பாபநாசத்தில் விளையும் தரமான வெற்றிலைகள்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் தரமான வெற்றிலைகள் பயிரிடப்படுகின்றன. இந்த வெற்றிலைக்கு இன்றும் வரவேற்பு இருக்கிறது.
பாபநாசத்தில் விளையும் தரமான வெற்றிலைகள்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் தரமான வெற்றிலைகள் பயிரிடப்படுகின்றன. இந்த வெற்றிலைக்கு இன்றும் வரவேற்பு இருக்கிறது.
 தமிழக மக்களின் வாழ்க்கையோடு இணைந்த அனைத்து விசேஷங்களிலும் வெற்றிலை இல்லாமல் இல்லை. இறை வழிபாட்டிலும் வெற்றி இலை என சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இத்தகு சிறப்பான இடம் பிடித்துள்ள வெற்றிலை பாபநாசம் வட்டத்தில் ராஜகிரி, பண்டாரவாடை, நெடுந்தெரு, கோவில் தேவராயன்பேட்டை, வடக்குமாங்குடி, உள்ளிக்கடை, மணல்மேடு, இளங்கார்குடி, நாயக்கர்பேட்டை, வழுத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிரிடப்படுகிறது.
 இதன் சாகுபடி குறித்து, கோவில் தேவராயன்பேட்டையைச் சேர்ந்த முன்னோடி வெற்றிலை விவசாயி ஜெ. சௌந்தர்ராஜன் கூறியது:
 பாபநாசம் வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் பச்சைக்கொடி வெற்றிலை,வெள்ளைக்கொடி வெற்றிலை,கற்பூர வெற்றிலை, பினாங்கு வெற்றிலை உள்ளிட்ட இனங்கள் உள்ளன.
 இந்தப் பகுதியில் பச்சைக் கொடி வெற்றிலை,வெள்ளைக் கொடி வெற்றிலை உள்ளிட்ட 2 ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. வெற்றிலைப் பயிருக்கு மிதமான தட்பவெப்பம், ஈரப்பதம் உள்ள மண் வேண்டும்.
 முதலில் வெற்றிலை பயிரிடப்படும் பகுதியை சமப்படுத்தி சிறு சிறு வாய்க்கால்களாகப் பிரித்துக் கொண்டு, அதில் தண்ணீர் தேங்கி இருக்கும்படி சீர் செய்து கொள்ள வேண்டும்.
 சமப்படுத்திய பகுதியை 6 அடி அகலம்,18 அடி நீளம் கொண்ட பாத்திகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பட்டம் என அழைக்கப்படும். ஒரு பட்டத்தில் சுமார் 30 வெற்றிலைக் கொடிகள் வரை வளர்க்கலாம்.
 ஓர் ஏக்கர் நிலத்தில் சுமார் 450 பட்டங்கள் வரை அமைக்கலாம். மேடான பகுதியில் அகத்தி,செம்பை உள்ளிட்ட செடிகளை நட்டு வளர்த்து பதியன் முறையில் வளர்க்கும் வெற்றிலைக் கொடிகளைஅவற்றின்மீது படர விட்டு வளர்க்க வேண்டும். கொடிகள் நன்கு வளர்ந்ததும் அவற்றுக்குப் பாதுகாப்பாக கழிகளால் பந்தல் அமைத்து படர விட வேண்டும்.
 மேலும் வெயில் தாக்காமல் இருக்க வெற்றிலை கொடிக்கால்களை சுற்றிலும் கீற்றுத் தடுப்புகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, வெற்றிலை காய்ந்து விடாமல் வளர்க்க வேண்டும். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அடியுரம், பூச்சி மருந்து அடிக்க வேண்டும்.
 சுமார் ஓராண்டில் வெற்றிலைக் கொடிகள் நன்கு வளர்ந்துவிடும். அதன் பின் மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு கொடிகளிலிருந்தும் வெற்றிலைகளைக் கிள்ளலாம். இதுபோல சுமார் ஓராண்டு வரை வெற்றிலைகளை அறுவடை செய்யலாம். மாதம் ஒருமுறை ஒவ்வொரு கொடியிலிருந்தும் சுமார் ரூ. 120 முதல் 150 மதிப்புள்ள வெற்றிலைகளை அறுவடை செய்யலாம்.
 நூறு என்ற எண்ணிக்கையில் அடுக்கப்படும் வெற்றிலைகள் கவுளிகள் எனப்படும். இவ்வாறு 30 கவுளிகள் கொண்ட கட்டு ஒரு முட்டி என அழைக்கப்படும். முட்டிகளாகக் கட்டப்பட்ட வெற்றிலைகள் ராஜகிரி, உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வெற்றிலை கமிஷன் ஏலக்கடைகள் மூலம் ஏலத்தில் விடப்படும்.
 வெற்றிலையின் நிறம், தன்மை, அப்போதைய தேவை உள்ளிட்ட காரணிகளையொட்டி வெற்றிலை ஏலம் போகும். சாதாரண நாள்களில் ஒரு கவுளி வெற்றிலை ரூ. 50 முதல் 75 வரை விலைபோகும். விழாக் காலங்களில் 100 லிருந்து ரூ. 150 வரை விலைபோகும்.
 வெற்றிலை ஒரு பணப்பயிர். வெற்றிலை கொடிக்கால்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதால் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். வெற்றிலைச் சாகுபடியில் செலவுகள் அதிகம், லாபம் குறைவு. வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் சிரமங்களைஅரசு கவனத்தில் கொண்டு அரசு சார்பில் வெற்றிலைக் கொள்முதல் நிலையங்களைஅமைத்து நியாயமான விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றார் விவசாயி ஜெ. சௌந்தர்ராஜன்.

கே. வீரமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com