தலைமுறைகளாக தொடரும் கொலு பொம்மைகள் தயாரிப்பு

புரட்டாசி மாதம் என்றாலே பொம்மைகளின் மாதம்தான். வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடிக் கொண்டிருக்கும் மாதம் இது. பரண் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
தலைமுறைகளாக தொடரும் கொலு பொம்மைகள் தயாரிப்பு

புரட்டாசி மாதம் என்றாலே பொம்மைகளின் மாதம்தான். வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடிக் கொண்டிருக்கும் மாதம் இது. பரண் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் இந்த நவராத்திரி விழாவில் வீட்டை அலங்கரிக்கும்.
 தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா மற்றும் நவராத்திரித் திருவிழாவில் கொலு பொம்மைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
 இந்தக் கொலு பொம்மை வைக்கும் பண்பாடு ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பாரம்பரிய முறையிலான கொலு பொம்மைகள் என்பதைக் கடந்து, இப்போது நவீன காலத்துக்கு ஏற்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் வைக்கப்படுகிறது.
 பெரும்பாலான வீடுகளில் பாரம்பரிய முறையில்தான் கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது அல்லது பதினொன்று படிகளில் கொலு பொம்மைகள் அலங்கரிக்கும். இதில், மரப்பாச்சி பொம்மைகள் மற்றும் "ராஜா - ராணி" போன்றவை முதன்மையாக இடம்பெறும்.
 மேலும், தங்களுடைய வசதிக்கு ஏற்ப புதுமனை புகு விழா தொகுப்பு, நவகிரகங்கள், தசாவதாரம், அஷ்டலட்சுமி, விநாயகர், குபேரன் , கிரிவலம், திருமலை , கோபியர் நடனம் , தர்பார், மைசூர் தசரா, சங்கீத மும்மூர்த்திகள், கருடசேவை, வைகுண்டம் ஆகியவற்றின் தொகுப்புகள் உள்ளிட்டவையும் கொலு காட்சியில் இடம்பெறும்.
 மேலும், காலத்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட் விளையாட்டுத் தொகுப்பு, அரசியல் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.
 நிகழாண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தையொட்டி, அத்திவரதர் நின்ற கோலத்தில் உள்ள பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. சிலர் ஒவ்வொரு ஆண்டும் சில புதிய பொம்மைகளைக் கொலுக் காட்சியில் வைத்து அழகுபார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 இப்போது, நவராத்திரி திருவிழா நடைபெறுவதால், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் கொலு விற்பனையும் விறுவிறுப்படைந்துள்ளது. இதையொட்டி, கொலு பொம்மைகள் உற்பத்தி ஒரு மாதமாக முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 ஜனவரியிலேயே தொடக்கம் : இந்தக் கொலு பொம்மைகள் தயாரிப்பு ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் தொடரும். இதற்கு முதன்மையான மூலப்பொருள் களிமண். அச்சு வார்ப்புகளில் களிமண்ணை இட்டு, இப்பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின்னர், காய வைத்து அதன் மீது வண்ணங்கள் பூசப்படுகின்றன. மேலும், தேவையான இடங்களில் வண்ணங்களால் வரையப்படுகின்றன. இத்துடன் சில ரசாயன கலவைகளைப் பூசி மெருகூட்டப்படுகின்றன. ஒரு பொம்மையைச் செய்து முடிப்பதற்குக் கிட்டத்தட்ட 30 நாள்களாகும். இதற்கு மிகுந்த பொறுமையும் தேவை.
 தலைமுறைகளாகத் தொடரும் தயாரிப்புப் பணி : பெரும்பாலான கைவினைக் கலைஞர்கள் தலைமுறைகளாகத் தொடர்ந்து செய்து வருபவர்களாக உள்ளனர்.
 ஆனால், தற்போது கொலு பொம்மைகளை உற்பத்தி செய்யும் கைவினைக் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மிகப் பொறுமையுடன் செய்ய வேண்டிய இந்த வேலைக்கு ஆள்களும் கிடைப்பதில்லை. தஞ்சாவூர் மாரியம்மன்கோயில் பகுதியில் சில குடும்பங்கள் மட்டுமே இக்கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 இதுகுறித்து மாரியம்மன் கோயில் கம்மாளர் தெருவைச் சேர்ந்தவரும், மூன்றாவது தலைமுறையாகக் கொலு பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள் உருவாக்கி வரும் கைவினைக் கலைஞருமான எஸ். பூபதி கூறியது:
 நிகழாண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொலு பொம்மைகள் உருவாக்குவதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது. குறிப்பாக, காய வைப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால், நிகழாண்டு பொம்மைகள் அதிக அளவில் உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது.
 மேலும், பொம்மைகள் விற்பனையும் குறைவாகவே இருக்கிறது. இத்தொழிலில் லாபம் மிகவும் குறைவு. இதனால், இத்தொழிலுக்கு ஆள்கள் வருவதில்லை. இந்த ஒன்பது மாதங்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் ஆண்டு முழுவதும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அரசு நிதியுதவியும் கிடைப்பதில்லை. எனவே, மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம் என்றார் பூபதி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com