தென்னை நார் கயிறு தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம்

ஒரு காலத்தில் வீட்டு அடுப்புகளில் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தி வந்த தென்னை மட்டையில் இன்று பணம் கொழிக்கும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை நாரில் இருந்து
தென்னை நார் கயிறு தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம்

ஒரு காலத்தில் வீட்டு அடுப்புகளில் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தி வந்த தென்னை மட்டையில் இன்று பணம் கொழிக்கும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை நாரில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கலாம். இதற்காக மத்திய அரசின் தேசிய கயிறு வாரியம் ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. பயிற்சி பெற்றவர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கிக் கடனும் பெற்றுத் தருகிறது.
 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கோடு இந்திய அளவில் கொச்சியில் கயிறு வாரியம் 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் நாடு முழுவதும் தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்குவோரை ஊக்குவித்து வருகிறது.
 அதன் ஒரு பகுதியாக கைகளால் மட்டுமே இதுவரை தயாரித்து வந்த தென்னை நார் கயிறு உற்பத்தியை நவீன தொழில்நுட்பத்தில் இயந்திரத்தில் தயாரிக்கும் வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இத்தொழில் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 3 இயந்திரங்களைப் பொருத்தி கயிறு தயாரிக்கலாம். இதற்கு 2,400 சதுர அடி நிலம் தேவை.
 இதற்காக மத்திய அரசின் "கயிறு உதயா யோஜனா' திட்டம் மூலம் ரூ. 10 லட்சம் முதலீடு செய்யலாம். இதில், 5 சதவீதம் உற்பத்தியாளர்கள் முதலீடு செய்ய வேண்டும். 55 சதவீதம் வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும். இதற்கு வட்டி 4 சதவீதம் மட்டுமே. மீதி 40 சதவீதம் தேசிய கயிறு வாரியம் மானியமாக வழங்கும். இத்தொழிலை பெரும்பாலும் பெண்களே செய்யலாம். ஒரே நேரத்தில் இரு இயந்திரங்களை ஒருவரே இயக்கலாம்.
 இந்த இயந்திரத்தின் ஒருபக்கம் தென்னை நாரை போட்டால் அது தானியங்கி, மறுபுறம் கயிறாக தயாரித்து அனுப்பும். இந்தக் கயிறு பின்னலாடைத் தொழில்கள் செய்ய உதவும். உலகில் தென்னை நார் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், இலங்கை, வியட்நாம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் அடுத்த இடத்திலும் உள்ளன.
 இந்தியாவில் தயாரிக்கப்படும் தென்னை நார்ப் பொருள்களுக்கு சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. தரமும், குறைவான விலையுமே இதற்கு முக்கிய காரணம்.
 அதனால்தான் தென்னை நார்ப் பொருள்கள் சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இயந்திர உற்பத்தியால், கையால் திரித்து தயாரிக்கப்படும் தென்னை நார்க் கயிறு உற்பத்தி 20 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
 உற்பத்தியாளர்கள் முயற்சி செய்தால் ஏற்றுமதியும் செய்யலாம். ஏற்றுமதி கவுன்சிலில் உறுப்பினரானால், தென்னை நார் கயிறை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளன. கொச்சியில் உள்ள கயிறு வாரியம் சார்பில், தமிழகத்தில் குடியாத்தம், கடலூர், சேலம், பட்டுக்கோட்டை, பெரியகுளம், சிங்கம்புணரி ஆகிய இடங்களில் தலா 50 உறுப்பினர்கள் கொண்ட கயிறு குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
 இவற்றில் தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. முழுக்க, முழுக்க மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் இயங்கும் இத்தொழிற்சாலைகளில் தென்னை நாரிலிருந்து தொங்கவிடப்படும் பூந்தொட்டி பவுல்கள், பூச்செடிகள், மரக்கன்றுகள் பதியம்போடும் கப்புகள், பெட் லேயர்கள் என பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், பெண்கள் பயிற்சி பெற்று, கயிறு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.
 இதுகுறித்து குடியாத்தம் தென்னை நார் கயிறு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ஜெகதீசன் கூறியது:
 ஒரு காலத்தில் வேண்டாத பொருளாக பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சாலையோரங்களில் கொட்டப்பட்டு வந்த தென்னை நார்க் கழிவில் இருந்து தற்போது பணம் கொழிக்கும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
 கொச்சியில் உள்ள தேசிய கயிறு வாரியம், வேலூர் மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பால் குடியாத்தம் கயிறு வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேசிய கயிறு வாரியம் தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 இதனால், இத்தொழிலில் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன. கயிறு விற்பனைக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் அறவே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
 கோரிக்கை ஏற்கப்பட்டால் இத்தொழில் மேலும் மேன்மையடையும் என்றார் ஜெகதீசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com