மரச்செக்கு எண்ணெய்

மரச்செக்கு எண்ணெய்

பொதுவாக குடும்பத்தில் பெண்கள் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் பிரதானப் பொருள்களில் எண்ணெய் முக்கியத்துவம் வகிக்கிறது.

பொதுவாக குடும்பத்தில் பெண்கள் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் பிரதானப் பொருள்களில் எண்ணெய் முக்கியத்துவம் வகிக்கிறது.

 வறுக்க, பொறிக்க, தாளிக்க என விதவிதமாக எண்ணெய் வகைகளை பயன்படுத்தும் மக்கள் விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வகைகளைத் தேர்வு செய்து வந்தனர்.

 ஆனால், சமீப காலமாக ஆரோக்கியத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், பழமையான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு ஏற்றாற்போல அதிகளவிலான மரச் செக்கு எண்ணெய் கடைகள் உருவாகியுள்ளன.

 சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த மக்கள் பழமைக்கு மாறும் முயற்சிதான் இது. மரச்செக்குகளால் ஆட்டப்படும் எண்ணெய் வகைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். எண்ணெய் வித்துகளைக் கொண்டு அரைக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பொருள்கள் இயற்கையான முறையில் ஆட்டப்படுகின்றன.

 வாகை மரத்தில் செக்கு...
 கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வாகை மரத்தால் ஆன செக்கு பயன்படுத்தப்படுகிறது. பல மருத்துவக் குணங்களைக் கொண்ட இந்த வாகை மரமானது ஆரோக்கியத்தை வழங்கக் கூடியது என்பதால் இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ளது.

 இயற்கையான வாசனையுடன் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும் இந்த எண்ணெய் பலராலும் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிறது. நோய் வந்த பிறகு அவதிப்படுவதைக் காட்டிலும், அதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. அதை உணவின் மூலமாகவே கொண்டு செல்லும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
 
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காய், எள், நிலக்கடலை ஆகியன சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்துகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மவுசு கூடி வருகிறது.


 எண்ணெய் வித்து பயிர்களிலிருந்து, எண்ணெய் பிழிந்து எடுக்க, பல வகையான இயந்திரங்கள் இருந்தாலும், சமீப நாள்களாக மரச்செக்கில் பிழியப்படும் எண்ணெய் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 மரச்செக்கு எண்ணெய் உடலுக்கு உகந்தது என்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக உள்ளனர். ஊத்தங்கரை சேலம் மெயின்ரோடு காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் டி. எல்லப்பன் (மரச்செக்கு உரிமையாளர்) கூறியதாவது:

 சமீப காலமாக, இரும்பு செக்கில் எண்ணெய் பிழிவதை விட, மரச்செக்கு எண்ணெய் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகமாக உள்ளது.இரும்பு மரச்செக்கில், எண்ணெய் பிழியும் போது, சூடு அதிகரித்து, எண்ணெயிலுள்ள நுண்ணுயிர்கள், வைட்டமின்கள் பாதிக்கப்படுகின்றன.

 வாகை மரச்செக்கில் பிழியப்படும் எண்ணெய், சூடு அடைவதில்லை. இதனால், எண்ணெய்யில் இருக்கும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிவதில்லை. இயற்கை மணத்தோடு கிடைக்கிறது.
 இரும்பு செக்கில் எண்ணெய் எடுக்க, 30 நிமிடம் தேவைப்படும், எண்ணெய் அளவு கூடுதலாக கிடைக்கும். ஆனால், வாகை மரச்செக்கில் 20 கிலோ நிலக்கடலையைப் போட்டால் பிழிந்தெடுக்க, ஒரு மணி நேரம் ஆகிறது. 20 கிலோ கடலைக்கு 9 லிட்டர் எண்ணெய் கிடைக்கிறது. 13 கிலோ பிண்ணாக்கு கிடைக்கும்.

 ஒரு கிலோ கொப்பரையை பிழிந்தெடுத்தால், 580 மி. லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். அதேபோல, எள்ளில் இருந்து 350 - 380 மி.லிட்டர் எண்ணெய் கிடைக்கிறது.

 மரச்செக்கு பிண்ணாக்கில் கூடுதல் சத்துகள் இருப்பதால், கால்நடைகள் மட்டுமன்றி, பயிர் வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கியாக இருக்கிறது.
 மூட்டுவலி, உடலில் கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தவும், இயற்கை மருத்துவத்திலும் பிண்ணாக்கு பயன்பாடு உள்ளது. ஒரு கிலோ தேங்காய் பிழிவதற்கு ரூ. 15, எள் மற்றும் நிலக்கடலை பிழிவதற்கு தலா ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் மரச்செக்குக் கடலை எண்ணெய் ரூ. 170-க்கு விற்கிறோம். அரை லிட்டர், ஒரு லிட்டர் மற்றும் ஐந்து லிட்டர் அளவில் விற்பனை செய்கிறோம் என்றார் அவர்.

 - கே.பழனி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com