தமிழக சாலைகளில் விரைவில் மின்சார வாகனங்கள் 

வாகன உற்பத்தி துறையில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், அடுத்த கட்ட நகர்வாக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தமிழக சாலைகளில் விரைவில் மின்சார வாகனங்கள் 

வாகன உற்பத்தி துறையில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், அடுத்த கட்ட நகர்வாக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
 மின் வாகன உற்பத்திக்கு தமிழக அரசு தாராளமாக சலுகைகளை அறிவித்துள்ளதோடு, இதற்கென தனிக்கொள்கையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தமிழகம் விரைவில் மின்வாகன உற்பத்தி கேந்திரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 நீதி ஆயோக் அழுத்தம்: சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் தேவையை உலகின் பல நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. இந்தியாவிலும் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதி ஆயோக் தொடர்ந்து அழுத்தமாகச் சொல்லி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களின் விலை இரு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், நாட்டில் மின் வாகனங்களை "சார்ஜ்' செய்யும் வசதிகள் போதுமானதாக இல்லை என்பதும் அவற்றின் விற்பனை குறைவாக உள்ளதற்கான காரணங்கள்.
 இதுபோன்ற சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்த நீதி ஆயோக், இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இது பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் மத்திய அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
 அதில், 2025-ஆம் ஆண்டு முதல் 150 சிசி இழுவைத் திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் மின்சார ஆற்றல் பெற்ற மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
 அதன்படி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய வாகன கொள்கைகளை உருவாக்க வேண்டும், அதில் 2030-ஆம் ஆண்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இயங்கும் வாகனங்களின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
 இந்தக் கொள்கை முடிவு குறித்து அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விளக்கம் வழங்கிட வேண்டும். அரசு வாகனங்களும் மின்சாரப் பயன்பாட்டுக்கு முதல்கட்டமாக மாற்றப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து மக்களின் பெட்ரோல், டீசல் கார் மின்சார ஆற்றலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் 50 ஜிகாவாட் ஹவர் பேட்டரிகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள், அமிதாப் காந்த் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ரூ.3 லட்சம் கோடி மீதமாகும்: இந்தியாவில் மின்சார பயன்பாட்டிலான வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்தால், மற்ற நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவில் ரூ.3 லட்சம் கோடி மிச்சமாகும். மின்சாரப் பயன்பாட்டுக்கு வாகனங்கள் மாற்றப்பட்டால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம் எனவும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து பரிசீலித்த மத்திய அரசு, மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 மேலும் மின்சார வாகன பயன்பாட்டை விரைவாக ஏற்றுக் கொள்ளும் விதமாக இத்தகைய வாகனங்களின் கொள்முதல் மற்றும் சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்த ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 வாரி வழங்கப்படும் சலுகைகள்: மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மின்சார வாகனங்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், மின்னணு வாகன கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் வருமானவரி கழிவுத் தொகையாக கணக்கிடப்படும். மின்னணு வாகனங்களுக்கான சில உதிரி பாகங்களுக்கு சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்படும். அந்த வாகனங்களுக்கான சரக்கு-சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.
 மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழகத்திலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் 2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்கவும், தமிழகத்தில் முதல்முறையாக 500 மின்சார பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்' என கூறியிருந்தார். இதைச் செயல்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக ரூ.1,580 கோடி மதிப்பில் பிஎஸ்-6 தரத்திலான 2,213 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
 இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி இடையே திட்ட ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அண்மையில் கையெழுத்தானது. இந்தத் திட்ட ஒப்பந்தம் மூலம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜர் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறையின் செயல்பாட்டை மேம்படுத்த மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல் செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை நிறுவுதல், உலகத்தரத்திலான ஆலோசகர்களின் உதவிகளை பெறுதல், பணமில்லா பயணச்சீட்டு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
 சோதனையோட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்த மின்சாரப் பேருந்து, சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் வரை தினமும் இரண்டு நடையாக சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், தனது அமெரிக்கப் பயணத்தின்போது, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 பின்னர், தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 10 ஆண்டுகளுக்கான கொள்கைகளை வகுத்து அவர் வெளியிட்டார். இதன் மூலம், சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2022-ஆம் ஆண்டின் இறுதிவரை 100 சதவீதம் மோட்டார் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும், 2030-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு மாநில ஜிஎஸ்டியை 100 சதவீதம் திரும்ப வழங்கவும் இந்த மின்கொள்கை வழிவகுக்கிறது.
 மின்சார வாகனங்களுக்கு இந்த சலுகைகளை அறிவித்ததன் மூலம், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 மின்சார ஆட்டோக்கள்: மின்சார வாகனங்களைப் பயன்படுத்த மக்களை அறிவுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் இயங்கும் சுமார் 21,000 அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக, ஆண்டுதோறும் 5% மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் மின் ஆட்டோக்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்கு தேவையான சார்ஜ் ஏற்றும் மையங்களையும் ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியமாகிறது.
 இதனை உணர்ந்த தமிழக அரசு, வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகள், மின்கலன் ஆலைகள் ஆகியவற்றை அமைக்க நிலம் வாங்கினால், 2022-ஆம் ஆண்டு வரை முத்திரைத்தாள் கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிப்பதோடு, தமிழகத்தில் உள்ள மால், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்களில் மின்வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தனது கொள்கையில் அறிவுறுத்தியுள்ளது.
 தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. மின் வாகனங்களுக்கான உற்பத்தியை பெருக்குவதற்கு இந்தியாவில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால் அதை மக்கள் பயன்படுத்துவார்களா என்பதில் தான் சிக்கல் உள்ளது. காரணம், நாட்டில் மின்சார வாகனங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உள்ள போதும், அதற்கான கட்டமைப்புகள் முறையாக இல்லை. மின்சார வாகனங்களுக்கான அடிப்படை தேவையை அதிகரித்தால், மக்களிடம் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும்.
 அதே சமயம், இதர வாகனங்களை ஒப்பிடும் போது, மின்சார வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு, நான்கில் ஒரு பங்கு குறைவாக உள்ளது. அத்துடன், சுற்றுச்சூழல் மாசு பிரச்னை இல்லை என்பதும் சிறப்பம்சமாகும். இந்தியாவில், 2017- 18-ஆம் நிதியாண்டில், 56 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனையாகின. இது, 2016-17-ஆம் நிதியாண்டில், 25 ஆயிரமாக இருந்தது. இதே கால கட்டத்தில், மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை, 23 ஆயிரத்தில் இருந்து 54 ஆயிரத்து 800-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 - செ. ஆனந்தவிநாயகம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com