மகளிர் மேம்பாட்டில் வாழ்வாதார இயக்கம்

மகளிர் வாழ்வாதார மேம்பாட்டில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
மகளிர் மேம்பாட்டில் வாழ்வாதார இயக்கம்

மகளிர் வாழ்வாதார மேம்பாட்டில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
 தமிழக அரசின் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் ஊரக, நகர்ப்புறப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் நிலையான வாழ்வாதார மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,817 சுயஉதவிக் குழுவில் உள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 227 மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் 17,297 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.673.43 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதி மூலம் தொழில் தொடங்க ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உடனடி கடனுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.
 அத்துடன், சுய உதவிக்குழு மகளிரின் தேவை, அனுபவம், தொழில் திறமை, சந்தை வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வாதாரத் தொழில்கள் உருவாக்கி வழங்கப்படுகின்றன. அதன்படி, தனியார் நிறுவனங்களில் படித்து வேலைதேடி வரும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை டிடியு ஜிகேஒய் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.
 அம்மா இருசக்கர வாகனம்: உழைக்கும் மகளிர் பணியிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் எளிதில் சென்றுவர தானியங்கி கியர் கொண்ட அல்லது கியர் இல்லாத 125 சிசி திறன் கொண்ட அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கு 5,653 இரு சக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
 கிராமம், நகர்ப்புறங்களில் உள்ள படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும் அளிக்க ஆண்டுதோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பபடுகிறது.
 மகளிர் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய கல்லூரி சந்தை, கண்காட்சிகள், நேரடி விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்டம் முழுவதும் 777 "வெல்மா' விற்பனை அங்காடிகள் தொடங்கப்பட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அங்காடிகளில் தலா ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பொருள்கள் விற்பனையாகி வருகின்றன.
 மேலும், நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம், இயற்கை விவசாய விளை பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை அதிகப்படுத்த "நம் சந்தை', பொதுமக்களின் தேவைகளான அரசு சான்றிதழ்கள், பயணச் சீட்டு, வீட்டுவேலைக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் மையமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com