லாபம் தரும் ஊறுகாய் விற்பனை

உணவு பதப்படுத்தும் துறையில் எப்போதும் லாபகரமான தொழிலாக திகழ்கிறது ஊறுகாய் தயாரிப்பு.
லாபம் தரும் ஊறுகாய் விற்பனை

உணவு பதப்படுத்தும் துறையில் எப்போதும் லாபகரமான தொழிலாக திகழ்கிறது ஊறுகாய் தயாரிப்பு. கிராமங்களில் மிக எளிதாகக் கிடைக்கும் எலுமிச்சை, நார்த்தங்காய், தக்காளி, மாங்காய், நெல்லி, பூண்டு, மிளகாய் என அந்தந்த பருவத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்களை லாபகரமாக செய்யும் குடிசைத் தொழில் ஊறுகாய் தயாரிப்பு.


 தினுசு தினுசாக ஊறுகாய்கள் வந்தாலும், போட்டி மிகுந்த உலகில், சுவை, தரம் உள்ள ஊறுகாய்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரம், உப்பு போன்ற சுவை அதிகமாக இல்லாமல் மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்படும் ஊறுகாய்களுக்கு நகரம் மட்டுமல்ல, கிராமங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உமா சிவா ஊறுகாய் நிறுவனத்தின் உரிமையாளர் உமாராணி (60).


 15 ஆண்டுகளுக்கு முன்பு, பாரூர் அரசு பள்ளியில் பகுதி நேர தையல் ஆசிரியராக ரூ. 150 மாத ஊதியத்தில் பணியாற்றி வந்தார்.
 
 பணி நிரந்தரம் இல்லாததால், சொந்த காலில் நின்று தொழில் தொடங்க வேண்டும் என விரும்பினார். மாற்றுத்திறனாளியான இவர், தனது தாயிடமிருந்து சுவையான ஊறுகாய் தயாரிக்கும் தாரக மந்திரத்தைப் பயின்றார்.


 முதலில் தான் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஊறுகாய்களை விற்பனை செய்யத் தொடங்கினார். இவரது ஊறுகாயின் சுவையில் மயங்கிய மகளிர் குழு உறுப்பினர்கள், செவி மூலம் இவரது ஊறுகாயின் சிறப்பை மற்றவர்களுக்கு பரப்பினர். இத்தகைய நிலையில், மற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் இவரிடம் குறைந்த விலைக்கு ஊறுகாய்களை வாங்கி, விற்பனை செய்யத் தொடங்கினர். இதனால், சிறிதளவு லாபமும் சேமிப்பும் அதிகரித்தது.


 மகளிர் சுய உதவிக் குழுக்களை மட்டும் நம்பாமல், வங்கி, அரசு அலுவலகங்களில் ஊறுகாய்களை நேரடியாக விற்பனை செய்தார். இதனால், தனது சந்தையை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விரிவுபடுத்தினார்.

பலரும் சொல்வது போல் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையா? வழி இருக்கு.. வாருங்கள்!
 
 தற்போது, மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், தக்காளி, பூண்டு ஊறுகாய்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தாலும், மாங்காய் தொக்கு, வத்தல் குழம்பு, புளி குழம்புக்கான கலவைகளையும் தயாரித்து வருகிறார். போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்காய் அதிகமாக விளைகிறது. இதை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இவர், தேங்காயில் ஊறுகாய் தயாரித்தார். தேங்காய் ஊறுகாய், சுவை மிகுந்துள்ளதாக இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவிக்கிறார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த ஊறுகாயை விரும்பி வாங்குகின்றனர்.


 ஆண்டுக்கு எலுமிச்சை, நார்த்தங்காய் போன்ற காய்கள் இரண்டு பருவங்கள் கொண்டன. மாங்காய் ஆண்டுக்கு ஒரே ஒரு பருவம் கொண்டது. பருவத்துக்கு ஏற்ப கிடைக்கும் காய்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, உப்பு சேர்த்து சூரிய ஒளியைக் கொண்டு இயற்கையாகவே பதப்படுத்தி பேரல்களில் அடைத்து வைத்துக் கொண்டால், ஓராண்டு வரை பயன்படுத்த முடிகிறது. சந்தை தேவைக்கு ஏற்ப இதைப் பதப்படுத்தி காய்களை ஊறுகாய் தயாரிக்க பயன்படும் மசாலக் கலவையுடன் சேர்த்தால் சுவை மிக்க ஊறுகாய் தயார்.


 பதப்படுத்திய காய்களைக் கொண்டு, தேவையான கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், சமையல் எண்ணெய்யைக் கொண்டு சரியான அளவில் தயாரிக்கப்படுவதால் ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.


 இந்த ஊறுகாய் தயாரிக்கும் பணியில் உமாராணி மட்டுமல்லாமல், அவரது கணவர், மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மகன்கள் சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருமகள், உணவு பதப்படுத்தும் தொழிலில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளது இந்தத் தொழிலுக்கு உகந்ததாக உள்ளது.


 ஒவ்வொருவரும் தங்களுக்கான பணியை பங்கிட்டு கூட்டாகச் செயல்படுத்துவதால், குடிசைத் தொழிலாக இருந்தாலும் திட்டமிட்டு, சிறப்பாக செய்ய முடிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக் கிராமத்தில் தயாரிக்கப்படும் ஊறுகாய்கள் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, அரூர், தீர்த்தமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர், வேலூர் மாவட்டத்தில், வேலூர், திருப்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் விற்பனை செய்கின்றனர்.
 
 
 மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு போன்ற பல வகை ஊறுகாய்கள் பாக்கெட்டுகளில் 120 கிராம், 200 கிராம் அளவுகளில் சந்தையில் கிடைக்கின்றன. அதேபோல 200 கிராம், 500 கிராம், 1,000 கிராம், 5,000 கிராம் என்ற அளவுகளில் பாட்டில்களிலும் அடைத்து விற்பனை செய்கின்றனர். ஊறுகாய்கள் இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்படுகிறது.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள், விடுமுறைக்கு சொந்த கிராமத்துக்கு வரும்போது, ஆண்டுக்கு தேவையான ஊறுகாய்களை வாங்கிச் செல்வதும், சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற அயல்நாடுகளில் பணியாற்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விடுமுறைக்குச் சொந்த கிராமத்துக்கு வந்து பணிக்குச் செல்லும்போது, ஊறுகாய்களை ஒவ்வோர் ஆண்டும் மறக்காமல் வாங்கிச் செல்வதை மிகப் பெருமையாகக் கூறுகிறார்.
 சூரிய ஒளியைக் கொண்டு பதப்படுத்தப்படுவதாலும், சுவை, தரம் இவையே ஊறுகாய் தயாரிக்க தாரக மந்திரம் என்கிறார் அவர்.
 உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் ஊனம் இல்லாமல், பல்வேறு சவால்களை சந்தித்து கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் உமாராணி.
 
 -எஸ்.கே. ரவி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com