நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்கும் தீப்பெட்டித் தொழில்

என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து, எரிவாயு அடுப்பு, மின்சார அடுப்பு என வந்து விட்டாலும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் கிராமப் புறங்களில் தீப்பெட்டிகள் பயன்பாடு தற்போதும்
நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்கும் தீப்பெட்டித் தொழில்

என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து, எரிவாயு அடுப்பு, மின்சார அடுப்பு என வந்து விட்டாலும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் கிராமப் புறங்களில் தீப்பெட்டிகள் பயன்பாடு தற்போதும் இன்றியமையாததாகத் தான் உள்ளது.
 தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், இளையரசனேந்தல் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூரிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் குருவிகுளம், சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளிலும் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழில் நடைபெற்று வருகிறது.
 தீப்பெட்டித் தயாரிப்பில் கீழ்க்கண்ட வேலைப் பிரிவுகள் உள்ளன.
 1. குச்சி அடுக்குதல், 2. மருந்து முக்குதல், 3. பெட்டியில் தீக்குச்சிகளை அடைத்தல், 4. பத்து தீப்பெட்டிகள் கொண்ட யூனிட் பேக்கிங் செய்தல், 5. அறுநூறு தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் போடுதல் (பேக்கிங் செய்தல்).
 தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் முன்பு வடமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மாதம் பல லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவணி கிடைத்து வந்தது. ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை 14 சதவீதம் அளித்து வந்ததை ஒன்றரை சதவீதமாக குறைத்ததையடுத்து, வெளிநாடுகளுக்கு
 ஏற்றுமதி செய்யப்படுவது கணிசமாக குறைந்தது. ஊக்கத் தொகை வழங்குவதை அரசு அதிகரிப்பதன் மூலம் தீப்பெட்டித் தொழில் வளமடைய வாய்ப்பு ஏற்படும்.
 பகுதி இயந்திர தீப்பெட்டித் தயாரிப்புக்கு சீதோஷ்ண நிலை தேவைப்படாததால் தில்லி, ஆக்ரா, இந்தூர் போன்ற இடங்களில் தீப்பெட்டி கொள்முதல் செய்த வடமாநில வர்த்தகர்கள் தற்போது தங்களது இடங்களிலேயே தீப்பெட்டித் தொழிலை தொடங்கிவிட்டனர்.
 உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் தீப்பெட்டித் தயாரிப்புக்குத் தேவையான மரங்கள் குறைந்த விலையிலும், வேலையாள்கள் குறைந்த ஊதியத்திலும் கிடைப்பதால் தீப்பெட்டியின் அடக்க விலை அங்கு குறைகிறது. மேலும், இங்கிருந்து அனுப்பப்படும் போக்குவரத்து செலவும் இல்லை. இதனால் அந்த மாநிலங்களில் குறைந்த விலையில் தீப்பெட்டி விற்கும் நிலை உள்ளது.
 இதுபோன்ற நிலையால் தென் மாவட்டங்களின் பிரதான தீப்பெட்டித் தொழில் வடமாநிலங்களை நோக்கி சுமார் 30 சதவீதம் சென்றுவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த இத்தொழில் தற்போது நலிவடைந்து இரண்டே முக்கால் லட்சத்துக்கும் குறைவான தொழிலாளர்களுக்கே வேலை கொடுக்கும் தொழிலாக மாறிவிட்டது.
 அனைத்துப் பொருள்களிலுமே நவீன யுக்திகள் தோன்றுகின்றன. ஆனால் தீப்பெட்டிகளில் நவீன தீப்பெட்டி என்பது கிடையாது. மக்கள் தீப்பெட்டியைப் பயன்படுத்துவதற்கு பதிலாக லைட்டர், எரிவாயுஅடுப்பு, மின்சார அடுப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் தீப்பெட்டியின் தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் முற்றிலுமாக பயன்பாடு இல்லை என்று சொல்ல முடியாது. நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் கிராமப் புறங்களில் தீப்பெட்டிகள் பயன்பாடு தற்போதும் அதிகளவில் இருக்கத்தான் செய்கிறது.
 இத்தொழிலை சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கை நிலையைக் கருத்தில் கொண்டு, தொழிலை அழிவில் இருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டித் தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 - ரா.சரவணமுத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com