முன்னேற்றப் பாதைக்கு...தொழில்துறைக்கான தனித்த கொள்கைகள்

தொழில் துறையில் ஒவ்வொரு பிரிவும் தமிழக அரசின் தனித்த கொள்கைகளால் சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டு வருகின்றன. இதனால் இத்துறைகளில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.
முன்னேற்றப் பாதைக்கு...தொழில்துறைக்கான தனித்த கொள்கைகள்

தொழில் துறையில் ஒவ்வொரு பிரிவும் தமிழக அரசின் தனித்த கொள்கைகளால் சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டு வருகின்றன. இதனால் இத்துறைகளில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.
 நிகழாண்டில் மட்டும் 4-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு தனிக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2004-05-ஆம் நிதியாண்டு முதல் 2016-17-ஆம் நிதியாண்டு வரையில் 9 சதவீதத்துக்கு உள்ளேயே இருந்து வந்தது. தற்போது அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவதாக விளங்குகிறது.
 ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் நாட்டிலேயே தமிழகம் 25 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. ஃபோர்டு, ஹூண்டாய், மிட்சுபிசி, டெய்ல்மர், நிசான், ரினால்ட், பிஎம்டபிள்யூ போன்ற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. மேலும், 350-க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விரும்பக்கூடிய மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.
 தமிழ்நாடு வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கை: வானூர்தி பொறியியல், வடிவமைப்பு, உற்பத்தி, மிகச்சிறந்த மனித வளம் ஆகியவற்றில் தமிழ்நாடு விரும்பத்தக்க மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
 இதையடுத்து வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் தனித்துவத்தை தமிழகம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கை வகை செய்கிறது. இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
 ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன், ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளும் தமிழகத்தில் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் உற்பத்தி ஆலை, ஆவடி ராணுவ ஆடைகள் தயாரிப்பு ஆலை, என்ஜின்கள் உற்பத்தி, திருச்சி ராணுவ தளவாட உற்பத்தி ஆலை என இயல்பாகவே ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை தமிழகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
 இதனால், ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் வானூர்தி உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் தனித்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிப்பதுடன், பத்திரப் பதிவு போன்றவற்றில் இருந்து சலுகைகள் அளிக்கப்படும்.
 தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை: தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகப் பெருக அவற்றுக்கான மின்சக்தி தேவையும் அதிகரிக்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு, வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு மரபுசாரா அம்சங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரியமின் சக்திக்கான நிறுவு திறனை ஏற்படுத்துவது என கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் கொள்கை: வேளாண் பொருள்களை பதப்படுத்தும் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. சிறு மற்றும் குறு தொழில்கள் பிரிவின் கீழ் வேளாண் பொருள்களை பதப்படுத்தும் 24 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடுத்தர மற்றும் அதற்கும் அதிகமான தொழில் நிறுவனங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன.
 நாட்டின் மொத்த உணவு பதப்படுத்தும் பணியில் தமிழகம் 7 சதவீத பங்கினை அளிக்கிறது. தமிழகம் 120 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களையும், 140 லட்சம் மெட்ரிக் டன் பழங்கள், காய்கறிகளையும் உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு 77.42 லட்சம் மெட்ரிக் டன் பாலையும் உற்பத்தி செய்து அளிக்கிறது. இந்தியாவிலேயே மீன் பிடித்தல் மற்றும் உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தை வகிக்கிறது.
 எனவே, இத்தகைய தன்மை கொண்ட மாநிலத்தில் உணவுப் பொருள்கள் வீணாகாமல் இருப்பதைத் தடுக்க தனித்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் சிறு உணவுப் பூங்காக்கள், மெகா உணவுப் பூங்காக்கள், அல்ட்ரா மெகா உணவுப் பூங்காக்கள் போன்றவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இதுபோன்ற பூங்காக்கள் உணவு பதப்படுத்தும் ஆலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்குச் சலுகைகளை அளிக்க கொள்கையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, மின்சார கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது, பத்திரப் பதிவில் சலுகை போன்ற பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 மின்சார வாகனக் கொள்கை: நிகழாண்டில் வெளியிடப்பட்ட மிக முக்கிய கொள்கைகளில் மின்சார வாகனக் கொள்கை முக்கியமானது. இந்தியாவிலேயே மின்சார வாகனத்துக்கென தனித்த கொள்கையை தமிழகம் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
 மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வாங்குவோருக்கு 2022-ஆம் ஆண்டு வரை சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மின்சார வாகனக் கொள்கை மூலமாக ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன்மூலம் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மின்சார வாகனக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நிகழாண்டில் வெளியிடப்பட்ட தொழில் துறைக்கான தனித்த கொள்கைகள் மூலம் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com