து, வங்கிக் கடனைப் பெறலாம். இதில் குறிப்பிடப்பட வேண்டியது, திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள தொழிலுக்கான மூலப்பொருள்கள்/இயந்திரங்கள் வாங்கவிருக்கும் நிறுவனத்தின் பெயரில்தான் தொகை தரப்படும். உங்கள் கையில் பணமாகத் தரப்படாது. இதே காரணத்தால், பழைய இயந்திரங்கள் வாங்குபவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காது. வங்கிக் கடன் நடைமுறைகளும் விதிமுறைகளும், ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
 தொழில் பதிவு: தொழில் நல்ல கட்டத்தில் இருக்கும்போது, சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் தங்களின் தொழிலை நிரந்தரமான தொழிலைப் பதிவு செய்துகொள்வது, தொழில் முனைவோருக்கு நன்மை பயக்கும்.
 அதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி கோடு' மற்றும் மின்னஞ்சல் முகவரி முக்கியம். கட்டணம் எதுவும் இல்லை. இதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் திருத்தங்கள் செய்ய முடியாது என்பதால், தேவையான விவரங்களை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டு பதிவு செய்யவும்.
 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின், அதற்கான ஒப்புகைச் சான்றை (அக்னாலட்ஜ்மென்ட்) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். அதில் யாருடைய கையெழுத்தும், ஒப்புதலும் தேவையில்லை. தொழில்முனைவோரின் முதலீட்டு தொகைக்கு ஏற்றபடி குறு, சிறு, நடுத்தர தொழிலா என்பதை ஒப்புகைச் சீட்டில் தெரிந்து கொள்ளலாம். இதில் உற்பத்தித் தொழில் பதிவு மற்றும் சேவை தொழில் பதிவு என இரு வகை உண்டு.
 உற்பத்தி தொழில் பதிவு: குறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் - தொழில் உபகரணங்களுக்கு 25 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்.
 சிறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் - தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள் நடுத்தர தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் - தொழில் உபகரணங்களுக்கு 10 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
 சேவை தொழில் பதிவு: குறு தொழில் சேவை தொழில்முனைவோர் - தொழில் உபகரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள் சிறு தொழில் சேவை தொழில்முனைவோர் - தொழில் உபகரணங்களுக்கு 2 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள் நடுத்தர தொழில் சேவை தொழில்முனைவோர் - தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
 தொழில் பதிவின் பலன்கள்! யுஏஎம்-இல் பதிவு செய்து அதற்கான சான்றைப் பெற்றவர்கள், கீழ்க்காணும் பலன்களைப் பெற முடியும். இது ஒரு நிரந்தரப் பதிவாகும். தொழில்முனைவோர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் தொழிற்பயிற்சி மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளலாம். தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கடன் பெறும்போதும் இதைச் சமர்ப்பிப்பது கூடுதல் பலமாக இருக்கும். உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு பெறவும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களைப் பெறவும் இந்த பதிவு மிகவும் அவசியம் என்றார் அவர்.
 ஜி. செல்லமுத்து
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com