ஆலங்குளம் வளர்ச்சியில் சுண்ணாம்புத்தூள் ஆலைகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகராக விளங்கும் ஆலங்குளம், சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கும் தாய் நகராக திகழ்கிறது
ஆலங்குளம் வளர்ச்சியில் சுண்ணாம்புத்தூள் ஆலைகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகராக விளங்கும் ஆலங்குளம், சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கும் தாய் நகராக திகழ்கிறது. ஆலங்குளம் வட்டாரம் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளது. மேலும் பீடித் தொழில், அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள், காய்கனி வியாபாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 இதற்கு அடுத்தபடியாக, சலவை சோப், பற்பசை, முகப்பூச்சு பவுடர் போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மூலப் பொருளான சுண்ணாம்புத் தூள் அரைக்கும் ஆலை தற்போது ஆலங்குளம் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது.
 மானூர் வட்டம் ரஸ்தா கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் இருந்து பெறப்படும் சுண்ணாம்புக் கற்கள் இயந்திரங்களில் போடப்பட்டு தூளாக்கப்படுகின்றன. பின்னர் அவை தரம் பிரிக்கப்பட்டு தரத்திற்கேற்ப மாத்திரைகள் முதல் கோழித் தீவனம் வரை பல்வேறு தேவைகளுக்கு அனுப்பப்படுகிறது.
 திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைக்கும் சுண்ணாம்பில் கால்ஷியம் சத்து அதிகம். சேலம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கிடைக்கும் சுண்ணாம்பில் மக்னீஷியம் சத்து அதிகம்.
 பெயின்ட், சலவை சோப், கிளீனிங் பவுடர், டைல்ஸ், ரப்பர் ஷீட், ரப்பர் பேண்ட், ஹெல்மெட், முகப்பூச்சு பவுடர், பிளீச்சிங் பவுடர், டிஸ்டம்பர், வெள்ளை சிமென்ட், கோழித் தீவனம், கோலப்பொடி என 20-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிப்பிற்கு சுண்ணாம்புத் தூள் மூலப் பொருளாக பயன்படுகிறது. இவற்றில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரம் வாரியாக தூள் செய்யப்பட்டு 50 கிலோ பைகளில் வழங்கப்படுகிறது. பொதுவாக ஆலங்குளம் பகுதியில் அரைக்கப்படும் சுண்ணாம்புத்தூள் முதல் தர சலவை சோப் தயாரிக்கப்படுவதற்கே அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.
 இதுதொடர்பாக ஆலங்குளம் நெட்டூர் சாலையில் சுண்ணாம்பு அரவை ஆலை வைத்திருக்கும் ராமநாதன் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் அருகேயுள்ள ரஸ்தாவில் 150-க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. அடுத்தபடியாக ஆலங்குளத்தில் சுமார் 15 ஆலைகள் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 10 டன் கற்கள் வரை அரைக்கப்படுகின்றன. தேவைகள் அதிகமாக இருப்பினும் போதிய அளவில் கற்கள் உடனடியாக கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. சுண்ணாம்பில் 1 சதவீதம் கூட கழிவு கிடையாது என்பது கூடுதல் பலன் என்றார் அவர்.
 -ரா. சாலமோன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com