முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் முதலிடத்தை நோக்கி தொழில் துறை

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் முதலிடத்தை நோக்கி தொழில் துறை

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
 பல்வேறு தொழில் துறையினர் வழங்கிய ஆலோசனைகளை ஏற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணம் மேற்கொண்டது.
 இந்த பயணமானது, தமிழகத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப் பயணம் பேருதவியாக அமைந்தது.
 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள்: இதுதவிர மொத்தம் 41 நிறுவனங்களின் ரூ.8 ஆயிரத்து 835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. இதன்மூலமாக, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
 அமெரிக்காவில் மட்டும் 27 தொழில் ஒப்பந்தங்கள் ரூ.5 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு ஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், 24 ஆயிரத்து 720 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்க தொழில் கூட்டமைப்புகளின் மூலமாக 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. துபையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் ரூ.3 ஆயிரத்து 750 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் காரணமாக 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 புள்ளி விவரங்களும், தொழில் துறையும்: முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் தொழில் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வரும் புள்ளி விவரத் தகவல்களே சான்றாக அமைந்துள்ளன.
 மத்திய அரசின் புள்ளியியல் துறை அண்மையில் தொழிற்சாலைகளுக்கான ஆண்டு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, 2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தில்லி மாநிலத்தில் உள்ள மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கைக்கு ஈடாக ஒரே ஆண்டில் மட்டும் தமிழகம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
 எண்ணிக்கை அடிப்படையில், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை விட இரு மடங்கு வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உள்ளன. மேலும், ஆந்திர மாநிலத்தில் ஓராண்டில் கூடுதலாக அளித்த நேரடி தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 957. தெலங்கானா மாநிலம் ஓராண்டில் கூடுதலாக அளித்த வேலைவாய்ப்பின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 608. தமிழக அரசு அதே காலகட்டத்தில் 73 ஆயிரத்து 328 புதிய, நேரடி தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
 இதுதவிர, தொழிற்சாலைகளின் நிர்வாகப் பணிகள், மறைமுக வேலைவாய்ப்புகள், சேவைத் துறை உள்ளிட்ட பிற துறை வேலைவாய்ப்புகள் என பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
 2016-17-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017-18-ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஏற்றுமதி 12.5 சதவீதம் அதிகரித்து 29.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஆகவே, பல்வேறு புள்ளி விவரங்களை பார்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களையும், இந்திய முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் திறனில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது.
 - கே.பாலசுப்பிரமணியன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com