ஆரோக்கியத்தைக் காத்திட ஆட்டுக்கல்...!

ஆட்டுக் கல்லை சமையல் செய்யப் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தைக் காத்திடலாம் என்கின்றனர் ஆட்டுக்கல், அம்மிக்கல் உருவாக்கும் தொழிலாளர்கள்.
ஆரோக்கியத்தைக் காத்திட ஆட்டுக்கல்...!

ஆட்டுக் கல்லை சமையல் செய்யப் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தைக் காத்திடலாம் என்கின்றனர் ஆட்டுக்கல், அம்மிக்கல் உருவாக்கும் தொழிலாளர்கள்.

 விஞ்ஞானத்தின் அசுர வேக வளர்ச்சியால் நாம் நமது சமையலுக்குப் பயன்படுத்தி வந்த ஏராளமான பயன்பாட்டுப் பொருள்களை இப்போது மறந்து விட்டோம் அல்லது தவறி விட்டோம் எனலாம். முன்பெல்லாம், சமையலுக்கு மசாலா அரைப்பது முதல் பல்வேறு பணிகளுக்கு ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பயன்படுத்தி வந்தோம். இதன்மூலம் தயாரிக்கப்படும் உணவின் ருசி தனித்து காணப்படும்.

 ஆனால், நமது வாழ்க்கை முறை மெல்ல, மெல்ல மாறத் தொடங்கிய பின், அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவற்றை பயன்படுத்த நேரமின்மை காரணமாக மிக்ஸி, கிரைண்டர் என மின்சாரத்தால் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.



 இச் சாதனங்களால், நேர விரயம் ஆவதில்லை என்பது மற்றும் அவசரக் கதியில் காலையில் எழுந்து வீட்டில் உள்ளோர் அலுவலகம், பள்ளி, கல்லூரி ஆகியவற்றுக்குச் செல்ல இச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும் மிக்ஸி, கிரைண்டர் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவை தந்த சுவையைத் தருவதில்லை எனவும், மேலும், மின் சாதனங்களால் தயாரிக்கப்படும் உணவுகளில் உடல் நலக்குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது என தற்போது அஞ்சப்படுகிறது.

கொட்டை பாக்கு வாங்குகிறோமே.. அதை எப்படி தயாரிக்கிறார்கள்?

 மேலும், சமூக வலைதளங்களின் பயன்பாடு தற்போது வெகு மக்களிடையே பல்கி பெருகிவிட்டது. இவற்றின் வழியாக உடல் நலம் காக்க பாரம்பரிய எண்ணெய், பாரம்பரிய சமையல், சிறுதானியங்கள், ஆட்டுக்கல் என மெல்ல, மெல்ல மீண்டும் பழையவற்றின் மீதான நாட்டம் அனைவருக்கும் அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் பாரம்பரிய தொழில்களுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், கற்கள் மூலம் செதுக்கி வீட்டில் பயன்படுத்தி வந்த ஆட்டுக்கல், அம்மிக்கல், கேழ்வரகு அரைக்கும் கல் ஆகியவற்றுக்கும் தற்போது அனைத்து தரப்பினரிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

 தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் ஏ. செக்கராப்பட்டி, ஏரிக்கோடி, நத்தப்பட்டி, இண்டூர் மற்றும் தருமபுரி அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் இவற்றை தயாரித்து விற்கும் தொழிலில் குடும்பம், குடும்பமாக அத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை ஏராளமானோர் அந்த இடத்துக்கு வந்து ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, இண்டூர் அருகே ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியது:

 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் தருமபுரி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இத் தொழிலில் தங்களது குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது என்பதால் இதில் ஈடுபட்டு வருகிறோம். முன்பைக்காட்டிலும் தற்போது ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 இதைத் தயாரிக்க, இண்டூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலத்தில் உள்ள கற்களை வெட்டி எடுத்து வருகிறோம். பின்னர், அந்தக் கல்லை உளியால் செதுக்கி இரண்டு அல்லது மூன்று நாள்களில் ஆட்டுக்கல்லை உருவாக்குகிறோம்.

 அதேபோல அம்மிக்கல், கேழ்வரகு அரைக்கும் கல், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நசுக்கப் பயன்படுத்தும் சிறிய அளவிலான உரல் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். இதில், அம்மிக் கல் ரூ. 1,000 வரையும், ஆட்டுக்கல் ரூ. 500 வரையும், கேழ்வரகு அரைக்கும் கல் ரூ. 800 வரையும் விற்பனை செய்து வருகிறோம். இவற்றை வாகனங்களில் வந்து பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். இத் தொழிலை மெருகூட்டவும், எங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிடவும், அரசுச் சலுகைகள் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com