புதிய தொழில்களை தொடங்குவோருக்கு பயனளிக்கும் மானியங்கள் 

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள் கையில் பணமில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை.
புதிய தொழில்களை தொடங்குவோருக்கு பயனளிக்கும் மானியங்கள் 

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள் கையில் பணமில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அரசு மானியத் திட்டத்திலேயே சிறு, குறுந் தொழில்களைத் தொடங்கி தொழில்முனைவோராகலாம். அந்த வகையில், தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்களை வழங்குகிறது அரசு.
 முதலீட்டு மானியம்: தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மதிப்பில், 25 சதவிகிதம் முதலீட்டு மானியமாக (அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் வரை) வழங்கப்படுகிறது. மகளிர், பட்டியலினம், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தொழில் முனைவோராக இருக்கும் நேர்வுகளில், அவற்றின் தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 சதவிகிதம் ( அதிகபட்சம் ரூ.2 லட்சம்) கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது..
 மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியச் சான்றின் பேரில் அந்நிறுவனங்களுக்கு தகுதியான இயந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டின் மதிப்பில் 25 சதவிகிதம் (அதிகபட்சம் ரூ.3 லட்சம்) கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
 உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து முதல் 5 ஆண்டுகளில், மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் 25 வேலையாள்களைப் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு அவற்றின் தகுதியான இயந்திரத் தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 சதவிகிதம் (அதிகபட்சம் ரூ.5 லட்சம்) வேலைவாய்ப்பு பெருக்க மானியமாக வழங்கப்படுகிறது.
 குறைந்தழுத்த மின் மானியம்: 20 சதவிகித குறைந்த அழுத்த மின் மானியம், வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின்இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்ததையதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்புக்கு ஈடான தொகை, அவை உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரிக்கு ஈடாக 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும்.
 மின்னாக்கி மானியம்: இத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் எப்பகுதியிலும் அமைந்துள்ள குறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கியுள்ள மின்னாக்கியின் மதிப்பில் 25 சதவிகிதம் வரை(அதிகபட்சமாக ரூ. 5 லட்சம்) மின்னாக்கி மானியம் வழங்கப்படுகிறது.
 பின்முனை வட்டி மானியம்: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப் படுத்துதல், கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் ஆகியவற்றிற்காக வாங்கும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சத்துக்கு கடனுக்கான வட்டியில் 3 சதவிகிதம் என்ற அளவில் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.
 அடிப்படைத் தகுதி மற்றும் தொழில்கள்
 மாநிலத்தில் எந்தப் பகுதியில் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களும் மானியத்தைபெற முடியும். மின் மற்றும் மின்னணு பொருள்கள், தோல் மற்றும் தோல்பொருள்கள், வாகன உதிரிபாகங்கள்,மருந்து மற்றும் மருத்துவ பொருள்கள், சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள், மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள், விளையாட்டுப் பொருள்கள் மற்றும் உதிரிபாகங்கள், சிக்கன கட்டுமானப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், உணவு பதப்படுத்துதல், ரப்பர் பொருள்கள் தயாரித்தல் ஆகிய தொழில்களைத் தொடங்கலாம்.
 
 ஆர். முருகன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com