தொழில்முனைவோருக்கு சலுகையோ சலுகை!

வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்
தொழில்முனைவோருக்கு சலுகையோ சலுகை!

வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனங்களாகும்.
இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிவேக மற்றும் ஆற்றல் வாய்ந்த தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்கின்றன. மேலும், வட்டார அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்து நாட்டின் வருவாய் மற்றும் வளம் சம அளவில் இருக்க உதவுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில:
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை 2008-09-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனும், சேவை தொழில்களுக்காக ரூ.10 லட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தொழில்முனைவோருக்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
சமுதாயத்தில் பின் தங்கியுள்ளவர்களை முன்னேற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையும், சேவைக்கு ரூ.5 லட்சம் வரையும் கடன் பெற முடியும். மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச வயது வரம்பு 18. கல்வி தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)
இத்திட்டத்தின்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளித்தல், தொழில் தொடங்க திட்டங்கள் தயாரித்தல், நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெற உதவுதல் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பு அமைத்து தருதல் ஆகிய உதவிகளை அளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
ரூ. 5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் படிப்பு (ஐ.டி.) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொது பிரிவினருக்கு 25 முதல் 35 வயது வரையிலும், மற்ற பிரிவினர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., சிறுபான்மையினர் பிரிவு) 21 முதல் 45 வயது வரை. இடம், கட்டடம், இயந்திரங்களுக்கு மானியம் 25 சதவீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
முத்ரா திட்டம்
வியாபாரம், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கு இந்த திட்டத்தில் கடன் பெறலாம். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை நேரடியாக வங்கி மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 
ஸ்டாண்ட் ஆப் திட்டம்
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வங்கியிலும் இரண்டு பேருக்கு கடன் கொடுக்க வேண்டும்.
இதற்கு கல்வித் தகுதி கிடையாது. வயது வரம்பு கிடையாது. ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெற முடியும். 
ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன் திட்டம்
நல்ல நிறுவனமாக இருக்க வேண்டும். 3 ஆண்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக இருப்பு நிலை பார்த்து வழங்கப்படும். இந்த மானியத் திட்டங்களில் ஜி.எஸ்.டி. மானியம் 6 ஆண்டு அளவுக்கு கிடையாது. மின்சார சலுகை முதல் 3 ஆண்டுக்கு 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதுதவிர, கடன் மூலதன இணைப்பு சேவை திட்டத்தில் ரூ.15 லட்சம் கடன் 15 சதவீதம் மானியம் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விவரங்களை மாவட்ட தொழில் மையம், மாநில தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com