வருவாயை அள்ளித்தரும் பாக்கு மட்டை

நாகரிக உலகில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால், இந்த வளர்ச்சி மறுபுறம் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
வருவாயை அள்ளித்தரும் பாக்கு மட்டை

நாகரிக உலகில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால், இந்த வளர்ச்சி மறுபுறம் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது.
 இதற்கு மாற்றாக காகிதம், துணி, சணல் பைகள், வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை உள்ளிட்ட வடிவங்களில் மாற்றுப் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
 ஆனால், பிளாஸ்டிக் பொருள்கள் அளவுக்கு மாற்றுப் பொருள்களில் கப்புகள், உணவுப் பெட்டிகள், ஸ்பூன்கள் உள்ளிட்டவை பயன்பாட்டுக்கு வரவில்லை.
 இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகப் பாக்கு மட்டைகளில் டீ கப், உணவு பார்சல் பெட்டிகள், ஸ்பூன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ். காலித் அகமது. இவர் இதற்காக தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் புறவழிச்சாலையில் சதாசிவம் நகரில் தொழிற்கூடம் அமைத்துள்ளார்.
 பாக்கு மட்டைகளில் தட்டு மட்டுமே பெரும்பாலானோர் தயாரித்து வருகின்றனர். அதற்கேற்ற இயந்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர் டீ கப், உணவு பார்சல் பெட்டிகள், ஸ்பூன்கள், தொன்னைகள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார். இவர் தன்னுடைய முயற்சியில் இயந்திரத்தில் டீ கப், உணவு பார்சல் பெட்டிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை செய்வதற்கேற்ற அச்சுகளையும் உருவாக்கியுள்ளார்.
 இதுகுறித்து காலித் அகமது தெரிவித்தது: பேப்பர் கப், உணவு பார்சல் பெட்டி போன்றவற்றில் ரசாயனம் கலந்துதான் தயாரிக்கப்படுகிறது. இவற்றிலும், உடல் நலக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஆடு, மாடுகள் தின்றாலும் ஆபத்துதான்.
 இவற்றுக்குப் பதிலாக பாக்கு மட்டை மிகவும் நல்லது. இவை முற்றிலும் இயற்கையானது என்பதால் உடல் நலக்கேடுக்கு வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பாலானோர் பாக்கு மட்டையில் தட்டு மட்டுமே செய்து வந்த நிலையில் டீ கப், உணவு பார்சல் பெட்டி, தொன்னை, ஸ்பூன் போன்றவற்றையும் தயாரித்து வழங்க முடிவு செய்தேன். ஆனால், அதற்கான இயந்திரம் கிடைக்கவில்லை. என்றாலும், அதற்கான முயற்சி எடுத்து, இயந்திரத்தில் அச்சுகளைப் பொருத்தி தருமாறு கூறி, செய்து வாங்கினேன்.
 பாக்கு மட்டையில் செய்யப்படும் டீ கப் 60 மில்லி கொள்ளளவு கொண்டது. பேப்பர் கப்பை விட இதில் கொள்ளளவு அதிகம். பாக்கு மட்டையில் டீ குடிக்கும்போது பாதிப்பு எதுவும் இருக்காது.
 உணவகங்களில் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் செய்வதற்கு ரசாயனம் கலந்த அலுமினிய பெட்டியில் கட்டித் தரப்படுகிறது. ஆனால், பாக்கு மட்டையில் செய்யப்பட்ட உணவு பெட்டியில் பார்சல் செய்வதால், எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இதில், சிந்துவதற்கும் வாய்ப்பு இல்லாத வகையில் மூடியும் பொருத்தப்படுகிறது. எனவே, அலுமினிய பெட்டிக்கு இணையாகப் பாக்கு மட்டைப் பெட்டி இருக்கிறது. இதில், கால் கிலோ, அரை கிலோ அளவுக்குப் பெட்டிகள் உள்ளன. இதேபோல, தட்டுகள் வட்ட வடிவமாக மட்டுமல்லாமல், சதுர வடிவத்திலும் தயாரித்து தரப்படுகிறது. ஸ்நாக்ஸ் வைக்கும் அளவுக்குச் சிறிய வடிவ தட்டுகளும் செய்யப்படுகிறது.
 இவற்றை தூக்கி எறிந்தாலும் மக்கி உரமாக மாறிவிடும். மேலும், பாக்கு மட்டை பொருள்கள் ஆடு, மாடுகளுக்குப் தீவனமாக இருக்கிறது. இவற்றை ஆடு, மாடுகள் விரும்பி சாப்பிடுகின்றன. இவை ரூ. 1 முதல் ரூ. 10 விலையில் கிடைக்கும். கோயில்களில் பிரசாதங்கள் வழங்குவதற்குத் தொன்னை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, கோயில்களில் தொன்னைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
 ஆனால், டீ கப், ஸ்பூன், உணவு பார்சல் பெட்டி குறித்து மக்களிடம் போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால், அதிக அளவில் விற்பனையாகவில்லை. இந்தப் பாக்கு மட்டைகள் பெரிய அளவில் இருக்க வேண்டும். இந்த வகை பாக்கு மட்டைகள் கர்நாடகத்தில்தான் கிடைக்கிறது. அங்கிருந்து வரவழைக்கப்பட்டு, தேவைப்படும் வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது.
 இதற்கான இயந்திரத்துக்கு வங்கிக் கடனுதவி மானியத்துடன் கிடைக்கிறது. இதை கணவன் - மனைவி இருவர் மட்டுமே ஒரு நாளைக்கு 750 உருப்படிகளைச் செய்ய முடியும். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், இதுகுறித்து மக்களுக்குத் தெரியவில்லை. எனவே, இதுபற்றி மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிற்சியும் அளிக்க முன்வர வேண்டும் என்றார் காலித் அகமது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com