வரவேற்பு தட்டுகளில் வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவிகள்

வீட்டிலிருந்தபடியே வரவேற்புத் தட்டுகள் தயாரித்து குடும்பத் தலைவிகள் வருவாய் ஈட்டலாம்
வரவேற்பு தட்டுகளில் வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவிகள்

வீட்டிலிருந்தபடியே வரவேற்புத் தட்டுகள் தயாரித்து குடும்பத் தலைவிகள் வருவாய் ஈட்டலாம்.
 திருமண விழாக்கள், வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் முந்தைய காலத்தில் கற்கண்டு, ரோஜாப்பூ, சந்தனக் கிண்ணம் வைத்து, பன்னீர் தெளித்து விருந்தினர்களை வரவேற்பார்கள். அதன்பிறகு தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக வாசனை திரவியத்தைத் தெளிக்கும் இயந்திரத்தை விருந்தினர்களை வரவேற்குமிடத்தில் வைத்து அதன் மூலம் வாசனை திரவியத்தை தெளித்து வருகிறார்கள். விருந்தினர்கள் வந்த உடன் அவர்களுக்கு பழங்கள், ஐஸ்கிரீம், பானிபூரி, குழந்தைகளுக்கு பாப்கார்ன், பலூன் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.
 இதில் விருந்தினர்களை வரவேற்க வரவேற்புத் தட்டுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எவர்சில்வர் தட்டுகளில் கற்பனைத் திறனுக்கு ஏற்ப பெயிண்ட், பசை, பல வர்ண கோலமாவு ஆகியவை கொண்டு பூக்கள், சாமி படங்கள், விலங்குகளின் படங்கள், கோலம் ஆகியவற்றை வரைந்து வரவேற்புத் தட்டுகளைத் தயாரிக்கலாம். அவ்வாறு வரைந்த வரவேற்புத் தட்டுகளை திருமண, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதின் மூலம் வருவாய் ஈட்டலாம்.
 இதற்கு அதிக முதலீடு தேவையில்லை. குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதலீட்டிலேயே எவர்சில்வர் தட்டுகளை வாங்கி அதில் வரைவதற்கான பெயிண்ட், கோல மாவு, பசை ஆகியவற்றை வாங்கி தங்களுடைய கற்பனை திறனுக்கு ஏற்ப தட்டுகளில் பல வடிவங்களை வரையலாம். வரவேற்புத் தட்டுகள் வாடகைக்கு விடுவது குறித்து விளம்பரப்படுத்திவிட்டால் போதும் வேறு ஒன்றும் பெரிதாக செய்யத் தேவையில்லை. வரவேற்புத் தட்டுகளை ஆரத்தி தட்டுகளாகவும் பயன்படுத்தலாம்.
 முன்பெல்லாம் தாம்பூலத் தட்டில் சுண்ணாம்பு, மஞ்சள், தண்ணீர் இட்டு கலந்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி மண மக்களுக்கு ஆரத்தி எடுப்பார்கள். ஆனால் தற்போது அந்த ஆரத்தி தட்டுகளோடு, வரவேற்புத் தட்டுகளில் விளக்கேற்றி அல்லது சிறிய மெழுகுவர்த்திகளை ஏற்றி ஆரத்தி எடுப்பதும் வழக்கமாகிவிட்டது.
 குறைந்த முதலீட்டில் பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே ஆரத்தி, வரவேற்புத் தட்டுகளை தயாரித்து வைத்துக் கொண்டு வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம். எவர்சில்வர் தட்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிதாக வாங்கிப் பயன்படுத்தலாம். அதில் வரையப்பட்டுள்ள பழைய வடிவங்களை அழித்துவிட்டு புதிய வடிவங்களை வரைந்து மீண்டும் பயன்படுத்தலாம். இதில் பராமரிப்புச் செலவு பெரிதாக ஏதும் இல்லை. எவர்சில்வர் தட்டுகள் கீழே விழுந்து நசுங்காமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது.ஆனால் தற்போது எவர்சில்வர் தட்டுகள் மட்டுமல்லாது பல வண்ண பிளாஸ்டிக் தட்டுகளும் வரவேற்பு, ஆரத்தி தட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் வரவேற்பு, ஆரத்தி தட்டுகளை தயாரிக்கின்றனர். அதனால் வரவேற்பு, ஆரத்தி தட்டுகள் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருவாய் ஈட்டுவது மிகவும் எளிதானதாகும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com