பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

இன்றைய உலகில் பெரு நிறுவனங்களே தொழில் துறையில் கோலோச்சி வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் முதுகெலும்பாக விளங்குவது
பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

இன்றைய உலகில் பெரு நிறுவனங்களே தொழில் துறையில் கோலோச்சி வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் முதுகெலும்பாக விளங்குவது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்றால் அது மிகையாகாது.
 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தை மத்திய அரசு கடந்த 1954-இல் தொடங்கியது.
 2006-ஆம் ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டத்தின்படி இத்தகைய தொழில் நிறுவனங்கள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்கள் ஆகும்.
 தொழில் முனைவோருக்கு உதவி: மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் அமைப்பு மூலம் தொழில்முனைவோருக்கான மேம்பாட்டுப் பயிற்சிகள், திறன் வளர்ப்புப் பயிற்சி, நிறுவனப் பதிவு, வாங்குபவர், விற்பவர் கூட்டங்கள் ஒருங்கிணைப்பு, தொழில் துறை சார்ந்த அறிக்கைகள், சந்தை உதவி, கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயாரிப்பில் உதவி, பொதுவான பயிற்சி வகுப்புகள் போன்ற நிலைகளில் தொழில்முனைவோர்களுக்கு உதவி வருகிறது.
 ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த அமைப்புக்கான மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன.
 இதுகுறித்து மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியது: காலத்துக்கேற்ற நவீன தொழில் பயிற்சிகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. உற்பத்தி துறை சார்ந்த தொழில்கள் மட்டுமில்லாமல் சேவைத் துறை சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல தொழில்வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
 குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், இயந்திரங்கள் வாங்குவதற்கான முன் தயாரிப்பு உதவிகள், தொழில்முனைவோரின் கடன் வாங்கும் தன்மைக்கு ஏற்ப கடனுதவிக்கு ஏற்பாடு செய்தல், புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்குவது போன்ற ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இயந்திரங்கள், உபகரணங்களில் செய்யப்படும் முதலீடு, மூலதனம் இவற்றை பொருத்தே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்படுகின்றன.
 கடந்த 1960-இல் சிறுதொழில் என அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் அத்தொழில் உற்பத்திக்கான இயந்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. பின் அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, இந்த வரையறை 2006-இல் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது.
 குறுந்தொழிலுக்கான வரையறை ரூ.25 லட்சம் எனவும், நடுத்தரத் தொழிலுக்கான வரையறை ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொழில் முதலீட்டுக்கு ஏற்ப மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.
 வேலைவாய்ப்புகள்: வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் உற்பத்தியைப் பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
 இந்திய அளவில் 2.60 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 6 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
 தமிழகத்தில் சுமார் 8.44 லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இந்த நிறுவனங்களின் மூலம் சுமார் 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
 இந்திய அளவில் தமிழகத்தில்தான் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன.
 அரசின் சலுகைகள்: தமிழக அரசும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில், தொழில் வணிக ஆணையரகம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
 இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக அரசு ரூ.946 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது என்றனர் அதிகாரிகள்.
 சுயதொழில் தொடங்க..: தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் பெற மாவட்டத் தொழில் மையங்கள் உதவுகின்றன.
 இந்தத் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க வங்கிக் கடனில் 15 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்தல், இணையதளம் மூலம் பதிவு செய்தல், தொழில் முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல், குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ், கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல், ஒற்றைச்சாளர முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல், ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல், உற்பத்தித்திறன் சான்றிதழ் அளித்தல், வங்கிக் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை செய்தல், ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல், தொழில் கூட்டுறவுச் சங்கங்களை ஒருங்கிணைத்து பதிவு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 - ம.பாவேந்தன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com