திருச்சிக்குத் தேவை தொழில்துறை மேம்பாட்டு திட்டங்கள்

தொழில்துறையை மேம்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ளது போன்று ராணுவத் தளவாடத் தொழிற்சாலையும், ரயில் பெட்டித் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் பூங்காவை மேம்படுத்த
திருச்சிக்குத் தேவை தொழில்துறை மேம்பாட்டு திட்டங்கள்

தொழில்துறையை மேம்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ளது போன்று ராணுவத் தளவாடத் தொழிற்சாலையும், ரயில் பெட்டித் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று திருச்சி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.
 மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை, பாரத மிகு மின் நிறுவனம், படைக்கலத் தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை போன்றவை அமைந்திருந்தாலும் சென்னை மற்றும் கோவை நகரங்களுக்கு இணையான வகையில் தொழிற்துறை வளர்ச்சி ஏற்படவில்லை என்ற நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது.
 முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், திருச்சி நவல்பட்டு பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் சுமார் 40 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனாலும், தொழில்துறையில் திருச்சி போதிய அளவில் மேம்படவில்லை என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. இதை யாரும் மறுக்க இயலாது.
 இந்த நிலையில் தொழிற்துறையையும், பல்வேறு தொழில்களை மேம்படுத்தும் விதமாக திருச்சியில் சிறு, குறு தொழில்கள் சங்கமான டிடிட்சியா உருவாக்கப்பட்டது.
 இந்த சங்கத்தின் மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்கள், இளந்தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 பல்வேறு தொழிற்சாலைகளை நிர்வகிப்பவர்கள் அல்லது தொழில்துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருபவர்களே டிடிட்சியாவின் நிர்வாகிகளாக இருந்து, பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
 தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிகள் அளிப்பது, தொழில் தொடங்க தேவையான கட்டமைப்பு, வங்கிக்கடன், நிர்வாக செயல்பாடுகள் , கொள்முதல், உற்பத்தி, சந்தை உள்ளிட்டவைகளில் உதவுதல், அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் மற்றும் கடனுதவி, மானியம் உள்ளிட்டவைகள் குறித்து தொழில்முனைவோருக்கு தெரிவிப்பது தொடர்புடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 தொழில்துறையை மேம்படுத்தி திருச்சிக்குத் தேவையான திட்டங்கள், அதற்கான வழிகள் குறித்து கூறுகிறார் டிடிட்சியா தலைவர் கே.கனகசபாபதி:
 திருச்சியில் அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பு போதிய அளவில் உள்ளது. மேலும் ராணுவம், ரயில்வே, பெல் , தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தவிர, அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான பிரத்யேக நிலப்பரப்பும் திருச்சி மாவட்டத்தில் உள்ளன. புதிய தொழிற்சாலைகள் குறித்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், அவற்றை நிறைவேற்ற போதிய செயல்முறைத் திட்டங்கள் விரைவுப்படுத்தப்படுவதில்லை.
 உதாரணமாக மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 2-ஆவது உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
 தற்போது அதன் அருகே சிப்காட் அமைக்க, சுமார் 1,055 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக ரூ.96 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உரிய கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. நவல்பட்டு பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்று வரும் நிலையில், அதை மேம்படுத்த அரசு திட்டமிட்டு உரிய அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. எல்காட் நிறுவனம் மூலம் அதற்காக ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம், மற்றும் நவீன தொழில் நுட்ப மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் தொடங்கப்பட வேண்டும். அதன் மூலம் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற முடியும்.
 சிட்கோ நிர்வகித்து வரும் சந்தைப்படுத்துதல் மையம் குறித்து போதிய விளம்பரம் இல்லாமையால் பலரும் அறிந்திருக்கவில்லை, அதை விரிவுப்படுத்த வேண்டும். நலிவடைந்த செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழிலை மேம்படுத்தும் விதமாக தொழில்நுட்ப
 இயந்திரங்களை நிறுவி தொழில்மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளை திருச்சியில் விரைவில் அமைத்திட வேண்டும். அதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் தளவாடப் பொருள்களை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். இவை அமைக்கப்பட்டால் இறக்குமதிக்கான செலவு குறையும்.
 பொன்மலை மத்திய ரயில்வே பணிமனைக்கு அருகிலுள்ள காலியிடங்களில் ரயில்வே தளவாடப் பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் ரயில்பெட்டித் தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் திருச்சியில் தொழில் துறை வளர்ச்சியடையும்.
 பெல் நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் தயார் செய்து வழங்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும் வகையில், பெல் நிறுவன ஆர்டர்கள் திருச்சியில் உள்ள நிறுவனங்களுக்கே அளிக்க வேண்டும். இதில் உலகளாவிய டெண்டர் முறையை ரத்து செய்து அனைவருக்கும் சம வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
 சர்வதேச தரத்திற்கு இணையாக திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை நீட்டித்து, பிரத்யேக சரக்கு விமானங்களை இயக்க வேண்டும். சுங்கத்துறையின் விதிமுறைகளை எளிதாக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வழிசெய்ய வேண்டும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து துறை அனுமதிகளையும் ஒற்றைச்சாளர முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை துரிதப்படுத்தி,அவை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com